மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 5 ஜூலை 2020

தேர்தல்: சாமானிய மக்களின் நாடித் துடிப்பு!

தேர்தல்: சாமானிய மக்களின் நாடித் துடிப்பு!

மக்களின் மனநிலையைக் காட்டும் சந்திப்புகள் – நரேஷ்

ஊடகங்களுக்குத்தான் அரசியல் அதிகம் தெரியும் என்றும் சாமானியர்கள் ஊடகங்களைப் பார்த்துத்தான் அரசியல் கற்றுக்கொள்கிறார்கள் என்றும் நினைத்திருந்த பொதுக் கற்பிதங்கள் அனைத்தும் ஒரே ஒரு மாதப் பயணத்தில் உடைந்தன. அவ்வளவு அறிவுள்ளவர்களாக இருக்கிறார்கள் அம்மனிதர்கள். எளிய மனிதர்களின் அரசியல், அரசாங்கத்திலிருந்து விலகியே நிற்கிறது.

“எந்தக் கட்சிக்காரன் வந்தாலும், அவன் ஒலக வங்கி சொல்லும்படித்தான நடந்துக்கணும். ஒலக வங்கி என்ன சொல்லுது? மானியம் எதும் குடுக்காத, நேரா பணமா குடுன்னு சொல்லுது. மானியம் குடுத்தா, அந்த மானியத்து மூலமா நம்மாளு தொழில் செஞ்சு பொழச்சுக்குவான். நம்ம வளம் நம்ம கிட்டையே இருக்கும். இதுவே மானியம் குடுக்காம பணமா குடுத்தா நம்மாளு எதுக்கு தொழில் நடத்தப்போறான்? அதாவது வளம் ஆதாரமா இருக்குறத மாத்தி பணத்தை ஆதாரமா இருக்கவெச்சாத்தான் ஒலக வங்கிய நடத்துற பெரிய நாட்டுக்காரனுக்கு பணம் கெடைக்கும்?”

பீடி குடித்துக்கொண்டே பேசிய பெரியவர் விவரித்த சித்தாந்தத்தின் சுருக்கம் இது. ‘வளரும் நாடுகளின் அரசாங்கங்கள் மானியம் வழங்குவதை நிறுத்தவேண்டும்’ என்பது ‘காட்’ ஒப்பந்தத்தில் முன்வைக்கப்பட்டுள்ள முக்கியமான பொருளாதார அம்சம். இது படித்தவர்களுக்கு மட்டுமே பரிச்சயமாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் படித்தவர்களைவிட அதிக தெளிவுடன் இதை எளிய மனிதர்கள் புரிந்துகொண்டுள்ளனர்.

70 வயதைக் கடந்த பெரியவர் ஒருவர் சொன்னதை அவருடைய இயல்பான மொழியிலேயே கேளுங்கள்:

“அவிங்க ரெண்டு பேரு பண்ணுறதும் தப்புதான். யார் வந்தாலும் அவங்களுக்கு என்ன செய்யணும்னு சொல்லப்பட்டிருக்கோ அதத்தான் செய்வான். ஒருத்தன் வெளிப்படையா செய்வான். இன்னொருத்தன் மறைமுகமா செய்வான். மோடி வருஷத்துக்கு 6 ஆயிரம் கொடுக்குறான். ஆனா, ராகுலு மாசத்துக்கு 6 ஆயிரம் குடுக்குறான், அவனுக்குத்தான் ஓட்டு போடனும்னு பேசிக்கிட்டு திரியிறானுவ. வருஷத்துக்கு 6 ஆயிரம் குடுக்கறதும் தப்பு, மாசத்துக்கு 6 ஆயிரம் குடுக்கறதும் தப்பு. அப்புறம் நாளைக்கு நம்ம வீட்டப் புடிங்கிட்டு வெளிய தள்ளும்போதும், அதா பணம் குடுக்குறோம்லனு சொல்லுவான். அப்படி செய்யாம மக்களுக்கு நல்லது செஞ்சா, மத்த பெரிய நாடுகள்லாம் நம்ம நாட்டு மேல போரே நடத்திடுவானுக.”

சமூக வலைதளங்களில் பார்க்கும் அரசியலுக்கும், பொதுத் தளத்தில் இருக்கும் அரசியலுக்கும் மிகப் பெரிய வேறுபாடு இருக்கிறது. இங்கே பல்வேறு அரசியல் விவாதங்கள் பேசப்பட்டாலும், நேரடிக் கள நிலவரம் என்னவென்றால், பெரும்பான்மையான பொதுமக்களுக்கு 5 கட்சிகளைத் தவிர வேறு கட்சிகளின் பெயரே தெரியாது. இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், இரண்டு திராவிடக் கட்சிகளைத் தவிர மற்ற கட்சிகளின் சின்னங்கள்கூடப் பலருக்குத் தெரியவில்லை.

பல்வேறு ஊர்களில், பல்வேறு மனிதர்களிடம் அவர்களுக்குத் தெரிந்த கட்சிகளின் பெயர்களைப் பற்றி கேட்கும்போது, 60 சதவிகிதப் பொதுமக்கள் பிரதான 4 கட்சிகளின் பெயர், சின்னம் ஆகியவற்றைத் தவிர வேறெதுவும் தெரியாது என்றனர்.

இங்கே வெற்றியைத் தீர்மானிப்பது நம்பிக்கை அல்ல, வெறுப்புதான். எந்தக் கட்சியின் மீது அதிக வெறுப்பு இருக்கிறதோ, அந்தக் கட்சி தோற்கும். எந்தக் கட்சியின் மீது குறைவான வெறுப்பு இருக்கிறதோ அந்தக் கட்சி ஜெயிக்கும். நடுத்தர வயதுக் குடும்பத் தலைவியுடன் நடந்த உரையாடலை இங்கே குறிப்பிடுகிறேன். இதை ஒரு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.

நீங்கள் யாருக்கு ஓட்டு போடுவீர்கள்?

திமுகவுக்கு.

ஏன்? திமுக வந்தா நல்லா இருக்கும்னு நம்பிக்கையா?

நம்பிக்கையெல்லாம் ஒண்ணும் இல்ல கண்ணு. திமுககாரங்க ஆடுன ஆட்டம் எல்லாம் உங்களுக்கு தெரியாது. அவ்வளவு ரவுடீஸம். அப்போ ரவுடிங்களும் கட்சிக்காரனும் ரவுடீஸம் பன்னுவாங்க. அதிமுக ஆட்சியில போலீஸுங்க ரவுடீஸம் பண்ணுறாங்க. அவ்வளவுதான் வித்தியாசம்.

அப்புறம் ஏன் திமுக ஓட்டு போடுறீங்க?

இப்போ அதிமுக இருக்குற நிலமய பத்தி எல்லாருக்கும் தெரியும். மொத்தமா கொள்ளயடிக்கிற கூட்டம். ஒண்ணா ரெண்டா சொல்ல. இவிங்க மாத்தி மாத்தி பேசிக்குட்டு சிரிச்சிக்கிட்டு நிக்குறத பாத்தாலே எரியுது. அவனுங்களுக்கு இவிங்க பரவால்லன்னுதான் திமுகவுக்கு ஓட்டு போடுறேன்.

இவங்க ரெண்டு பேரத் தவிர வேற ஒருத்தருக்கு ஓட்டு போடலாம்ல?

வேற ஆரு இருக்கா? விசயகாந்து வந்தாரு. அவரும் குடுச்சும் அடிச்சுமே காணாம போயிட்டாரு. இப்போ யாரு இருக்கா?

மக்கள் நீதி மைய்யம், நாம் தமிழர் கட்சி, பத்தியெல்லாம் தெரியாதா?

பெருசா தெரியல தம்பி. அந்த மக்கள்னு என்னமோ சொன்னீங்களே.. அது கமலகாசனுதுதான? அவருக்கு வேணும்னா போடலாம். ஆனா என்ன சின்னம்னு தெரியலையே.. பேசாம திமுகவுக்கே போட்டுறுவோம்.

தினகரன் கட்சி பத்தி?

அவரு அதிமுகதான? இப்போ பிரிஞ்சிட்டாங்கல்ல? என்ன சின்னம்?

பணம் கொடுக்குற கட்சிக்குத்தான் ஓட்டு போடுவீங்களா?

இல்லல்லா, எங்களுக்கு யாருக்குத் தோணுதோ அவங்களுக்குத்தான் ஓட்டு போடுவோம்.

அப்போ பணம் வாங்க மாட்டிங்களா?

யாரு எவ்வளவு பணம் குடுத்தாலும் வாங்கிக்குவோம். ஆனா எந்த கட்சி புடிக்குமோ அவங்களுக்குதான் ஓட்டு போடுவோம்.

ஏன் அப்படி?

அவிங்க எங்க பணத்ததான குடுக்குறாங்க. அவிங்க சொத்த வித்தா கொடுக்குறாங்க? எங்க பணத்த நாங்க வாங்கிக்குறோம். ஆனா யாருக்கு ஓட்டு போடுவோம்னு எங்களுக்கு மட்டும்தான் தெரியும்.

இப்படிப்பட்ட மனநிலையில் மக்கள் இருக்கும்போதுதான், டோக்கன் கொடுப்பதும் சூடத்தின் மீதும் குழந்தைகளின் மீதும் சத்தியம் வாங்கிக்கொண்டு பணம் கொடுப்பதும், கட்சிகளின் ஆகப் பெரும் நம்பிக்கையாக இருக்கிறது.

மக்களின் ஆழ்மனதிற்குள் மாற்றத்திற்கான பெரும் ஏக்கம் இருக்கிறது. ஆனால், அந்த ஆழத்திற்கு சென்று அதைப் புரிந்துகொண்டு தீர்க்கும் சூழலை நம் அரசியல் கட்சிகள் உருவாக்கவில்லை.

அப்படியென்றால், மாற்றம் வர இன்னும் எத்தனை வருடங்கள் ஆகும்?

(மக்கள் சந்திப்பு தொடரும்)

ஞாயிறு, 14 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon