மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 3 ஜூலை 2020

ஆணாதிக்கம் எனும் அவலம்!

ஆணாதிக்கம் எனும் அவலம்!

இந்தியாவில் உழைக்கும் வயது பெண்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் பெண்கள் உழைப்புப் படையில் இருக்கிறார்கள். அதே சமயத்தில் வீட்டு வேலைகளில் பெண்களே மிகுதியான அளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நாட்டின் மக்கள்தொகையில் 0-6 வயதுக் குழந்தைகளின் பங்கு 13.5 விழுக்காடு. 0-6 வயதுக் குழந்தைகளில் 1,000 ஆண் குழந்தைகளுக்கு வெறும் 918 பெண் குழந்தைகளே உள்ளனர். நாட்டின் எந்தவொரு மாநிலமும் பெண் குழந்தைகளுக்குச் சாதகமானதாக இல்லை என்பதை இந்த விகிதம் காட்டுகிறது. இது கவலைதரக் கூடியது. ஹரியானா போன்ற மாநிலத்தில் ஆணாதிக்கத்தின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கிறது என்றால், அங்கு 1,000 ஆண் குழந்தைகளுக்கு வெறும் 834 பெண் குழந்தைகளே உள்ளனர்.

பெண் குழந்தைகள் மீது இன்றும் பல்வேறு வன்முறைகளும், உரிமை மீறல்களும் நடத்தப்படுகின்றன. நாட்டில் நடக்கும் மொத்த திருமணங்களில் குழந்தைத் திருமணங்களின் பங்கு 2005-06ஆம் ஆண்டு 26.5 விழுக்காடாக இருந்தது; அது 2015-16இல் 11.9 விழுக்காடாகக் குறைந்திருக்கிறது. இது வரவேற்கத்தக்க முன்னேற்றம் என்றாலும், இன்னும் 12 மாநிலங்களில் இதன் பங்கு தேசிய சராசரியைவிட அதிகமாக இருக்கிறது. 15-19 வயதுப் பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்துவைக்கும் போக்கு ஊரகப் பகுதிகளில்தான் அதிகமாக இருக்கிறது. ஆனால், நகர்ப்புறங்களிலும் பெண் குழந்தைத் திருமணம் என்பது பரவலாகவே உள்ளது.

பொதுவாகவே இந்திய சமுதாயம் பெண்களை எப்படி நடத்துகிறது? உலக நாடுகளில் ஆண்களும் பெண்களும் தங்கள் நேரத்தை எந்தெந்த வேலைகளுக்குச் செலவிடுகின்றனர் எனும் ஆய்வு ஒன்றை Organization for Economic Cooperation and Development (OECD) எனப்படும் 36 உலக நாடுகளின் அரசுகள் உறுப்பினர்களாக இருக்கும் பொருளாதார மேம்பாட்டுக்கான பன்னாட்டு நிறுவனம் 2014ஆம் ஆண்டில் மேற்கொண்டது.

இந்தியப் பெண்கள் வாரம் ஒன்றுக்குச் சராசரியாக 35 மணி நேரம் வீட்டுவேலை பார்ப்பதாகவும், ஆண்கள் ஒரு வாரத்தில் வெறும் 2 மணி நேரமே வீட்டுவேலை பார்ப்பதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது. அது மட்டுமல்ல, இந்த ஆய்வில் இடம்பெற்ற 24 நாடுகளில் வாழும் பெண்களில் இந்தியாவில் வாழும் பெண்கள்தான் அதிக நேரம் வீட்டுவேலையில் ஈடுபடுவதும் தெரியவருகிறது.

இந்தியாவின் உழைப்புப் படையில் (labour force) பெண்களின் பங்கு குறைவாக உள்ளது எனப் பன்னாட்டு தொழிலாளர் அமைப்பின் (International Labour Organization – ILO) தரவுகள் கூறுகின்றன. உழைக்கும் வயதில் உள்ள பெண்களில், 27 விழுக்காடு பெண்களே உழைப்புப் படையில் பங்கேற்று வேலை பார்க்கவோ அல்லது வேலைதேடவோ செய்கிறார்கள். பெரும்பான்மையான பெண்கள் நாள்தோறும் பார்க்கும் வீட்டுவேலையை ‘வேலை’ என்றே இந்த தேசம் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.

ஆனால், தங்களுடைய உரிமைகளுக்காகப் பெண்கள் நடத்தும் போராட்டங்கள் தொடர்ந்து அதிகரித்தும், வலுப்பெற்றுக் கொண்டும் வருவது, சமூகத்தில் பெண்களுக்குச் சாதகமான பல நேர்மறை மாற்றங்கள் நிச்சயமாக நடக்கும் என்று நம்பிக்கை அளிக்கிறது.

திங்கள், 15 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon