மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 4 ஜூலை 2020

ராணுவம் தரும் வாய்ப்பு! - காம்கேர் கே.புவனேஸ்வரி

ராணுவம் தரும் வாய்ப்பு! - காம்கேர் கே.புவனேஸ்வரி

எந்தப் பாதையில் உங்கள் பயணம்? - 46

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 44 வீரர்கள் வீர மரணத்துக்குப் பிறகு அந்த வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் கதறி அழும் சீன்கள் தொலைக்காட்சியில் மனதை உருக்கிக்கொண்டிருந்தது. அந்தக் காலகட்டத்தில் என் உறவினர் வீட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சி.

என் உறவினர் மகனுக்கு 15 வயதாகிறது. அவனுடைய லட்சியமே ராணுவத்தில் சேருவதுதான். அதை அவன் தன் 10 வயதிலிருந்தே சொல்லிக்கொண்டிருக்கிறான்.

அவன் பெற்றோருக்கு அதில் அவ்வளவு நாட்டமில்லை. எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவன் தன் கொள்கையில் மாறுவதாக இல்லை.

சமீபத்திய செய்தியைக் கேள்விப்பட்டதிலிருந்து அவர்களுக்கு ஒரே சோகம். காரணம் செய்தியின் தாக்கம் ஒருபுறம், மறுபுறம் தங்கள் மகனின் ராணுவத்தில் சேருகின்ற விருப்பத்தின் தீவிரம்.

தன் அம்மா சோகமாக இருப்பதைக் கவனித்தவன், ‘அம்மா இதையெல்லாம் காரணம் காட்டி என்னை ராணுவத்தில் சேராமல் இருக்கச் செய்துவிடாதே… நம்முடைய விதி எங்கு எப்போது முடியனும்னு இருக்கோ அங்கேதான் முடியும்… எல்லோருமே இப்படி பயந்துகொண்டிருந்தால் யார்தான் நாட்டை காப்பாற்றுவது…’ என்றானாம்.

‘அதுக்கு நான் பெத்த பிள்ளைதான் கிடைத்ததா?’ என்று சொன்ன சொன்னவளிடம் ‘யாரோ ஒரு சிலர் ராணுவத்திலும் சேர்ந்தால் தானே நாட்டை காப்பாற்ற முடியும்… அந்த யாரோ ஒரு சிலரில் நானும் ஒருவனாக இருக்கிறேன்…’ என்று ஒரே வாக்குவாதமாம்.

இப்படி பெரிய மனிதன்போல் அவன் பேசுவதை நினைத்து மகிழ்வதா அல்லது ஒரே மகனை ராணுவத்துக்கு அனுப்பி விட்டு வருத்தப்பட்டுக் கொண்டிருப்பதா எனத் தெரியவில்லை என போனில் என்னிடம் அழுதுகொண்டே பேசியவர்களை என்ன சொல்லி தேற்றுவது?

ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்குச் சேவை செய்யும் பணியில் நாட்டம் இருப்பதும் வரவேற்கத்தக்கதே. பெற்றோருக்கு அதுகுறித்த விழிப்புணர்வு இருந்தால் பயம் இல்லாமல் அந்தத் துறைக்குத் தங்கள் பிள்ளைகளை அனுப்பிவைப்பார்கள்.

இந்தியத் துணைக் கண்டத்தின் பாதுகாப்புக் கட்டமைப்பில் முதலிடம் வகிக்கிறது நமது ராணுவத் துறை. இதில் சேர்ந்து பணியாற்றுவது பல இளைஞர்களின் கனவு. இந்திய ராணுவத்தின் முப்படைகளான விமானப்படை, கடற்படை, தரைப்படையில் ஆர்வம்காட்டுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது

எப்படிச் சேருவது?

ப்ளஸ் 2 முடித்த மாணவர்கள் நேரடியாக ராணுவத்தில் சேரலாம். என்.டி.ஏ. (NDA - National Defence Academy) தேர்வு மற்றும் டி.இ.எஸ். (TES-Technical Entry Scheme) தேர்வு மூலம் ராணுவப் பணிகளில் இளைஞர்கள் சேர்த்துக்கொள்ளப் படுகின்றனர். மேலும் விவரங்களுக்கு www.nda.nic.in, www.upsconline.nic.in ஆகிய இணையதளங்களைப் பார்வையிடவும்.

NDA தேர்வு என்பது Army Wing மற்றும் Navy & Air Force Wing என்ற இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. Army wing தேர்வுக்கு ப்ளஸ் டூவில் எந்தப் பிரிவை வேண்டுமானாலும் எடுத்துப் படித்திருக்கலாம். Navy & Air Force Wing தேர்வுக்கு இயற்பியல் மற்றும் கணிதப் பிரிவை எடுத்து படித்திருக்க வேண்டும்.

TES தேர்வுக்கு இயற்பியல், வேதியியல், கணிதம் பாடப்பிரிவில் 70% மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஓராண்டு அடிப்படை ராணுவப் பயிற்சி, மூன்று ஆண்டு தொழில்நுட்ப பயிற்சி, பணி வழங்கப்பட்ட பிறகு ஓராண்டு பயிற்சி என மொத்தம் ஐந்து ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படும். பிறகு, முறைப்படி ராணுவப் பணியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

கற்போம்… கற்பிப்போம்!

ஊர் சுற்றியும் சம்பாதிக்கலாம்!

திங்கள், 15 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon