மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 9 ஆக 2020

டிக் டாக்கில் குவியும் இந்தியர்கள்!

டிக் டாக்கில் குவியும் இந்தியர்கள்!

2019ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 8.86 கோடி இந்தியர்கள் டிக் டாக் செயலியில் இணைந்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.

ஸ்மார்ட்போன் பயனர்களின் அண்மைக்கால டிரெண்டில் இருக்கும் சமூக வலைதளமாக டிக் டாக் இருக்கிறது. ஆடல், பாடல், காமெடி, நடிப்பு என இந்திய ஸ்மார்ட்போன் பயனர்களின் பொழுதுபோக்கு அம்சத்திற்கு தீனி போடும் மிக முக்கிய செயலியாக டிக் டாக் இருந்து வருகிறது. இந்த டிக் டாக் செயலியைச் சுற்றி பல்வேறு சர்ச்சைகளும் எழுந்து வருகின்றன. டிக் டாக் செயலியில் அதிகளவில் ஆபாச வீடியோக்கள் இடம்பெறுவதாகவும், பெண்களின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாகவும், கலாச்சார சீரழிவுக்கு டிக் டாக் வழி வகுப்பதாகவும், அதனைத் தடை செய்ய வேண்டுமெனவும் ஒருபக்கம் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி இதுகுறித்து சட்டமன்றத்திலேயே பிப்ரவரி 12ஆம் தேதி கேள்வியெழுப்பினார். டிக் டாக் செயலியை தடை செய்ய வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு ஒன்றும் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. டிக் டாக் செயலியை தடை செய்வது குறித்து மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் உரிய பதில் அளிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஏப்ரல் 16ஆம் தேதி நடக்கிறது.

டிக் செயலி அண்மையில்தான் 1 பில்லியன் (100 கோடி) பயனர்களைக் கொண்ட செயலியாக உருவெடுத்தது. தற்போது டிக் டாக் பயனர்களின் எண்ணிக்கை 1.88 பில்லியனாக அதிகரித்துள்ளதாக சென்சார் டவர் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதில் இந்தியர்களே அதிகளவில் இந்த செயலியை தரவிறக்கம் செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த ஆய்வில், ‘2019ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் மட்டும் 8.86 கோடி இந்தியர்கள் டிக் டாக் செயலியைத் தரவிறக்கம் செய்துள்ளனர். 2018ஆம் ஆண்டு இதே காலகட்டத்தைக் காட்டிலும் இது 70 விழுக்காடு அதிகமாகும். 99 விழுக்காட்டினர் கூகுள் பிளே ஸ்டோர் வழியாகவே பதிவிறக்கம் செய்துள்ளனர்’ என்று கூறப்பட்டுள்ளது.

ஒருபக்கம் டிக் டாக் செயலிக்கு ஆட்சேபங்கள் இருந்து வந்தாலும், இந்திய இளைய சமுதாயத்தினர் மத்தியில் டிக் டாக் காட்டூத் தீயாய் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது என்பதையே இந்த ஆய்வு வெளிப்படுத்துவதாய் உள்ளது.

வெள்ளி, 12 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon