மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 5 ஜூலை 2020

பள்ளி வாகனங்களில் குழந்தைகள் பாதுகாப்பு: அதிகாரிக்கு உத்தரவு!

பள்ளி வாகனங்களில் குழந்தைகள் பாதுகாப்பு: அதிகாரிக்கு உத்தரவு!

பள்ளி வாகனங்களில் குழந்தைகள் பாதுகாப்பாகச் செல்வதை உறுதி செய்வதற்காகப் பள்ளிகளில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து பள்ளிக்கல்வித் துறை பதிலளிக்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

திண்டிவனத்தைச் சேர்ந்த அஞ்சலி தேவி என்பவர் பள்ளி வாகனங்களில் குழந்தைகளை இறக்கிவிடுவதற்கான உதவியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். “என்னுடைய மகள் யுவஸ்ரீ திண்டிவனத்தில் உள்ள எஸ்.கே.டி நர்சரி அண்ட் பிரைமரி பள்ளியில் எல்கேஜி படித்து வந்தார். 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பள்ளி வாகனத்தில் வந்து வீட்டின் அருகில் இறங்கியபோது, வாகனத்தைப் பின்னால் நகர்த்த முயற்சித்தார் ஓட்டுநர். இதில், பின்னால் நின்றுகொண்டிருந்த குழந்தை வண்டியில் சிக்கி உயிரிழந்தது. இதற்கு முக்கியக் காரணம் அந்த பள்ளி வாகனத்தில் குழந்தைகளை இறக்கி விடுவதற்கான உதவியாளர் யாரும் இல்லை என்பது தான். பள்ளி நிர்வாகத்தின் கவனக்குறைவு காரணமாகவே, எனது மகள் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அந்த பள்ளியின் தாளாளர் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் பள்ளி வாகனத்தில் ஒட்டுநருடன் உதவியாளர் ஒருவர் இருக்க வேண்டும். தமிழக மோட்டார் வாகனச் சட்டப்படி அனைத்து பள்ளி வாகனங்களிலும் நடத்துநர் இருக்க வேண்டும் என விதி உள்ளது. ஆனால் இதைப் பள்ளி நிர்வாகம் பின்பற்றவில்லை. என் மகள் உயிரிழப்புக்குக் காரணமான பள்ளி நிர்வாகம் 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். அந்த பள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அஞ்சலி தேவி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இன்று (ஏப்ரல் 11) இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியாநாரயணன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ், “அனைத்துப் பள்ளிகளிலும் பள்ளிப் பேருந்துகளைக் கண்காணிக்க குழு அமைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் பல பள்ளிகளில் இந்த குழு அமைக்கப்படவில்லை” என்று வாதிட்டார்.

இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதி, தமிழகத் தொடக்கக் கல்வி இணை இயக்குனரைத் தாமாக முன்வந்து இந்த வழக்கில் இணைத்தார். “பள்ளி வாகனங்களில் குழந்தைகள் பாதுகாப்பாகச் செல்வதை உறுதி செய்வதற்காக பள்ளிகளில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதா? அதன் நிலை என்ன என்பது குறித்து வரும் ஏப்ரல் 29ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.

வியாழன், 11 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon