மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 6 ஆக 2020

கிச்சன் கீர்த்தனா: மாங்காய் - வேப்பம்பூ பச்சடி

கிச்சன் கீர்த்தனா: மாங்காய் - வேப்பம்பூ பச்சடி

சித்திரை ஸ்பெஷல்: இனிப்பும் கசப்பும்!

‘இளவேனில் காலம்’ என்னும் வசந்த காலம் தொடங்குவது சித்திரை மாதத்தின்போதே. வசந்த காலத்தில் மாமரங்களில் மாந்தளிர்களும், மலர்களும் பூத்துக் குலுங்கும். வேப்ப மரங்களில் வேப்பம்பூக்கள் பூத்துக் குலுங்கும். மனித வாழ்க்கை இனிப்பும், கசப்பும் கலந்தே இருக்கும் என்பதை எடுத்துக்காட்டும் அம்சமாக இச்செயற்பாடு கருதப்படுகிறது. இந்த மாங்காய் - வேப்பம்பூ பச்சடியும் அவற்றில் ஒன்று.

என்ன தேவை?

மாங்காய் - 2 (தோல், கொட்டை நீக்கிச் சிறிய துண்டுகளாக நறுக்கவும்)

வேப்பம்பூ - 2 டீஸ்பூன்

கடுகு, உளுத்தம் பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

வெல்லம் - சிறிதளவு

காய்ந்த மிளகாய் - 2 (கிள்ளி வைக்கவும்)

பெருங்காயத் தூள் - சிட்டிகை

எண்ணெய் - 2 டீஸ்பூன்

நெய் - சிறிதளவு

உப்பு - ஒரு சிட்டிகை.

எப்படிச் செய்வது?

குக்கரில் மாங்காய்த் துண்டுகளைப் போட்டு தண்ணீர் தெளித்து இரண்டு விசில் வரும் வரை வேகவைத்து எடுக்கவும். ஆறியபின் மசிக்கவும். வாணலியில் நெய்விட்டு வேப்பம்பூ சேர்த்து வறுத்து தனியாக எடுத்துவைக்கவும். பிறகு, அதே வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்துத் தாளிக்கவும். இதனுடன் மசித்த மாங்காய், உப்பு, வெல்லம் சேர்த்து ஒரு கொதிவிடவும். மேலே நெய்யில் வறுத்த வேப்பம்பூ சேர்த்து இறக்கவும்.

குறிப்பு: வேப்பம்பூவை நிறைய கிடைக்கும் சீஸனில் அதை நிழலில் காயவைத்து பக்குவப்படுத்தி வைத்துக்கொள்ளலாம். நாட்டு மருந்துக் கடைகளில் ரெடிமேடாகவும் கிடைக்கும்.

என்ன பலன்?

கசக்கும் என்றாலும் மனித உடலிலுள்ள ரத்தத்தைத் தூய்மை செய்வதில் வேப்பம்பூவுக்கு நிகராக வேறு எந்த மூலிகையும் இல்லை. இதற்காகவே இந்த உணவு உண்ணப்படுகிறது. உடல் உஷ்ணத்தைப் போக்கும் சக்தி, வேப்பம்பூவுக்கு உண்டு என்பதால், இந்தக் கோடைக் காலத்துக்குச் சரியான தேர்வாக இருக்கும்.

வெள்ளி, 12 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon