மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 4 ஜூலை 2020

வாகனங்களின் ஹாரன் சத்தம்: பேச்சை நிறுத்திய வைகோ!

வாகனங்களின் ஹாரன் சத்தம்: பேச்சை நிறுத்திய வைகோ!

திண்டுக்கல் தொகுதியில் நேற்று திமுக வேட்பாளரை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்டபோது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், பாதியிலேயே பேச்சைக் கைவிட்டுக் கிளம்பினார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

திண்டுக்கல் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராகப் போட்டியிடுகிறார் திமுகவைச் சேர்ந்த வேலுச்சாமி. இவரை ஆதரித்து, நேற்று (ஏப்ரல் 14) ஒட்டன்சத்திரம், புதுஆயக்குடி, நிலக்கோட்டை, ஸ்ரீராமபுரம் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.

புது ஆயக்குடி திண்டுக்கல் சாலையில் வைகோ பிரச்சாரம் மேற்கொண்டபோது, அவருடன் திமுக துணைப்பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி எம்எல்ஏ, திமுக கொறடாவான ஒட்டன்சத்திரம் எம்எல்ஏ சக்ரபாணி ஆகியோர் உடன் இருந்தனர். ஆனால், வேட்பாளர் வேலுச்சாமி பிரச்சார வாகனத்தில் இல்லை.

புது ஆயக்குடி மக்களிடையே சுமார் 15 நிமிடங்களுக்கும் மேலாகப் பேசினார் வைகோ. அப்போது, அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் அங்கு நின்ற வாகனங்கள் தொடர்ச்சியாக ஹாரன் அடிக்கத் தொடங்கின. இதனால் அவரது பேச்சு தடைபட்டது. இதையடுத்து, தான் போக்குவரத்துக்கு இடையூறு செய்ய விரும்பவில்லை என்று கூறிய வைகோ பாதியிலேயே பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு கிளம்பினார்.

நேற்றிரவு ஆயக்குடியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் திண்டுக்கல் வேட்பாளர் வேலுச்சாமியை ஆதரித்துப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய வைகோ, மக்களைக் காக்கிற ராணுவ வீரர்களின் உயிர் தியாகத்தை வைத்து மத்திய அரசு வாக்கு அரசியல் செய்வதாகக் கூறினார். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்து மதங்களையும் மதிப்பதாகத் தெரிவித்தார்.

“மோடி அரசு கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன்களைத் தள்ளுபடி செய்து அவர்களுக்கு வரிச்சலுகை கொடுத்தது. ஆனால் கஜா புயலில் இறந்தவர்கள், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மோடி எந்தவித ஆறுதலும் சொல்லவில்லை. அப்படிப்பட்டவர் தற்போது தமிழகத்துக்கு வர என்ன தகுதி இருக்கிறது. நீட் தேர்வால் தமிழகத்தில் அனிதா என்ற மாணவி பலியானார். எனவே காங்கிரஸ்-திமுக தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும். கல்வி உரிமை அந்தந்த மாநிலத்துக்கே வழங்கப்படும்” என்று பேசினார்.

திங்கள், 15 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon