மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 5 ஜூலை 2020

ஸ்டாலினுக்கு எடப்பாடியின் கேள்விகள்!

ஸ்டாலினுக்கு எடப்பாடியின் கேள்விகள்!

சேலம் மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக சரவணன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவட்டிப்பட்டியில் இன்று பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய பழனிசாமி, “அதிமுக தலைவர்களையும், கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் விமர்சித்துவரும் ஸ்டாலினின் போக்கு சரியில்லாமல் இருக்கிறது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு தகுதியிருக்கிறது. தகுதிக்கு ஏற்ப அக்கட்சிகளின் தலைவர்களை மதிக்க வேண்டும். ஆனால் ஸ்டாலினோ திட்டமிட்டு நமது கட்சித் தலைவர்களையும், கூட்டணி கட்சி தலைவர்களையும் தரக்குறைவாக பேசி வருகிறார். அவரால் நாமும் தரக்குறைவாக பேச வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோம்.

முதல்வரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிக்கப்படுவதே இல்லை என்று ஸ்டாலின் கூறுகிறார். நாங்கள் பதிலளித்துக்கொண்டுதான் இருக்கிறோம். நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் தகுந்த ஆதாரங்களோடு நான் பதிலளித்துவருகிறேன். நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு நீங்கள் பதிலளியுங்கள். எங்கள் ஆட்சியில் பலர் மர்மமாக உயிரிழப்பதாக கூறுகிறார் ஸ்டாலின். திமுக ஆட்சியில் இருந்தபோது ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்கள் மர்மமான முறையில் தற்கொலை செய்துகொண்டனர்.

சாதிக் பாட்சா மர்மமான முறையில் இறந்துவிட்டதாக வழக்கை முடித்துவிட்டனர். அண்ணா நகர் ரமேஷ் மர்மமான முறையில் இறந்ததாக வழக்கை முடித்துவிட்டனர். ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்கள் இறந்தால் மர்மமான முறையில் மரணம் என்று வழக்கை முடித்துவிடுவார்கள். எப்படி மர்மமான முறையில் இறந்தார்கள் என நான் கேள்வி கேட்கிறேன். இவையெல்லாம் விசாரிக்கப்பட்டு அம்மாவின் ஆட்சியில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரப்படும் என உறுதியளிக்கிறேன்.

அம்மா இறந்த பிறகு கட்சி உடைந்துவிடும், ஆட்சி கவிழ்ந்துவிடும் என ஸ்டாலின் நினைத்தார். அவர் கண்ட கனவுகள் நனவாகவில்லை. அதனால்தான் எல்லாப் பொதுக்கூட்டங்களிலும் நம்மை ஸ்டாலின் விமர்சித்துவருகிறார். நமது கூட்டணியைக் கண்டு அரண்டுபோயிருக்கிறார் ஸ்டாலின். என்னை மண்புழு எனவும், கேடி எனவும் விமர்சித்துவருகிறார். இதெல்லாம் ஒரு தலைவருக்குத் தகுதியில்லாத பேச்சு” என்று கூறினார்.

வியாழன், 11 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon