மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 5 ஜூலை 2020

வேல்முருகன் திடீர் டெல்லி பயணம்!

வேல்முருகன் திடீர் டெல்லி பயணம்!

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் எந்தவித அறிவிப்புமின்றி திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக, பாஜக கூட்டணியில் பாமக இடம்பெற்றுள்ள நிலையில் பாமகவுக்கு எதிரான பிரச்சாரக் களத்தில் வன்னியர் சங்கங்களுடன் இணைந்து கைகோர்த்துள்ளார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக.ஸ்டாலினை மார்ச் 16ஆம் தேதி சந்தித்து திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவும் தெரிவித்துள்ளார். இதன்பிறகு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 10) இரவு வேல்முருகன் திடீரென டெல்லி சென்றுள்ளார். திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் வேல்முருகன் டெல்லி சென்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அவர் எதற்காக டெல்லி சென்றுள்ளார், யாரை பார்க்க டெல்லி சென்றுள்ளார் என்பது ரகசியமாகவே உள்ளது.

இதுபற்றி அவரது கட்சி அலுவலக வட்டாரத்தில் விசாரித்த போது, “நேற்று இரவு திடீரென தலைவர் டெல்லி புறப்பட்டுச் சென்றது உண்மைதான். ஆனால் அவரது பயணத்தின் நோக்கம் என்னவென்று கட்சியில் யாருக்கும் தெரியாது. அரசியல் காரணங்களாக இருந்தால் அவரே சொல்லியிருப்பார். எனவே தனிப்பட்ட முறையிலான பயணம் என்றே தெரிகிறது. அதேநேரம் வேல்முருகன் இன்று சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது அவரே பத்திரிகையாளர்களிடம் பயணத்தைப் பற்றி விளக்கலாம்” என்கிறார்கள்.

வியாழன், 11 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon