மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 23 செப் 2019

கஷ்டப்பட்டுப் பேசும் விஜயகாந்த்: காத்திருக்கும் தொண்டர்கள்!

கஷ்டப்பட்டுப் பேசும் விஜயகாந்த்: காத்திருக்கும் தொண்டர்கள்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று (ஏப்ரல் 15) சென்னையில் தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னை ஆகிய மூன்று தொகுதிகளுக்கும் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.

விஜயகாந்த் பிரச்சாரத்துக்கு வருவாரா மாட்டாரா என்று தேமுதிக தொண்டர்கள் ஏங்கியிருந்த நிலையில், ஏப்ரல் 2 ஆம் தேதி மின்னம்பலத்தில் வெளியிட்ட செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டிருந்தோம்:

“சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின் விஜயகாந்தால் பழையபடி செயல்பட முடியவில்லை என்பதே உண்மை. கூட்டணிப் பேச்சுவார்த்தை, உடல் நலம் விசாரிப்பு என்று அவரை மையமாகவே வைத்து எல்லாம் நடந்தது. ஆனால், விஜயகாந்தால் இப்போது பேசவே முடியவில்லை. அதற்காகத்தான் தினமும் காலை மாலை இருவேளை பேச்சுப் பயிற்சி நடக்கிறது. ஒரு சில வார்த்தைகளாவது அவரைப் பேச வைத்து தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி கட்டத்தில் அவரை ஈடுபடுத்துவதற்கான அத்தனை முயற்சிகளும் நடக்கின்றன. கூட்டணிக்காக வாக்குகள் கேட்டு விஜயகாந்த் பேசும் ஒரு வீடியோவை வெளியிடலாம் என்றும் ஒரு திட்டமிருக்கிறது” என்று தேமுதிக தலைமைக் கழக நிர்வாகிகள் கூறியதாகத் தெரிவித்திருந்தோம்.

அதுபோலவே ஏப்ரல் 9 ஆம் தேதி செய்தியாளருக்கு பேட்டியளிப்பது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டார் விஜயகாந்த். அதில்,

“நான் நன்றாக இருக்கிறேன். அமெரிக்கா சென்றுவந்த பிறகு எனது உடல்நிலையும் நன்றாக இருக்கிறது. கூடிய விரைவில் நான் பிரசாரத்தில் கலந்துகொள்வேன். என்ன பேசுவேன் என்பதை அங்கு வந்து கேட்கச் சொல்லுங்கள். மருத்துவரின் அறிவுரையின்படி தொடா்ந்து பிரசாரங்களில் பங்கேற்பேன்” என்றும்,

“தமிழகத்தில் அதிமுக கூட்டணி தான் வெற்றி பெறும். திமுக கூட்டணி தோற்கும். திமுக என்றாலே தில்லு முல்லு கட்சி என்று தான் அா்த்தம். அதிமுக கூட்டணிக்கும், திமுக கூட்டணிக்கும் இடையேயான போட்டி என்பது, தா்மத்திற்கும், அதா்மத்திற்கும் இடையே நடைபெறும் போட்டி. இதில் தா்மம்தான் வெற்றி பெறும். மோடி நல்லவா், அவா் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்” என்றும் பதிலளித்தார்.

இந்த நிலையில் இன்று மாலை சென்னையில் விஜயகாந்த் பிரச்சாரம் செய்ய இருப்பதை முன்னிட்டு நேற்று இரவு ஒரு வீடியோவை ரிலீஸ் செய்திருக்கிறார் விஜயகாந்த்

“எனக்காகப் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் என் அன்பு கலந்த நன்றிகள். நமது சின்னம் முரசு. நாம் நான்கு தொகுதிகளில் போட்டியிடுகிறோம். கூட்டணிக் கட்சிகளின் அவரவர் சின்னங்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார் விஜயகாந்த்.

நாளை பிரச்சாரம் முடியும் நிலையில் இன்று விஜயகாந்த்தின் பிரச்சாரம் சென்னையில் நடைபெறுவதை ஒட்டி அவரைப் பார்ப்பதற்காக தமிழகம் முழுவதும் இருந்தும், சென்னையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இருந்து அதிகமாகவும் தேமுதிகவினர் சென்னைக்குத் திரளத் தொடங்கியுள்ளனர்.

இன்று மாலை 4 மணிக்கு தனது வீட்டில் இருந்து புறப்படத் திட்டமிட்டுள்ள விஜயகாந்த், வில்லிவாக்கம் பேருந்து நிலையம் தொடங்கி ஆர்.கே.நகரில் நிறைவு செய்யத் திட்டமிட்டிருக்கிறார் என்கிறார்கள் தேமுதிகவினர்.

வீடியோவிலேயே மிகவும் கஷ்டப்பட்டு பேசுவதும், நிறைய காட்சிகள் எடுத்து கட் செய்து எடிட் செய்யப்பட்டுள்ளதும் தெரிகிறது. இந்நிலையில் விஜயகாந்தை கஷ்டப்படுத்த வேண்டுமா என்ற கேள்வியும் அக்கட்சியின் நிர்வாகிகள் சிலரிடையே எழுந்துள்ளது.

அதேநேரம், ‘ரொம்ப நேரம் அவரால பேச முடியாது. இன்ஃபெக்‌ஷன் பிரச்னைகளும் இருக்கு. எனவே ஜாக்கிரதையா பாத்துக்கங்க” என்று மருத்துவர்களும் சொல்லியுள்ளனர்.

இதையெல்லாம் தாண்டி விஜயகாந்துக்கு எப்போதுமே மக்களைச் சந்திப்பதில் அலாதியான மகிழ்ச்சி உண்டு. அந்த வகையில் தேர்தல் பிரசாரம் என்ற பெயரில் பொதுமக்களையும், தொண்டர்களையும் சந்தித்தால் மன ரீதியில் அவர் தெம்பாகி அதன் மூலம் உடல் நலனிலும் முன்னேற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கிறார்கள் விஜயகாந்துக்கு நெருக்கமானவர்கள்.

தொண்டர்களின் உற்சாகத்துக்காக மீண்டும் தன்னைக் கஷ்டப்படுத்திக்கொள்கிறார் விஜயகாந்த்.

திங்கள், 15 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon