மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 5 ஜூலை 2020

சமமற்ற குடும்பக் கட்டுப்பாடு: பாலின இடைவெளியின் வெளிப்பாடு!

சமமற்ற குடும்பக் கட்டுப்பாடு: பாலின இடைவெளியின் வெளிப்பாடு!

தமிழகத்தில் மக்கள் தொகை பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும் ஆண்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்வதில் பெருமளவு பாகுபாடு நீடிக்கிறது என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

1970களின் பிற்பாதியில் இருந்தே தென்மாநிலங்கள் தங்களுடைய மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு, அதில் பெரும் வெற்றியையும் பெற்றுள்ளன. குடும்பக் கட்டுப்பாட்டின் பயன்கள் குறித்து அரசு மேற்கொண்ட தொடர் பரப்புரைகள், பெண்கல்வி போன்ற முன்னேற்றங்களால் அந்த இலக்கை தென்மாநிலங்கள் அடைய முடிந்தது.

இதன் விளைவாக, இங்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் வயதில் (15 வயது-44 வயது) இருக்கும் பெண்களின் கருவுறுதல் விகிதம் (Fertility rate) 2.1க்கும் குறைவாக உள்ளது. தமிழ்நாட்டில் இந்த விகிதம் 1.6 ஆக இருக்கிறது.

ஒரு இலக்கை அடைவது எவ்வளவு முக்கியமோ, அந்த இலக்கை எவ்வாறு அடைகிறோம் என்பதும் அதே அளவிற்கு முக்கியம். மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் சிறிய குடும்பங்களை நோக்கி நகர வேண்டும். அந்த பொறுப்பை முழுவதுமாக பெண்கள்தான் சுமந்தார்கள் என்றால் அது மிகையாக இருக்காது.

பொருளாதார வளர்ச்சி, நகரமயமாதல், பெண்களுக்கும் அதிகாரத்தில் பங்களித்தல் என பல நேர்மறையான கலாச்சார மாற்றங்கள் ஏற்பட்டுள்ளபோதும், குடும்பக் கட்டுப்பாட்டின் பொறுப்பை ஏற்க பெரும்பான்மையான ஆண்கள் மறுக்கிறார்கள் என்றே புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் நவீன கருத்தடைக் கருவிகள்/முறைகளின் பயன்பாடு 2012-13இல் 60 விழுக்காடாக இருந்ததாகவும், அது 2015-16இல் 53 விழுக்காடாகக் குறைந்துள்ளதாகவும் NFHS எனப்படும் தேசிய குடும்ப சுகாதார ஆய்வின் சமீபத்திய ஆய்வுச்சுற்று தெரிவிக்கிறது. மேலும், நவீன கருத்தடை முறைகளில், பெண்கள் செய்துகொள்ளும் குடும்பக் கட்டுப்பாடு அறுவைசிகிச்சையே 93 விழுக்காடு பங்குவகிக்கிறது. இந்த தகவல், மேற்கூறிய வாதத்தை ஊர்ஜிதப் படுத்துகிறது.

15-49 வயது ஆண்களில் 33 விழுக்காடு (மூன்றில் ஒரு பங்கு) ஆண்கள், குடும்பக்கட்டுப்பாடு என்பது பெண்களின் பொறுப்பு, ஆண்கள் அதைப்பற்றி கவலைப்படத் தேவையில்லை என்றே கருதுகின்றனர். நம்முடைய சமுதாயத்தில் ஆணாதிக்க மனப்பான்மையும், பாலின இடைவெளியும் (Gender Gap) பரவலாக இருக்கிறது என்பதற்கான குறியீடாக இதை நாம் வைத்துக்கொள்ளலாம். ‘இந்த நிலை என்று மாறுமோ?’ எனும் கேள்வியே கேட்கத் தோன்றுகிறது.

வியாழன், 11 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon