மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 11 ஏப் 2019

தினகரனுக்கு பாஜக தூதா? பொன்.ராதாகிருஷ்ணன் பதில்!

தினகரனுக்கு பாஜக தூதா? பொன்.ராதாகிருஷ்ணன் பதில்!

பலவீனமான வேட்பாளரை நிறுத்த பாஜக தூது அனுப்பியதாக தினகரன் தெரிவித்த நிலையில், இதுதொடர்பாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார்.

கன்னியாகுமரி தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும், காங்கிரஸ் சார்பில் ஹெச்.வசந்தகுமாரும், அமமுக சார்பில் லட்சுமணனும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று பேட்டியளித்த தினகரன், “பாஜகவைச் சேர்ந்த கருப்பு முருகானந்தம் என்பவர் என் உதவியாளரைத் தொடர்புகொண்டு என்னிடம் பொன்.ராதாகிருஷ்ணன் பேச விரும்புவதாகக் கூறினார். மேலும் சிலர் மூலமாக கன்னியாகுமரியில் பலகீனமான வேட்பாளரை நிறுத்தச் சொல்லி பாஜக தூதுவிட்டது” என்று தெரிவித்திருந்தார். பொன்.ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளரான கருப்பு முருகானந்தம், தன்னிடம் தூதுவந்ததாக தினகரன் குற்றம்சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து பொன். ராதாகிருஷ்ணன் தேர்தல் போட்டியிலிருந்து வாபஸ் பெற வேண்டும் என்று காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் இன்று (ஏப்ரல் 11) செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், இதுதொடர்பான கேள்விக்கு, “ஆயிரம் பொய்யை சொல்லி திருமணத்தை நடத்துவது போல, 10 ஆயிரம் பொய்யைச் சொல்லி தேர்தலை சந்திக்கலாம் என்று தினகரன் நினைக்கிறார் . தினகரனும், கருப்பு முருகானந்தமும் நல்ல நண்பர்கள். தேர்தல் குறித்து ஒருவருக்கொருவர் தமாஷாகப் பேசும்போது இதுபற்றி பேசியிருக்கலாம். ஆனால் கருப்பு முருகானந்தம் பேசினாரா இல்லையா என்று எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்து அவர் பேசியதாக என்னிடம் சொல்லவில்லை” என்று விளக்கம் அளித்தார்.

தினகரனின் குற்றச்சாட்டு ஒரு நாள் செய்திக்கு பயன்படலாமே தவிர, அதனால் தேர்தலில் எவ்வித தாக்கமும் ஏற்படப் போவதில்லை என்ற அவர், “கன்னியாகுமரி மாவட்ட அரசியல் தெரியாதவர்கள்தான் பலவீனமான வேட்பாளரை நிறுத்தச் சொல்லுவர். என்னிடம் கேட்டிருந்தால் பலமான வேட்பாளரையே நிறுத்தச் சொல்லியிருப்பேன். அப்படி செய்தால்தான் பாஜகவுக்கு நன்றாக இருக்கும்” என்றும் தெரிவித்தார். தனிப்பட்ட விவகாரங்களை வெளியில் சொல்வது நாகரீகமானது அல்ல என்றும் தினகரனுக்கு அறிவுரை வழங்கினார்.

சென்னை - வேலூர் இடையே முன்பதிவில்லாத ரயில்!

3 நிமிட வாசிப்பு

சென்னை - வேலூர் இடையே முன்பதிவில்லாத ரயில்!

ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி!

4 நிமிட வாசிப்பு

ஆக்கிரமிப்புகளை இடிக்கக் கூடாது: சென்னை மாநகராட்சி!

கோவிட் காலத்தில் 81% அதிகரித்த தங்க நகைக்கடன்!

6 நிமிட வாசிப்பு

கோவிட் காலத்தில் 81% அதிகரித்த தங்க நகைக்கடன்!

வியாழன் 11 ஏப் 2019