மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 5 ஜூலை 2020

டிஜிட்டல் திண்ணை: அரசு ஊழியர்கள் தபால் ஓட்டுப் பதிவில் முறைகேடு!

டிஜிட்டல் திண்ணை:  அரசு ஊழியர்கள் தபால் ஓட்டுப் பதிவில் முறைகேடு!

மொபைல் டேட்டாவை ஆன் செய்தோம். வாட்ஸ் அப்பில், அண்மையில் உணர்ச்சிகரமாக நடந்த ஜாக்டோ ஜியோ ஆசிரியர் போராட்டங்களின் படங்கள் வந்து விழுந்தன. இதைத் தொடர்ந்து மெசேஜும் வந்தது.

“ மக்களவைத் தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 18 ஆம் தேதி நடக்க இருக்கிறது. ஆயினும் இந்தத் தேர்தல்களை நடத்துகிறவர்களான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களது தபால் வாக்குகளை கடந்த 7 ஆம் தேதி முதல் செலுத்தலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து, அதன்படியான நடவடிக்கைகளும் தொடங்கிவிட்டன. தமிழகம் முழுதும் மூன்றரை லட்சம் அரசு ஊழியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். போலீஸாருக்கான தபால் ஓட்டுப் பதிவு இன்றும், நாளையும் நடக்கிறது.

இந்த நிலையில் அரசு ஊழியர்களின் ஓட்டளிக்கும் முறையில் தேர்தல் ஆணையம் இம்முறை சில மாறுதல்களைக் கொண்டு வந்துள்ளது. முன்பெல்லாம் தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கிற ஊழியர்களின் வீடுகளுக்குத் தபால் ஓட்டு அனுப்பப்படும். அதை அந்தந்த பகுதியில் இருக்கும் லோக்கல் கட்சிக்காரர்கள் சென்று வாங்கிக் கொண்டு அவரவர் கட்சிகளுக்காக வாக்களித்துக் கொள்வார்கள். இதுதான் இதுவரையிலான நடைமுறை. ஆனால் இப்போது தேர்தல் ஆணையம் வகுத்திருக்கும் புதிய விதிமுறைகளின்படி, தபால் ஓட்டு செலுத்துவதில் கெடுபிடிகள் காட்டப்பட்டிருக்கின்றன.

அதாவது இப்போது தேர்தல் ஆணையம் யாருக்கு பணி வந்திருக்கிறதோ, அவர்கள் வீட்டுக்குத் தபால் ஓட்டு சென்றுவிடும். அந்தத் தபால் ஓட்டினை சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் தனது ஐடி கார்டு, தேர்தல் பணி அடையாள அட்டை ஆகியவற்றோடு சேர்த்து எடுத்துக் கொண்டுபோய் அந்தந்த தபால் ஓட்டுமையத்தில் நேரடியாக செலுத்திட வேண்டும். இதன்படிதான் 7 ஆம் தேதி முதல் அரசு ஊழியர்களும், இன்றும் நாளையும் போலீசாரும் தபால் ஓட்டு செலுத்தி வருகிறார்கள். இது ஒருவகையில் நல்லதுதான்.

ஆனால் தபால் ஓட்டு அளிப்பதில் இப்போது வேறு ஒரு சிக்கல் அரசு ஊழியர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. அரசு ஊழியர்களின் வீடு தேடி வரும் தபால் ஓட்டுப் படிவத்தில் மக்களவைத் தொகுதி எண், சட்டமன்றத் தொகுதி எண், பாகம் எண், வரிசை எண் ஆகியவை இடம்பெற்றிருக்கும். இதை வைத்துதான் சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்கள் வாக்களிக்க முடியும். ஆனால் இப்போது பல அரசு ஊழியர்களுக்கு அனுபப்ப்பட்ட தபால் ஓட்டுப் படிவங்களில் மேற்குறிப்பிட்ட எண்கள் தவறாக அச்சடிக்கப்பட்டு வருகிறதாம்.

உதாரணத்துக்கு ஒரு சம்பவம். விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடும் சிதம்பரம் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட அரசு ஊழியரும், ஆசிரியரும் தபால் ஓட்டு போட தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையத்துக்குச் சென்றனர். அங்கே, ‘சார் உங்களுக்கு வந்த சீட்டில் தொகுதி எண் மாறிவந்திருக்கிறது. அதனால் இங்கே ஓட்டு போட முடியாது’ என்று சொல்லியிருக்கிறார்கள். அதை மீண்டும் தாலுகா அலுவலகத்துக்கு சென்று போராடி மாற்றிவந்து தனது வாக்கைப் பதிவு செலுத்தியிருக்கிறார் அந்த அரசு ஊழியர்.

இங்குதான் சதித்திட்டம் நடக்கிறது என்கிறார்கள் அரசு ஊழியர்கள். அரசு ஊழியர்களுக்கு அனுப்பப்படும் பல தபால் ஓட்டுகளில் இப்படித்தான் தொகுதி எண், பாகம் எண் மாற்றி மாற்றி கொடுக்கப்படுகிறது. இதனால் அரசு ஊழியர்கள் தங்கள் தபால் ஓட்டினை பதிவு செய்வதற்கு சில போராட்டங்களை நடத்த வேண்டியிருக்கிறது. சில பேர் உறுதியாக நின்று போராடி ஓட்டுகளை பதிவு செய்கிறார்கள். ஆனால் கிடைத்த ஓய்வில் வாக்கு செலுத்த வரும் அரசு ஊழியர்கள் விரக்தி அடைந்து வாக்கு செலுத்தாமலேயே போய்விடுகிறார்கள். ஆக அரசு ஊழியர்களின் வாக்குகள் பெரும்பாலும் திமுகவுக்குதான் போகும் என்பது உறுதியாகத் தெரிவதால் அதை சிதைக்கும் வேலையில்தான் தேர்தல் ஆணையம் இப்படி அரசு ஊழியர்களின் தபால் ஓட்டுகளில் தகிடுதத்தம் செய்து வருவதாக அரசு ஊழியர்களே கொந்தளிக்கின்றனர்.

தபால் ஓட்டுகளால் முடிவுகளே மாறிப் போன வரலாறெல்லாம் உண்டு. 2016 சட்டமன்றத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் அப்பாவுவும், அதிமுக வேட்பாளர் இன்பதுரையும் சரிக்குசமமாக வந்துகொண்டிருந்த நிலையில் திமுக வேட்பாளருக்கு விழுந்த தபால் ஓட்டுகள் அவரை வெற்றியை நோக்கிக் கொண்டு சென்றன. ஆனால், அவை செல்லாது என அறிவிக்கப்பட்டதால் வெறும் 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இதுபோல தபால் ஓட்டுகள் வெற்றியையும் தோல்வியையும் தீர்மானிக்கும் சந்தர்ப்பங்கள் நடந்திருக்கின்றன.

ஏப்ரல் 3 ஆம் தேதி சென்னைக்கு வந்த இந்திய தேர்தல் ஆணையர்களை சந்தித்த திமுக குழுவினர், ‘அரசு ஊழியர்கள் இந்த அரசை எதிர்த்து பல போராட்டங்கள் நடத்தினார்கள். அதனால் அவர்கள் பல்வேறு அடக்குமுறைகளுக்கு ஆளானார்கள். ஆசிரியர்களின் சம்பளம் அதிகம் என்று முதல்வரே பொது மேடையில் பேசியிருக்கிறார். இந்நிலையில் அரசு ஊழியர்களின் வாக்குகள் தங்களுக்கு எதிராகப் போகும் என்பதை உணர்ந்த அரசு, அவர்களுக்கு தபால் ஓட்டுகளுக்கான ஏற்பாடுகளைச் செய்வதில் தாமதப்படுத்துகிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் முறைப்படி தபால் ஓட்டுகளை செலுத்துவதில் தடைகளை ஏற்படுத்தப் பார்க்கிறார்கள். எனவே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்கள் தபால் ஓட்டுகளை முறைப்படி செலுத்த அனுமதிக்கப்பட வேண்டும்’ என்று முறையிட்டார்கள். ஆனால் அதையும் மீறி மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தல்களில் அரசு ஊழியர்களின் தபால் ஓட்டுகளில் முறைகேடுகள் நடப்பதாக புகார் கிளம்பியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது” என்று முடிந்தது வாட்ஸ் அப் மெசேஜ்.

இதை ஷேர் செய்துகொண்ட ஃபேஸ்புக் தனது தகவலை டைப் செய்யத் தொடங்கியது.

“கரூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியில் போட்டியிடும் ஜோதிமணிக்காக தீவிர பிரச்சாரத்தில் இருந்தார் திமுகவின் மாவட்டப் பொறுப்பாளரான செந்தில்பாலாஜி. ஆனால் அரவக்குறிச்சி தொகுதிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நேரத்தில் ஜோதிமணியுடன் பிரச்சாரத்தில் இருந்தாராம் செந்தில்பாலாஜி. இந்த தகவல் தெரிந்ததும், பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கிய செந்தில்பாலாஜி தனது காரில் ஏறி நேராக அரவக்குறிச்சிக்கு போயிருக்கிறார். அவர் தினகரன் கட்சியில் இருந்த போது போடப்பட்ட அலுவலகத்துக்குதான் போனாராம். திமுகவுக்கு வந்த பிறகு அந்த அலுவலகத்துக்குப் போகாத செந்தில்பாலாஜி இப்போதுதான் போயிருக்கிறார். அங்கே காத்திருந்த அவரது ஆதரவாளர்கள் செந்தில்பாலாஜிக்கு சால்வை போட்டு வரவேற்று இருக்கிறார்கள். அதன் பிறகு பள்ளப்பட்டிக்கு போன செந்தில்பாலாஜி அங்கே இருக்கும் சில நிர்வாகிகளை சந்தித்து இருக்கிறார். பள்ளப்பட்டியில் ஒரு மண்டபத்தை வாடகைக்குப் பிடிக்கச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினாராம்.

அதன் பிறகு கடந்த சில நாட்களாக ஜோதிமணியுடன் பிரச்சாரத்தில் பெரிதாக கலந்து கொள்ளாமல் அரவக்குறிச்சியில் நிர்வாகிகள் சந்திப்பில் தொடங்கி தனது தொகுதிக்கான வேலைகளில் மும்முரமாகிவிட்டார் செந்தில்பாலாஜி. திமுக நிர்வாகிகள் பலரும் செந்தில்பாலாஜி பின்னால் அரவக்குறிச்சிக்கு கிளம்பிவிட்டார்களாம். அரவக்குறிச்சி தொகுதிக்குள் ஜோதிமணி பிரச்சாரத்துக்கு வரும்போது மட்டும் அவருடன் வண்டியில் ஏறிக் கொள்கிறாராம் செந்தில்பாலாஜி. அதுமட்டுமல்லாமல் இவ்வளவு நாளாக ஜோதிமணிக்கான செலவுகளை எல்லாம் கவனித்து வந்தது செந்தில்பாலாஜிதானாம். ஆனால், சில தினங்களாக அதுவும் தடை பட்டிருக்கிறதாம். பார்த்து பார்த்து நொந்துபோன ஜோதிமணி இதுதொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியிடம் புகார் செய்திருக்கிறாராம். அழகிரியும் இந்த தகவலை திமுக தலைமையின் கவனத்துக்கு கொண்டு போயிருக்கிறார். “ என்று முடிந்தது அந்த மெசேஜ். லாக் அவுட் ஆனது ஃபேஸ்புக்.

வியாழன், 11 ஏப் 2019

அடுத்ததுchevronRight icon