மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 5 ஜூலை 2020

ஒரு கேள்விக்குக்கூட முதல்வர் பதிலளிக்கவில்லை: ஸ்டாலின்

ஒரு கேள்விக்குக்கூட முதல்வர் பதிலளிக்கவில்லை: ஸ்டாலின்

அரூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக கிருஷ்ணகுமார் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று அரூர் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய ஸ்டாலின், “நான் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடுகிறபோது எடப்பாடி அரசைப் பார்த்து மூன்று கேள்விகளைத் தொடர்ந்து கேட்டு வருகிறேன். அந்த மூன்று கேள்விகளில் ஒரு கேள்விக்குக்கூட இதுவரையில் அவர்கள் பதிலளிக்கவேயில்லை.

முதல் கேள்வி, அம்மையார் ஜெயலலிதா மறைவு ஒரு மர்மமான நிலையில் இருக்கிறது; அது குறித்து விசாரணை நடத்தி உண்மைகளை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று கேட்டிருக்கிறேன். இரண்டாவது, கொடநாடு விவகாரம். கொடநாட்டில் நடைபெற்ற அக்கிரமங்கள், அநியாயங்கள், கொள்ளையடிக்கப் போய் சில கொலைகளைச் செய்து முடித்திருக்கிறார்கள். இதற்கு யார் காரணம்? இதன் பின்னணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள்?

கொடநாடு விவகாரத்தைப் பற்றி நான் பேசக் கூடாது என்று நீதிமன்றத்துக்குப் போயிருக்கிறார்கள். கொடநாட்டைப் பற்றி நான் பேசித்தான் உங்களுக்குத் தெரிய வேண்டுமா? கொடநாடு என்றால் என்னவென்று தெரியும், கொடநாட்டில் என்ன நடந்தது, அதற்கு யார் காரணம், பின்னணியில் யார் இருந்தது என்பதெல்லாம் உங்களுக்கே தெரியும். இதுபற்றியும் நான் கேள்வியெழுப்பியுள்ளேன்.

மூன்றாவதாக, நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கும் பொள்ளாச்சி விவகாரம். இதுவரை தமிழ்நாட்டிலோ, இந்தியாவிலோ, உலகத்திலே கூட இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்காது. பொள்ளாச்சியில் 200க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் என்ன நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள்? நானும் ஒரு பெண்ணுக்கு அப்பாதான். பாதிக்கப்பட்ட பெண்களின் பெற்றோரும், உறவினர்களும் என்னென்ன கொடுமைகளுக்கு ஆளாகியிருப்பார்கள்?

ஏறக்குறைய ஏழு ஆண்டுகளாக பொள்ளாச்சி பகுதியில் இளம்பெண்களைக் கடத்திக் கொண்டுபோய் பண்ணை வீட்டில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்து, புகைப்படம் எடுத்து, வீடியோ பதிவு செய்து, அதை அவர்களிடமே போட்டுக்காட்டி மிரட்டி பணம் பறித்துள்ளனர். இக்கொடுமைகளின் பின்னணியில் யார்? துணை சபாநாயகர் ஜெயராமனும் அவரது மகன்களும் பின்னணியில் இருப்பதாகத் தொடர்ந்து செய்திகள் வருகின்றன.

இந்த கொடுமையெல்லாம் ஏழு ஆண்டுகளாக நடைபெறுகின்றன. ஏழு ஆண்டுகளாக பொள்ளாச்சியில் காவல் துறையே இல்லையா?” என்று கேள்வியெழுப்பினார்.

வியாழன், 11 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon