மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 13 ஜூலை 2020

கிச்சன் கீர்த்தனா: முக்கனிப் பாயசம்!

கிச்சன் கீர்த்தனா: முக்கனிப் பாயசம்!

சித்திரை ஸ்பெஷல்: இனிக்க இனிக்க

விகாரி வருடப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த நாள்போல் எந்நாளும் விளங்க வேண்டும் என்பதற்காக மனதால் மட்டுமல்லாமல், உணவு வகைகளாலும் நம் முன்னோர் சில மரபுகளைக் கடைப்பிடித்தனர். அப்படி ஒன்றுதான் இந்த முக்கனிப் பாயசம்.

என்ன தேவை?

மாம்பழம் - 2 (தோல், கொட்டை நீக்கி சிறிய துண்டுகளாக்கவும்)

வாழைப்பழம் - 3 (தோல் உரித்துப் பொடியாக நறுக்கவும்)

பலாச்சுளை - 6 (கொட்டை எடுத்துப் பொடியாக நறுக்கவும்)

வெல்லத்தூள் - தேவையான அளவு

தேங்காய்த் துருவல் - ஒரு கப்

ஏலக்காய் - 4

முந்திரி - 10

திராட்சை - 15

நெய் - ஒரு டேபிள் ஸ்பூன்

எப்படிச் செய்வது?

மாம்பழம், வாழைப்பழம், பலாச்சுளை துண்டுகளில் சிறிதளவு தனியாக எடுத்து வைக்கவும். மீதியுள்ள பழங்களை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். வாணலியில் சிறிதளவு நெய் சேர்த்து உருக்கி, முந்திரி, திராட்சையை வறுத்து, தனியாக எடுத்துவைத்த பழங்கள் சேர்த்துப் புரட்டி எடுக்கவும். அதே பாத்திரத்தில் வெல்லம் சேர்த்து மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு கொதிவிட்டு, கரைந்ததும் இறக்கி வடிகட்டவும். தேங்காய்த்துருவலுடன் ஏலக்காய் சேர்த்து சிறிதளவு தண்ணீர்விட்டு அரைத்து கெட்டியான பால் எடுக்கவும். பிறகு அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, நெய் சேர்த்து, அரைத்த பழ விழுது சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும். இதில் வெல்லக் கரைசல், தேங்காய்ப்பால் ஊற்றி, நன்கு கொதித்தவுடன் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் தனியாக எடுத்து வைத்த பழங்கள் சேர்க்கவும். இந்தக் கலவை நன்கு கொதிவந்ததும் இறக்கவும்.

என்ன பலன்?

மாம்பழத்தில் 15% சர்க்கரை, 1% புரதம், உயிர்ச்சத்துகள் ஏ, பி, சி ஆகியவை உள்ளன. பலாச்சுளைகள் பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய உப்பு சத்துகளும், உயிர்ச்சத்து ஏ மற்றும் சியும் அதிக அளவில் கொண்டுள்ளன. வாழைப்பழம் உடலில் நீர்ச்சத்தை அதிகரிக்கச் செய்யும். மிக ஆரோக்கியமான, ஒரு கெடுதலும் தராத பழம் இது. இதில் அதிகமான பொட்டாசியம் இருப்பதால் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும்.

நேற்றைய ரெசிப்பி: மாங்காய் - வேப்பம்பூ பச்சடி

ஞாயிறு, 14 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது