மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 25 அக் 2020

இளைய நிலா: எழுதித்தான் பாருங்களேன்!

இளைய நிலா: எழுதித்தான் பாருங்களேன்!

இளைஞர்களின் உறவுச் சிக்கல்களைத் தீர்க்க என்ன வழி? பகுதி – 38

ஆசிஃபா

சில நாட்களுக்கு முன்பு, கடுமையான குழப்பத்திலும் விரக்தியிலும் இருந்தேன். அப்போது, 2016இல் எழுதிய என்னுடைய டயரி கண்ணில் பட்டது. சரி, பார்ப்போம் என்று பார்த்தேன். அதில் இருந்து நான் உணர்ந்த சில விஷயங்கள்:

§ ஒவ்வொரு நாளும் நாம் முந்தைய தினத்தைவிட matured ஆகிறோம்

§ நம் வாழ்க்கை மாறிக்கொண்டே இருக்கிறது, அதோடு நம் பார்வையும் (perception).

§ ஒவ்வொரு கட்டத்திலும் நாம் ஏதாவது ஒரு சிக்கலில்தான் இருக்கிறோம். இப்போது அதைத் திரும்பிப் பார்த்தால், பெரும்பாலும், இதெல்லாம் ஒரு பிரச்சினையா என்று தோன்றுகிறது. நம்முடைய இன்றைய பிரச்சினையும் அப்படி மாறக்கூடியதுதான்

§ நம் கடந்த காலம், நிகழ்காலத்தில் தாக்கம் ஏற்படுத்துகிறது; எனவே, இன்றைய நம் முடிவுகள் நாளையை பாதிக்கும் - அவை நல்லவையோ தீயவையோ

§ எந்த நொடியும் நம் வாழ்க்கையைத் தீர்மானிப்பது நாம்தான். பிறர் என்ன செய்தாலும், சொன்னாலும், அதை நாம் பார்க்கும் விதத்தில் அனைத்தும் மாறுபடுகின்றன

§ கடுகளவு பிரச்சினையை நாம் கண்ணுக்கு அருகில் வைத்துப் பார்த்து பெரிதாக்குகிறோம்

இதுதான் ஓரளவு என்னால் தொகுக்க முடிந்தது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம், அன்றைய என் மனநிலையில் இது பெரிய ஆறுதலாக இருந்தது. சில நாட்கள் உண்மையிலேயே வாழ்வின் மிக மோசமானதாக இருந்திருக்கும். அதையும் நாம் கடந்து இன்று இங்கு இருக்கிறோம் என்பதை நாம் அடிக்கடி நினைவுபடுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது.

நாம் அடிக்கடி motivationஆக நமக்குச் சொல்லிக்கொள்பவை எல்லாமே, நம் டயரியில் அனுபவமாகப் பதிவாகும். அதைச் சில ஆண்டுகள் கழித்து நாம் வாசிக்கும்போது, நம்மை அவை வலிமையாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இன்றைய நம் அவசர உலகில், மொபைலில் நோட்ஸ் செயலியில் பலவற்றைக் குறித்துவைக்க வசதி இருக்கிறது. கையில் டயரியைக் கொண்டுசெல்ல வேண்டிய அவசியமில்லை, எழுத ஒரு இடம் பார்க்க வேண்டிய அவசியமில்லை. எங்கு இருந்தாலும், எப்போது வேண்டுமானாலும், நாம் எழுதலாம்.

2015 என்று நினைக்கிறேன். இதுவரையிலான என் வாழ்வின் சிறப்பானதும் மோசமானதுமான ஆண்டாக அதை நான் சொல்வேன். அப்போது என் நண்பன் நரேஷ் என்னிடம் சொன்னது இதுதான்: “டெய்லி டயரி எழுது, அஸி. சம்பவங்கள எழுதாத, அதுல இருந்து உனக்குத் தெரிஞ்ச விஷயம், நீ படிச்ச விஷயம், உன்னைய கஷ்டப்படுத்துன விஷயத்த எழுது. எழுதி எனக்கு அனுப்பு”.

அப்போது முதல் நான் அதைச் செய்துவருகிறேன். ஒரு நாளின் stress busterஆகவும், அதே வேளையில், சில ஆண்டுகளில் நம் வாழ்க்கையின் உந்துதலாகவும் அவை இருக்கின்றன. நீங்களும் ட்ரை பண்ணி பாருங்களேன்!

பேசித்தான் ஆக வேண்டும்!

வியாழன், 11 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon