மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 3 ஜூலை 2020

ஆட்சி மாறும்: அதிகாரிகளை எச்சரித்த சந்திரபாபு

ஆட்சி மாறும்: அதிகாரிகளை எச்சரித்த சந்திரபாபு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி நடப்பதாகத் தேர்தல் அதிகாரிகளுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு விவாதம் செய்துள்ளதோடு, மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கே மாற வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் 17ஆவது மக்களவையைத் தேர்ந்தெடுப்பதற்கான பொதுத் தேர்தல் தொடங்கியுள்ளது. ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்தத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 11ஆம் தேதி நடந்து முடிந்துள்ளது. தேர்தலுக்கு முன்பிருந்தே மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது நம்பிக்கை இல்லை, வாக்குச் சீட்டு முறையைப் பின்பற்ற வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்த பிறகு இந்த விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது. முதல்கட்ட தேர்தல் நடந்தபோது ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகள் மற்றும் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது.

பல்வேறு சர்ச்சைகளுடன் ஆந்திராவில் வாக்குப்பதிவு முடிந்துள்ளது. தேர்தல் முடிந்த இரண்டே நாட்களில் ஏப்ரல் 13ஆம் தேதி தலைமைத் தேர்தல் ஆணையரை, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் சந்தித்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். ஆந்திராவில் 30 முதல் 40 விழுக்காடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேலை செய்யவில்லை என்றும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது நம்பிக்கை இல்லை எனவும் கூறி பழையபடி வாக்குச் சீட்டு முறைக்கே மாற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். தேர்தல் ஜனநாயகத்தைக் காப்பாற்ற வாக்குச் சீட்டு முறைக்கு மாற வேண்டியது மிகவும் அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், “ஜெர்மனி போன்ற முன்னேறிய நாடுகள் கூட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கைவிட்டுள்ளன. ஜெர்மனியில் 2005 முதல் 2009 வரையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருந்தன. ஆனால், இப்போது மீண்டும் வாக்குச்சீட்டு முறைதான் பின்பற்றப்படுகிறது. நெதர்லாந்தில் 1990 முதல் 2007 வரையிலும், அயர்லாந்தில் 2002 முதல் 2004 வரையிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால், அதன்பிறகு அந்த நாடுகளும் அதனை கைவிட்டுவிட்டன. உலகில் உள்ள 191 நாடுகளில் வெறும் 18 நாடுகளில் மட்டும்தான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்திய நாடுகள் எல்லாம் ஏன் அந்த முறையைக் கைவிட்டுவிட்டன என்று யோசிக்க வேண்டும்” எனவும் கூறியுள்ளார்.

தேர்தல் அதிகாரிகளை எச்சரித்த சந்திரபாபு நாயுடு

“தேர்தல் ஆணையம் தனித்த அதிகாரம் கொண்ட அமைப்பு. ஆனால், பாஜக அரசின் வழிகாட்டுதலின்படி தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது. இது ஜனநாயகத்திற்குப் பேராபத்தானது. இந்த போக்கைத் தேர்தல் ஆணையம் மாற்றிக்கொள்ள வேண்டும்” என ஊடகங்களிலும், தேர்தல் அதிகாரிகளிடம் பேசுகையில் வெளிப்படையாகவே கூறி வருகிறார் சந்திரபாபு நாயுடு. “4,583 வாக்குச் சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடி நடந்ததாக அரசுத் தரப்பு அறிக்கைகளே கூறுகின்றன. எனவே 150 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு மறு தேர்தல் நடத்த வேண்டும்” எனத் தேர்தல் அதிகாரிகளிடம் வலியுறுத்தி விவாதம் செய்துள்ளார்.

ஆனால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடே நடக்கவில்லை என்று மாநில தேர்தல் ஆணையர் பதிலளித்துள்ளார். தேர்தல் அதிகாரிகளுடன் இதுதொடர்பாக நடந்த விவாதத்தில், டெல்லியில் கைது செய்யப்பட்ட நிதி சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ரமேஷ் பவாவைக் குறிப்பிட்டுத் தேர்தல் அதிகாரிகளுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளார்.

ஐ.எல் & எஃப்.எஸ் நிதி சேவைகள் முன்னாள் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ரமேஷ் பவா டெல்லி வட்டாரத்தில் மிகுந்த செல்வாக்குடைய நபராக இருந்தவர். ரமேஷ் பவாவை அணுகினாலே வங்கிகளில் எளிதில் கடன் கிடைத்துவிடும். ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் முன்பே கடன் உறுதியாகிவிடும் என்ற அளவுக்குப் பெருநிறுவனங்களின் நம்பிக்கைக்குரிய நபராக இருந்தவர் அவர். அத்தகைய செல்வாக்கு மிக்க நபரைக் கடன் விவகாரத்தில் தீவிர மோசடி புலனாய்வு ஆணையம் கைது செய்துள்ளது. உச்ச நீதிமன்றமும் அவரின் கைதை தடை செய்யக்கோரி கொடுக்கப்பட்ட மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.

இந்த விவகாரத்தை தேர்தல் அதிகாரிகளிடம் குறிப்பிட்டு, “கார்ப்பரேட்டுகள் முதல் அரசியல் வட்டாரங்கள் வரை மிகுந்த செல்வாக்குடைய நபராக இருந்த ரமேஷ் பவாவே தற்போது சிறைக்குச் சென்றுவிட்டார். நீங்கள் எல்லாம் எம்மாத்திரம்? நாளை ஆட்சிமாற்றம் வரும் என்பதை நினைவில்வைத்துக் கொள்ளுங்கள். நேர்மையாகச் செயல்படாமல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக மோசடிகளை செய்துவரும் அதிகாரிகள் கட்டாயம் சிறைக்குச் செல்ல நேரிடும்” என்று எச்சரித்துள்ளார். இந்தச் சூழலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நேற்று டெல்லியில் 21 எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ஜனநாயகம் காப்போம் என்ற நிகழ்ச்சியை நடத்தியுள்ளன. முன்னெப்போதும் இல்லாத வகையில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் இந்தத் தேர்தலில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

திங்கள், 15 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon