மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 11 ஜூலை 2020

தேர்தல்: மக்கள் கவனிக்கும் அந்த மூன்று விஷயங்கள்!

தேர்தல்: மக்கள் கவனிக்கும் அந்த மூன்று விஷயங்கள்!

மக்களின் மனநிலையைக் காட்டும் சந்திப்புகள்: 2 – நரேஷ்

நிச்சயமாக இந்தத் தேர்தலில் இரண்டு பிரதான கட்சிகளில் ஒன்றுதான் வெற்றிபெறும் என்பதை எழுதிவைத்துக் கொள்ளலாம். ஏனெனில், கள நிலவரப்படி, 70 சதவிகித ஓட்டு வங்கியைத் தன்னகத்தே வைத்திருக்கும் சாமானியர்களின் மனதில் மாற்றத்துக்கான விதை துளிர்விடவில்லை. அவர்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். ஆனால், அதற்கான முயற்சியில் இறங்கவில்லை. மக்களின் குரல் இதை உணர வைத்தது.

ஏன் நீங்க திமுக, அதிமுக தவிர வேற கட்சிகளுக்கு ஓட்டு போட மாட்டீங்கறீங்க?

“இந்த ரெண்டு பேருமே ஏற்கனவே நெறய கொள்ளையடிச்சிருக்காங்க. அதனால கொஞ்சமாவது நமக்கு ஏதுனா செய்வாங்க. புதுசா ஒருத்தன் வந்தா அவன் இவங்க அளவுக்கு கொள்ளையடிச்சப்புறம்தான் அடுத்த வேலைகளையே செய்வான். அதனாலதான்..!”

அரசியல் என்பது கொள்ளையடிப்பதற்கானது என்பதை மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டார்கள். “கொள்ளையடிச்சது போக எங்களுக்கும் ஏதாவது செய்யணும்” என்பதுதான் அவர்களின் அதிகபட்ச எதிர்பார்ப்பாக இருக்கிறது. இன்னொரு புறம் வலிமையான மாற்றம் முன்வைக்கப்பட்டால், அதை அவர்கள் உணர்ந்தவரையில் உள்வாங்கிக்கொள்கிறார்கள், ஆதரவளிக்கிறார்கள். உதாரணம் - விஜயகாந்த்.

துரதிர்ஷ்டவசமாக, இப்போது மக்கள் மாற்றத்தைக் கண்டு பயப்படுவதற்குக் காரணமும் அவர்தான்.

“விஜயகாந்த் வந்தப்போ தமிழ்நாட்டுல அவருக்கு பெரிய மதிப்பிருந்துச்சு தம்பி. தா… இங்கன எல்லாருக்கும் அவர புடிச்சிருந்தது. அவர் எப்படி உள்ள நுழைஞ்சாரோ, அப்படியே இன்னிவரைக்கும் இருந்திருந்தார்னா சத்தியமா இன்னிக்கி அவருதான் மொதலமைச்சரு. மனுசன் குடுச்சுக்கிட்டு உளறிக்கிட்டு இருந்ததால அவர் மேல எங்களுக்கு நம்பிக்கையே போச்சு. அதனாலதான் புதுசா ஆரு வந்தாலும் தயக்கமா இருக்கு.”

மக்களுக்குத் தேவை ஒரு ‘முகம்’!

ஒரு புதிய இயக்கம் தோன்றுகிறது என்றால், இக்காலச் சூழலில் அவர்கள் கடந்துவர வேண்டிய பாதை மிக மிக நீளமானது. அதில் முக்கியமானது ’முகம்’. அந்த இயக்கத்தின் அல்லது கட்சியின் சார்பாக எந்த முகம் முன்னிறுத்தப்படுகிறது என்பதை மக்கள் கூர்மையாகக் கவனிக்கிறார்கள். இங்கே கூட்டணிகள் எவ்வளவு வைக்கப்பட்டாலும், அந்தக் கூட்டணியின் ஒட்டுமொத்த அடையாளமாக ஒருவர்தான் முன்னிறுத்தப்படுகிறார். மக்களுக்கு திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி என்பது மட்டும்தான் தெரியும். திமுக கூட்டணி என்றால் ஸ்டாலின்தான் அந்த முகம்.

தற்போதைய சூழலில் அதிமுக கூட்டணிக்கு முன்னிறுத்தும்படியாக அப்படியொரு முகம் கிடையாது. அதுவே அவர்கள் மிகப் பெரிய பலவீனம். எடப்பாடி என்ற முகம் மக்கள் மத்தியில் எடுபடவில்லை. அப்படியொரு முகம் விஜயகாந்துக்கு இருந்தது. அந்த முகம் மாற்று அரசியலின் முகம் என்று பார்க்கப்பட்டது.

சின்னத்தின் முக்கியத்துவம்

முகத்துக்கு அடுத்ததாகச் சின்னம். இங்கே உதயசூரியன் என்றால் அது அண்ணாவின் தொடர்ச்சி. இரட்டை இலை என்றால் அது எம்.ஜி.ஆரின் தொடர்ச்சி. மக்கள் இவ்வளவு எளிமையாகத்தான் அதை புரிந்துவைத்திருக்கிறார்கள். அந்தத் தொடர்ச்சியை மிக வலிமையாக எடுத்துவந்தவர்கள் கருணாநிதியும் ஜெயலலிதாவும். ஒருகட்டத்தில் விஜயகாந்த் கட்சியின் முரசு சின்னமும் முக்கியத்துவம் செல்வாக்கைப் பெற்றது. அந்தச் சின்னம் மக்களின் மத்தியில் பதிய 15 ஆண்டுகள் ஆனது. அதற்கான உழைப்பும் அசாத்தியமானது. அது பதிந்து ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இரு திராவிட முகங்களின் மீதும் நம்பிக்கை இழந்த மக்கள், விஜயகாந்த் எனும் ஆளுமையின் பக்கம் திரும்பினார்கள். ஆனால், அந்த மாற்று முகம் ஏமாற்றியது. அதன் விளைவாக மக்கள் மத்தியில் மாற்றத்திற்கான ஏக்கம் தணிந்தது.

“முதல்ல ரெண்டு தொகுதியில தேமுதிக ஜெயிச்சுது. அதனால அங்கீகாரம் கிடச்சுது. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா எங்களுக்கு நம்பிக்கை வந்தது. எல்லாருக்கும் முரசுங்குற சின்னம் தெரிஞ்சது. சூரியனும் இலையும் புடிக்கலைன்னா முரசு இருக்குன்னு இருந்தோம். இப்போ அந்த நம்பிக்கை இல்ல” என்றார் தேமுதிக தொண்டர் ஒருவர். அவரே இப்போது திமுக கூட்டணிக்கு ஓட்டுப் போடப்போவதாகச் சொன்னார்.

மாற்று அரசியலை முன்வைப்பவர்கள் கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான படிகள் இவை: முதலில் முகம் வெளிப்படவேண்டும். அடுத்ததாகச் சின்னம் வேண்டும். இவைதான் வெற்றியைத் தீர்மானிப்பதில் மிகப் பெரிய பங்காற்றக்கூடியவை.

இவற்றுக்கு அடுத்த இடத்தில் இன்னும் ஆழமாக, மறைமுகமாக இருக்கும் இன்னொரு படி சாதி. எந்தப் பூச்சினாலும் இதை மறைக்க முடியாது. குறிப்பிட்ட சில தொகுதிகளுக்கான பயணத்தில் இந்தப் படிநிலையின் தீவிரத்தைத் தீர்க்கமாக உணர முடிந்தது.

அந்த உரையாடல்களை அடுத்தடுத்த கட்டுரைகளில் காண்போம்.

அரசியலில் மாற்றம் என்பது ஏன் இன்னும் சாத்தியமாகவில்லை?

சாத்தியமாக இன்னும் எத்தனை காலம் ஆகும்?

(தொடர்ந்து அலசுவோம்...)

சாமானிய மக்களின் நாடித் துடிப்பு!

திங்கள், 15 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon