மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 5 ஜூலை 2020

பொள்ளாச்சி வழக்கு: உறுதியான குண்டர் சட்டம்!

பொள்ளாச்சி வழக்கு: உறுதியான குண்டர் சட்டம்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வர் மீதும் ஏவப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டத்தை உறுதி செய்துள்ளது அறிவுரைக் கழகம்.

கடந்த பிப்ரவரி மாதம் தன்னை ஆபாசமாக வீடியோ எடுத்ததாகப் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார் ஒரு மாணவி. இந்த புகாரின் பேரில் பொள்ளாச்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் கல்லூரி மாணவர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த பாலியல் வழக்கு சிபிசிஐடி தனிப்படை வசம் ஒப்படைக்கப்பட்டது. காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் தலைமையிலான தனிப்படையினர் இந்த வழக்கு குறித்து விசாரணை மேற்கொண்டனர்; கடந்த 10ஆம் தேதியன்று உயர் நீதிமன்றத்தில் இது பற்றி அறிக்கை தாக்கல் செய்தனர்.

கடந்த மாதம் 12ஆம் தேதியன்று இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டம் ஏவப்படுவதாக உத்தரவிட்டார் கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி. அதன்பின், மார்ச் 13ஆம் தேதியன்று இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது தமிழக அரசு.

நேற்று (ஏப்ரல் 10) கோவை மத்தியச் சிறையில் இருந்து திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ் ஆகிய நால்வரும் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். சென்னை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அறிவுரைக் கழகத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, அவர்கள் மீது ஏவப்பட்ட குண்டர் சட்டம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அவர்களது குடும்பத்தினரும் இந்த விசாரணைக்கு வந்திருந்தனர். சுமார் 1 மணி நேர விசாரணைக்குப் பிறகு, நால்வர் மீதான குண்டர் தடுப்புச் சட்டத்தை உறுதி செய்தது அறிவுரைக் கழகம்.

இன்று கோவை மாவட்டக் காவல் துறை இது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வியாழன், 11 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon