மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 ஏப் 2019

அத்வானிக்கு ஜோஷி கடிதம்: உண்மையா, போலியா?

அத்வானிக்கு  ஜோஷி கடிதம்: உண்மையா, போலியா?

டி.எஸ்.எஸ். மணி

12 -04 -2019 தேதியிட்டு, முரளி மனோகர் ஜோஷி, லால் கிருஷ்ண அத்வானிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதம் ஜோஷியின் அரசு முத்திரை கொண்ட லெட்டர் பேடில் எழுதப்பட்டுள்ளது. முதல் கட்டத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடந்து முடிந்த பின் எழுதப்பட்டுள்ளது. கடிதம் இந்தியில் உள்ளது. கடிதம் வெளிவந்து, இந்தியாவின் இதய பகுதியான இந்திப் பகுதியில், பரவலாகப் பரபரப்பை ஏற்படுத்திவரும் சூழலில், மத்திய உள்துறை அதிகாரிகளிடம் விசாரித்ததில், அந்தக் கடிதம் போலியானது என கூறினார்கள். ஆனால், எழுதியவர் என்று கூறப்படும், முரளி மனோகர் ஜோஷி அது போலி என்று இதுவரை கூறவில்லை.

கடிதம் கீழ்க்கண்டவாறு உள்ளது:

12 -04 -2019

அத்வானிஜி,

முதல் கட்டத் தேர்தல் முடிந்த நிலையில், முடிவுகள் ஓரளவு தெளிவாக தெரியத் தொடங்கிவிட்டன. நேற்று இரவு, தேவகி நந்தன் மிஸ்ரா என் வீட்டிற்கு வந்தார். மக்கள் நெருக்கடிகளைச் சந்திக்கும்போது, நாம் அவர்களுக்கு ஆதரவாக இல்லை என்று கூறினார். நாம் நிறையப் பேசியிருக்கிறோம். நாம் எப்போதும் உண்மையை மக்களிடம் சொல்ல வேண்டும் என்று சொல்வோம். இப்போது முதல் கட்டத் தேர்தல் முடிந்திருக்கிறது. தேர்தல் நடந்த 91 தொகுதிகளில், 8 முதல் 10 தொகுதிகளில்தான் பாஜகவிற்கு வெற்றி கிடைக்கும். அடுத்து இரண்டாம் கட்டம், மூன்றாம் கட்டம் தேர்தல்களும் நடைபெறும். அவற்றிலும் எதிர்காலம் வெளிச்சமாகத் தெரியவில்லை.

நீங்கள் ஏற்கனவே என்னிடம் 120 தொகுதிகள்தான் கிடைக்கும் எனக் கூறினீர்கள்; நான் உங்களிடம் 150 தொகுதிகள் கிடைக்கும் என்று கூறினேன். நீங்கள் சொன்னதுதான் சரியானது என்று இப்போது தெரிகிறது. சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் என்னைத் தேர்தலில் நிற்கச் சொல்லி வற்புறுத்தினார்கள். நான் நமது வீட்டை விட்டுப் போவதாக இல்லை. ஆனால் நமது வீட்டில் உள்ளவர்களே, என்னை இழிவுபடுத்தி, என்னைத் தூக்கி வெளியே எறிந்துவிட்டார்கள்.

கடந்த வாரம், நான் கான்பூர், லக்னோ, வழியாக காரில் அலஹாபாத் சென்றேன். வழி நெடுகப் பெரிய, பெரிய பதாகைகளில் நரேந்திர மோடி, யோகி ஆதித்யநாத், அமித் ஷா ஆகியோரின் படங்கள் போடப்பட்டிருந்தன. இந்திரா காந்தி காலத்தில் நீங்களும், அடல்ஜியும் எவ்வளவு கஷ்டப்பட்டீர்கள்? இப்போது அவ்வளவும் அலட்சியப்படுத்தப்படுகின்றன. வருங்காலத் தலைமுறை நம்மைத்தானே சுட்டிக் காட்டிக் கேட்பார்கள்? நீங்களெல்லாம் மூத்தவர்கள், ஏன் மவுனம் காத்தீர்கள் எனக் கேட்பார்களே?

முதல் கூட்டத்தில் நீங்கள் என்னைப் பேசவிடாமல் அடக்கினீர்கள். இரண்டாவது கூட்டத்தில் நான் உங்களை அடக்கலாம். ஆனால் இப்படி நாம் அமைதி காப்பது, மக்களுக்குச் செய்யும் துரோகம் இல்லையா? சத்ருகன் சின்ஹாவும் யஷ்வந்த் சின்ஹாவும் பேசும்போது அது உங்களுக்குக் கசப்பாக இருந்தது. அதற்கு நீங்கள் மறுப்பு தெரிவித்தீர்கள். அவர்கள் இருவரும் கட்சியை விட்டு வெளியேறிவிட்டார்கள். வாழ்க்கை முழுவதும் கட்சியின் லட்சியங்களையும் ஒழுக்கத்தையும் பின்பற்றி நாம் தியாகம் செய்துள்ளோம். இன்று அந்த லட்சியங்கள் கேலிக்கூத்தாகிவிட்டன. வருங்காலத் தலைமுறை நம்மைப் பார்த்துச் சுட்டிக் காட்டும். அதைப் பற்றி நீங்கள் சிந்திக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.

நாம் சுயமரியாதையையும், நாட்டுக்குச் செய்துள்ள சேவைகளையும், பலவீனமாகிவிட அனுமதிக்கக் கூடாது. இது எனது மனதின் குரல் (மன் கி பாத்). அரசியல் நிலையிலிருந்து வேண்டுமானால் இது சரியாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இன்றைக்கு உள்ள சூழலில், நமது சிந்தனைகளை வெற்றிபெற விடாமல் செய்துவிடுவார்கள். ஆனலும் இதுதான் உண்மை. இந்தக் கடிதத்த்தை உங்களுக்கு எழுதச் சொன்னது எனது மகள்தான். நான் போனில் பேசியிருக்கலாம். ஆனாலும் உங்களுக்கு எழுதுகிறேன். 24ஆம் தேதி நாம் காசியாபாதில் சந்திப்போம்.

இப்படிக்கு

முரளி மனோகர் ஜோஷி

தேர்தலுக்குப் பின்…

இவ்வாறு முதல் கட்டம் நடந்து முடிந்த தேர்தல் பற்றி செய்தி கிடைத்தது. நாமும் பல நபர்களிடம் விசாரித்ததில், சென்ற 2014ஆம் ஆண்டில், பாஜக அதிகமான தொகுதிகளை பெற்ற உத்தரப் பிரதேசத்தில்,மேற்கு உ.பி.யில் வாக்குப் பதிவு நடந்த எட்டுத் தொகுதிகளில், பாஜகவினர் முகம் நொந்து இருந்தனர் என்று தெரியவருகிறது. ஜாட் மக்கள் சென்ற முறை மொத்தமாக பாஜகவிற்கு ஓட்டு போட்டனர். இந்த முறை மொத்தமாக எதிர்த்துவிட்டனர் என்றும் தெரிகிறது. அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியும், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும், அஜித் சிங் தலைமையிலான ராஷ்ட்ரிய லோக்தள் கட்சியும், எட்டில் ஆறு வெற்றி பெறுவோம் எனக் களிப்புடன் கூறுவதைக் கேட்க முடிகிறது.

பகுஜன் சமாஜ் கட்சியின் தலித் வாக்குகள் சமாஜ்வாதிக்குச் செல்லும் எனபது உண்மைதான், ஆனால், சமாஜ்வாதி கட்சியின் வாக்குகள் பகுஜன் சமாஜ் கட்சியின் தலித் வேட்பாளர்களுக்கு கடந்த காலங்களில் போகவில்லையே, இப்போது எப்படிப் போகும் என்ற கேள்வியை எல்லோருமே எழுப்பிவந்தனர். ஆனால், இந்த முதல் கட்ட வாக்குப் பதிவு அதையும் தவறு என நிரூபித்துள்ளது. ஆகவே, உ.பி.மாநிலத்தில், மாநிலக் கட்சிகளின் இந்தக் கூட்டணி, பெரும்பான்மையைக் கைப்பற்றும் எனவும் கட்டியம் கூறுகின்றனர்.

மீரட் நகரிலிருந்து ஒரு கடிதம், இந்த முறை நாம் தீர்மானிக்கிறோம். கட்சிகள் தீர்மானிக்கவில்லை. இது தேர்தல் அல்ல, நமது தேர்வு எனக் கூறுவத்தைப் பார்க்கும்போது, மாற்றம் என்னும் செய்தியே எதிரொலிக்கிறது.

ராஜேஷ் தாஸ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு: வெளியான அதிர்ச்சித் தகவல்! ...

6 நிமிட வாசிப்பு

ராஜேஷ் தாஸ் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு: வெளியான அதிர்ச்சித் தகவல்!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்! ...

3 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - சங்கரா மீனும் கெட்டியான குழம்பும்!

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்: மளமளவெனக் குறைந்த தங்கம் விலை! ...

3 நிமிட வாசிப்பு

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்: மளமளவெனக் குறைந்த தங்கம் விலை!

திங்கள் 15 ஏப் 2019