மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 19 செப் 2020

நாங்கள் இந்துக்கள் இல்லையா? முத்தரசன்

நாங்கள் இந்துக்கள் இல்லையா? முத்தரசன்

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக ராமலிங்கம் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று (ஏப்ரல் 14) மாலை பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய முத்தரசன், “வரும் மக்களவைத் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென்பது காங்கிரஸுக்கும் பாஜகவிற்கும் இடையேயான தேர்தல் போட்டியல்ல. தேசிய நலன் கருதி கொள்கை அடிப்படையில் யுத்தம் உருவாகியுள்ளது. 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 31 விழுக்காடு வாக்குகளைப் பெற்று ஆட்சியைப் பிடித்தது. அவர்களுக்கு பெரும்பான்மையான 69 விழுக்காடு வாக்குகள் கிடைக்கவில்லை.

மனுதர்மத்திற்கு எதிராக யுத்தம் கண்டு போராடிய பெரியார், அம்பேத்கர், காந்தி, கலைஞர் போன்றவர்கள் வாழ்ந்த இம்மண்ணில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை சுதந்திரமாக செயல்படவிடாமல் பாசிச பாஜக தடுத்து வருகிறது. பாஜகவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும். ஹிட்லர் போல ஆட்சி செய்தவர்கள் தற்கொலை செய்துகொண்ட வரலாறு இம்மண்ணில் நிகழ்ந்துள்ளது. பிரதமர் மோடி அம்பேத்கருக்கு வணக்கம் செலுத்துவார்; ஆனால் அம்பேத்கர் உருவாக்கிய சட்டத்தை மதிக்கமாட்டார்.

இங்கே இருப்பவர்கள் எல்லாம் இந்துக்கள் இல்லையா? இந்துத்துவாவிற்குதான் நாங்கள் எதிரியே தவிர இந்துக்களுக்கு அல்ல. வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இந்தியாவில் இன்று சாதி, மத மோதலை உருவாக்கி வருகின்றனர். நாடு பிளவுபட்டு மதக் கலவரங்கள் உருவானபோது இந்துக்கள், இஸ்லாமியர்கள் என இருதரப்பினருமே கொல்லப்பட்டனர். அப்போது, அமைதிநிலை திரும்பும்வரை காந்தி போராட்டம் நடத்தினார். சுதந்திரம் அடைந்து ஐந்து மாதங்களிலேயே அவரை சுட்டுக்கொன்றனர். இதற்கு காரணம், இஸ்மாயில் என்று பச்சை குத்திய கோட்சே.

நடிகர் சிவாஜி கணேசனுக்கு கொடுத்த செவாலியர் பட்டத்தை மோடிக்கு கொடுத்துவிடலாம். மோடியின் தேர்தல் பிரச்சாரம் அனைத்தும் நாடகம்தானே. பணமதிப்பழிப்பால் கறுப்பு பண ஒழிப்பு, விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பு, வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் என இந்தியர்கள் எதிர்பார்த்தவை கொடுக்கப்பட்டதா? எவ்வளவு எதிர்ப்பு வந்தாலும் எட்டுவழிச்சாலையை நிறைவேற்றி 20 விழுக்காடு கமிஷன் பெறவேண்டும் என தமிழக முதல்வர் முயற்சிக்கிறார். ஆனால் அதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். பொள்ளாச்சியில் நடந்தது சட்ட ஒழுங்கா? தூத்துக்குடியில் 13 அப்பாவிகள் சுட்டுக்கொல்லப்பட்டது சட்ட ஒழுங்கா? இவையெல்லாம் சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் இல்லையா?” என்று பேசினார்.

திங்கள், 15 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon