மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 5 ஜூலை 2020

ராகுல் உயிருக்கு அச்சுறுத்தலா?

ராகுல் உயிருக்கு அச்சுறுத்தலா?

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகப் புகார் எழுந்த நிலையில் அவ்வாறு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி அமேதியிலும், வயநாட்டிலும் போட்டியிடுகிறார். வயநாட்டில் ஏற்கனவே வேட்பு மனு தாக்கல் செய்தநிலையில் நேற்று (ஏப்ரல் 10) தனது சொந்த தொகுதியான அமேதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வதேரா உள்ளிட்டோர் சென்றிருந்தனர்.

வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் ராகுல் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரது தலையில் பச்சை நிற லேசர் ஒளி விழுந்துள்ளது. இந்த நிலையில், லேசர் குண்டு மூலம் ராகுல் காந்தியைக் கொலை செய்ய முயற்சிப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் உள்துறை அமைச்சகத்தில் புகார் அளித்துள்ளனர்.

கட்சியின் மூத்த தலைவர்கள் அகமது பட்டேல், ஜெய்ராம் ரமேஷ், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ஆகியோர் ராகுலுக்குப் பாதுகாப்பு கேட்டு எழுதியுள்ள கடிதத்தில், ராகுல் செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவரை நோக்கி லேசர் கதிர் வீச்சுகள் வந்தன. பச்சை நிறத்திலான அந்தக் கதிர்கள் அவரது தலையைக் குறிபார்த்து, 7 முறை பாய்ந்தது. குறிப்பாக வலது பக்கம் நோக்கிப் பாய்ந்தது.

நீண்ட தூரத்திலிருந்து சுடும் துப்பாக்கி மூலம் லேசர் குண்டை பயன்படுத்திக் கொல்ல சதி நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. எனவே அவருக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர்களிடமிருந்து எந்தக் கடிதமும் வரவில்லை, ஆனால் ராகுலுக்குச் சிறப்பு பாதுகாப்பு கேட்கப்பட்டது என்று உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

மேலும் ராகுல் பேசிக்கொண்டிருந்த போது அவரைப் புகைப்படக் கலைஞர் ஒருவர் மொபைல் மூலம் தொடர்ந்து வீடியோ எடுத்துக் கொண்டு இருந்தார். அந்த மொபைலில் இருந்து வந்த ஒளிதான் ராகுலின் மீது விழுந்துள்ளது என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ராகுல் காந்திக்கு எந்தப் பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என்று தெரிவித்துள்ள உள்துறை அமைச்சகம் இது தொடர்பாக ராகுல் காந்தி அலுவலகத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளதாகக் கூறியுள்ளது. ராகுலுக்கு வழங்கப்பட்டுவரும் பாதுகாப்பில் எந்த குறைபாடும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 11 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon