மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 25 ஜன 2021

திமுக ரூ.2000 கோடி பதுக்கி வைத்துள்ளது: ஜெயக்குமார்

திமுக ரூ.2000 கோடி பதுக்கி வைத்துள்ளது: ஜெயக்குமார்வெற்றிநடை போடும் தமிழகம்

வாக்காளர்களுக்கு விநியோகிக்க திமுக ரூ.2000 கோடியை பதுக்கி வைத்துள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் நாளையுடன் பிரச்சாரம் ஓயவுள்ள நிலையில், பல இடங்களில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்படுவதாக தகவல் வெளியாகிக்கொண்டிருக்கிறது. பணப் பட்டுவாடாவில் ஈடுபட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல் துறையின் பாதுகாப்புடனே வாக்காளர்களுக்கு அதிமுக பணப் பட்டுவாடா செய்வதாகவும் அதனை தேர்தல் ஆணையம் தடுக்கவில்லை எனில் பொதுமக்கள் உதவியுடன் அதனை தடுத்து நிறுத்துவோம் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்திருந்தார்.

ஆனால் திமுகவின் மீதே பணப் பட்டுவாடா குற்றச்சாட்டை வீசியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார். வடசென்னை தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜுக்கு ஆதரவாக நேற்றிரவு (ஏப்ரல் 14) ராயபுரம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஜெயக்குமார், அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், “துரைமுருகனை சார்ந்தோருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையால், பணமூட்டையை இருக்கும் இடத்திலிருந்து நகர்த்த முடியாமல் திமுகவினர் இருந்துவருகின்றனர். இன்று இரவு அதனை கொண்டுசெல்லவுள்ளதாக தகவல் வந்துள்ளதால் பறக்கும் படையினரை அலர்ட்டாக இருக்கின்றனர். பணமூட்டையுடன் வெளியே வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம், ஆனால் இதுவரை வரவில்லை. அப்படி வந்தால் அரசு கருவூலத்திற்கு ரூ.2000 கோடி கிடைக்கும். அந்தப் பணத்தில் பாலம் உள்ளிட்ட நலத்திட்ட பணிகளை நிறைவேற்றுவோம்” என்று தெரிவித்தார்.

ஏற்கனவே எதிர்க்கட்சியினருக்கு சொந்தமான இடங்களில் மட்டுமே வருமான வரித் துறையினர் சோதனை நடத்திவருவதாகவும், ஆளுங்கட்சியினருக்கு சொந்தமான இடங்களில் பெயரளவுக்கு சோதனை நடந்துவருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. இந்த நிலையில் எதிர்க்கட்சியின் மீதே மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார் அமைச்சர்.

திங்கள், 15 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon