மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 3 ஜூலை 2020

தஞ்சையில் எய்ம்ஸ்: பழனி மாணிக்கம் உறுதி!

தஞ்சையில் எய்ம்ஸ்: பழனி மாணிக்கம் உறுதி!

தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் போட்டியிடுகிறார். இந்த நிலையில் நேற்று பழனி மாணிக்கம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தஞ்சை மாவட்டம் ஒரு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக நிச்சயமாக அறிவிக்கப்படும். இம்மண்டலத்தில் விவசாயத்தைத் தவிர வேறு எந்த செயல்பாடுகளும் அரசு சார்பாக இருக்காது. தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் மாநாடு நடத்தும்போது திருச்சியைத் தேர்ந்தெடுக்கின்றனர். மருத்துவமனைக்கு ஏன் இப்பகுதியைத் தேர்ந்தெடுக்கக் கூடாது?

தண்ணீர் வசதி, விமானப் போக்குவரத்து, சுகாதாரம் என நோயாளிகள் குணமடைவதற்குத் தேவையான அனைத்து சாத்தியக்கூறுகளும் கொண்ட பகுதி செங்கிப்பட்டி. அதனால் இரண்டாவது எய்ம்ஸ் மருத்துவமனையை செங்கிப்பட்டிக்கு நிச்சயமாகக் கொண்டுவருவோம். தஞ்சையில் பன்னோக்கு உயர்தர மருத்துவமனையைத் திறந்துவைத்தது மட்டும்தான் மோடி. அந்த மருத்துவமனையைக் கொண்டுவர முயற்சி செய்தது பழனி மாணிக்கம்; ஒப்புதல் வழங்கியது மன்மோகன் சிங். முந்தைய காலத்திலெல்லாம் சிதம்பரம், மதுரை கிழக்கு, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை பகுதிகளிலிருந்து தஞ்சைக்கு மருத்துவ சிகிச்சைக்காக வந்துள்ளனர்.

இந்தியாவிலேயே தமிழகமும், கேரளமும்தான் மிகப்பெரிய தேங்காய் உற்பத்தி மாநிலங்களாக உள்ளன. தமிழகத்தில் தஞ்சை, கோவை, ஈரோடு ஆகிய மாநிலங்கள் தேங்காய் உற்பத்தியில் முன்னணியில் உள்ளன. கஜா புயலின் தாக்கத்தால் தஞ்சையின் தேங்காய் உற்பத்தி முற்றிலுமாகப் பாழடைந்துவிட்டது. எனினும், இரண்டே ஆண்டுகளில் காய் தரக்கூடிய புதிய வகை தென்னைகள் வந்துள்ளன.

விவசாயிகள், வேளாண் அதிகாரிகள், கூட்டுறவு சங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் குழு அமைத்து, தென்னை வளர்ப்பு சங்கங்களை உருவாக்கி, அதிகாரிகளின் ஒருங்கிணைப்போடு கடன் பெற்று நான்கு மாவட்டங்களிலும் புதிய கன்றுகளை நட்டு, புதிய தோப்புகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டால் தென்னை வளர்ப்பில் பழையபடி ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளை மீட்கலாம்” என்று கூறினார்.

திங்கள், 15 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது