மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 ஏப் 2019

வாக்குச்சாவடிக்குள் செல்போன் அனுமதிக்கப்படாது: சத்யபிரதா சாஹு

வாக்குச்சாவடிக்குள் செல்போன் அனுமதிக்கப்படாது: சத்யபிரதா சாஹு

தமிழகத்திலுள்ள 67,720 வாக்குச்சாவடிகளில் 7,780களில் பதற்ற நிலை இருப்பதாகத் தெரிவித்துள்ளார் தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஏப்ரல் 11) தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் பங்கேற்கும் வாக்காளர்கள் எண்ணிக்கை 5 கோடியே 98 லட்சத்து 69 ஆயிரத்து 758 பேர் என்று தெரிவித்தார். அதில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 2 கோடியே 95 லட்சத்து 94 ஆயிரத்து 923 பேர் என்றும், பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 3 கோடியே 2 லட்சத்து 69ஆயிரத்து 45 பேர் என்றும், மூன்றாம் பாலினத்தவர்கள் எண்ணிக்கை 5,790 என்றும் கூறினார்.

வாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்று தெரிவித்த சத்யபிரதா சாஹு, வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்படுகிறதா என்று தமிழகம் முழுவதும் தீவிரமாகக் கண்காணிப்பு நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார். “அதிகக் கண்காணிப்பினால்தான் அதிகமாக தமிழகத்தில் பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க யாராவது முயற்சிகள் எடுத்தால் பொதுமக்கள் உடனடியாகப் புகார் பதிவு செய்ய வேண்டும். வருமான வரித் துறை சோதனை எந்த உள்நோக்கத்தோடும் நடத்தப்படவில்லை. வேலூர் விவகாரம் தொடர்பாக மாவட்டத் தேர்தல் அதிகாரி மற்றும் வருமான வரித் துறையினரிடம் அறிக்கை பெற்றுள்ளேன். அதன் அடிப்படையில் விரிவான அறிக்கையைத் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு இன்று அனுப்பவுள்ளேன்” என்று கூறினார் சத்யபிரதா சாஹு.

ஒப்பந்ததாரர் சபேசனிடம் இருந்து கைப்பற்றிய பணம் தொடர்பாக வருமான வரித் துறை தொடர் நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டார். பாமகவைச் சேர்ந்த அன்புமணி தனது பிரச்சாரத்தின்போது வாக்குச்சாவடியைக் கைப்பற்றுவது தொடர்பாகப் பேசியது குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

“தமிழகம் முழுவதும் 127.66 கோடி ரூபாய் பணம் இதுவரை கைப்பற்றப்பட்டுள்ளது. 62.24 கோடி பணம் உரிய ஆவணங்களைச் சரிபார்த்தபின் திரும்ப அளிக்கப்பட்டுள்ளது. 37.78 கோடி ரூபாய் வருமான வரித் துறை மூலம் கைப்பற்றப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 3.48 கோடி கைப்பற்றப்பட்டுள்ளது. 989 கிலோ தங்கம், 594 கிலோ வெள்ளி கைப்பற்றப்பட்டுள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு 284 கோடி” என்றார்.

இந்த தேர்தலில் 1லட்சத்து 50 ஆயிரத்து 302 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ளன என்றும், வாக்குப் பதிவு செய்ததை உறுதிப்படுத்தும் விவிபேட் 94,653 உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

“கடந்த 2 மாதங்களில் மட்டும் 14 லட்சத்து 10 ஆயிரத்து 745 புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. வாக்காளர் அடையாள அட்டையைத் தவிர ஆதார் அட்டை உள்ளிட்ட 11 அடையாள அட்டையைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம். நேற்று வரை 19 லட்சத்து 17 ஆயிரத்து 471 வாக்காளர் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. நாடாளுமன்றத் தேர்தலில் 845 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர், இடைத்தேர்தலில் 269 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

தமிழ்நாட்டில் 67,720 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 7,780 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குசாவடிகளாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 4 லட்சத்து 8 ஆயிரத்து 973 தபால் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 8,869 காவலர்கள் தங்கள் வாக்கினைப் பதிவு செய்துள்ளனர். அதேபோல் 11,853 தேர்தல் பணியாளர்களும் வாக்குகள் அளித்துள்ளனர்.

சிவிஜில் செயலி மூலம் இதுவரை 2,085 புகார்கள் பெறப்பட்டுள்ளன. அதில் 899 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 50 புகார்கள் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன. மீதம் உள்ள புகார்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. 1950 என்ற எண் மூலம் இதுவரை 1,48,788 அழைப்புகள் வந்துள்ளன. அதில் 1,46,001 அழைப்புகளுக்குப் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 4,185 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 93 முதல் தகவல் அறிக்கைகள் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார் சத்யபிரதா சாஹு.

இந்த பேட்டியின்போது, சைகை மொழியில் அவரது பேச்சை ஒருவர் செய்தியாளர்களுக்கு மொழிபெயர்த்தார். சில செய்தித் தொலைக்காட்சிகளில் மட்டும் பின்பற்றப்படும் இந்த முறையானது, தற்போது அரசு அலுவலகச் செயல்பாடுகளிலும் கலந்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

சென்னை - வேலூர் இடையே முன்பதிவில்லாத ரயில்!

3 நிமிட வாசிப்பு

சென்னை - வேலூர் இடையே முன்பதிவில்லாத ரயில்!

ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி!

4 நிமிட வாசிப்பு

ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி!

கோவிட் காலத்தில் 81% அதிகரித்த தங்க நகைக்கடன்!

6 நிமிட வாசிப்பு

கோவிட் காலத்தில் 81% அதிகரித்த தங்க நகைக்கடன்!

வியாழன் 11 ஏப் 2019