மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 5 ஜூலை 2020

ஓசூர்: பாலகிருஷ்ணா ரெட்டி பிரச்சாரம் செய்ய அனுமதி!

ஓசூர்: பாலகிருஷ்ணா ரெட்டி பிரச்சாரம் செய்ய அனுமதி!

ஓசூர் இடைத்தேர்தலில் மனைவிக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி பிரச்சாரம் செய்ய தடை கேட்டு, அத்தொகுதியில் அ.ம.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் புகழேந்தி தொடர்ந்த வழக்கை, சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஓசூர் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவி ஜோதி போட்டியிடுகிறார். கடந்த 1998 ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கள்ளச் சாராய விற்பனையை தடுக்க கோரி நடைபெற்ற போராட்டத்தில் காவல் துறையினர் வாகனங்கள் மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

பாலகிருஷ்ணா ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனை தற்போது உச்ச நீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், ஓசூர் தொகுதியில் போட்டியிடுகிற அவரது மனைவி ஜோதிக்கு ஆதரவாக பாலகிருஷ்ண ரெட்டி பிரச்சாரத்தில் ஈடுபட தடை கேட்டு அமமுக வேட்பாளர் புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். மனு நேற்று நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனைவிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யும் பாலகிருஷ்ண ரெட்டி தன்னை வேட்பாளர் போல காட்டி கொள்வதாகவும், இதன் காரணமாக வேட்பாளர் யார் என்பதில் மக்களிடையே குழப்பம் ஏற்படுவதாகவும் மனுதாரர் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.

வழக்கின் வாதங்கள் நேற்று (ஏப்ரல் 10) முடிவடைந்த நிலையில், மனைவிக்காக கணவர் பிரச்சாரம் செய்வது எந்த வகையில் குற்றமாகும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், தேர்தல் நடத்தை விதிகளோ, மக்கள் பிரதிநிதித்துவ சட்டமோ ஒருவர் பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதிக்கவில்லை என சுட்டிக்காட்டி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

வியாழன், 11 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon