மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 5 ஜூலை 2020

தேர்தல் ஆணையம் மீது புகாரளிப்போம்: காதர் முகைதீன்

தேர்தல் ஆணையம் மீது புகாரளிப்போம்: காதர் முகைதீன்

தேர்தல் ஆணையத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சி தலைவர்களிடம் கையெழுத்து வாங்கி குடியரசுத் தலைவரிடம் அளிக்கவுள்ளதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் காதர் முகைதீன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் இன்று (ஏப்ரல் 11) அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நரேந்திர மோடி அரசு எல்லா விதத்திலும் தோல்வியுற்ற அரசு. 2014ஆம் ஆண்டில் என்ன வாக்குறுதியை அளித்தார்களோ, அதே வாக்குறுதியைத்தான் தற்போது மீண்டும் அளித்துள்ளார்கள். பாஜக அரசு மக்களை ஏமாற்றியுள்ளது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வோம் என தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. ரஃபேல் விவகாரத்தில் மறுசீராய்வு மனுவில் அளிக்கப்பட்ட ஆவணங்களை ஏற்கக்கூடாது என்ற மத்திய அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்திருப்பது பாஜகவுக்கு ஏற்பட்ட பின்னடைவு” என்றார்.

முத்தலாக் தடை செல்லாது என உச்ச நீதிமன்றம் கூறிய பிறகும், அதை நிறைவேற்றுவோம் என தேர்தல் அறிக்கையில் பாஜக கூறியுள்ளது என்ற அவர், “எந்த புனித நூலையும் மாற்றும் அதிகாரம் யாருக்கும் இல்லை. இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமை என்ற கோட்பாட்டை பாஜக சிதைக்கப் பார்க்கிறது . வைரஸ் போல இந்த நாட்டை பாஜக சிதைக்கிறது. வட இந்தியாவிலிருந்த வைரஸ் இப்போது தமிழ்நாட்டுக்குள்ளும் வந்து கொண்டிருக்கிறது” என்றார்.

தமிழ்நாட்டில் சிறுபான்மை, பெரும்பான்மை என்ற வேறுபாடு கிடையாது என்ற அவர், “தமிழக மக்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்குத்தான் வாக்களிப்பார்கள். தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும், 22 தொகுதி சட்ட மன்ற இடைத்தேர்தலிலும் வெற்றி பெற்று மத்தியில் ராகுல் காந்தி பிரதமராகவும், தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வராகவும் பொறுப்பேற்பார்கள். பழைய நல்லிணக்க இந்தியா மீண்டும் உருவாகும்.

சிறுபான்மை வாக்குகள் சிதறினால் அது பாஜகவுக்குத்தான் சாதகமாக இருக்கும். பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதுதான் இந்திய மக்களின் எண்ணமாக உள்ளது. தேர்தல் ஆணையம் தொடர்ந்து ஒருசார்பாக செயல்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கையெழுத்து வாங்கி குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்கவுள்ளோம்” என்றார்.

வியாழன், 11 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon