மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 18 ஜன 2021

காக்கி உள்ளாடை: வேட்பாளர் மீது எஃப்.ஐ.ஆர்!

காக்கி உள்ளாடை: வேட்பாளர் மீது எஃப்.ஐ.ஆர்!

நடிகையும், பாஜக வேட்பாளருமான ஜெயப் பிரதா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் ஆசம் கான் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுபோல தேசிய மகளிர் ஆணையமும் ஆசம் கானுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அரசியலில் பெண்கள் வர வேண்டும், அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் பேசி வருகின்றனர். அதேசமயத்தில் அரசியலில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான கருத்துகளும் அதிகரித்துள்ளன.

உத்தரப் பிரதேச மாநிலம் ராம்பூர் தொகுதியில் நடிகையும் பாஜக வேட்பாளருமான ஜெயப்பிரதா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி சார்பில் ஆசம் கான் போட்டியிடுகிறார். நேற்று (ஏப்ரல் 14) பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஆசம் கான், ஜெயப்பிரதாவின் பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும் அவரை மறைமுகமாகச் சாடியிருந்தார்.

அவர் பேசும்போது, இங்கு 10 ஆண்டுகளாக ஒருவர் மக்கள் பிரதிநிதியாக இருந்தார். மக்களுக்கு அவரை புரிந்துகொள்ள 17 ஆண்டுகள் ஆனது. ஆனால், அவர் காக்கி உள்ளாடை அணிந்திருப்பதை 17 நாட்களில் அறிந்துகொண்டேன்” என்று பாலியல் ரீதியான கருத்தை தெரிவித்திருந்தார்.

இவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்குக் கண்டனம் தெரிவித்துள்ள ஜெயப்பிரதா,” ராம்பூரில் நான் போட்டியிடக் கூடாது என்பதற்காக இவ்வாறு பேசுகிறார். இவர் வெற்றி பெற்றால் ஜனநாயகம் என்னவாகும்? சமூகத்தில் பெண்களுக்கு இடமில்லை என்றால், பெண்கள் எங்கே செல்வார்கள்? இப்படி பேசியதால் நான் பயந்து ராம்பூரை விட்டு சென்றுவிடுவேன் என நீங்கள் நினைத்தால், அது நடக்காது” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா, “ஆசம் கானின் கருத்து மிகவும் அருவருப்பான அவமானகரமான கருத்து. இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும்” என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இவரது கருத்துக்கு பாஜகவினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், இவர் மீது ராம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அதனடிப்படையில் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையில் இன்று தனது கருத்துக்கு விளக்கமளித்துள்ள ஆசம் கான், “நான் யாருடைய பெயரையும் குறிப்பிட்டுப் பேசவில்லை. தன்னிடம் 150 துப்பாக்கிகள் இருப்பதாகவும், ஆசம் கானைப் பார்த்தால் சுட்டுக்கொல்வேன் என்றும் கூறிய ஒருவரின் உண்மையான முகத்தை மக்கள் அறிந்துகொண்டார்கள் என்று பேசினேன். அவர் ஆர்எஸ்எஸ் கால்சட்டை அணிந்தவர். நான் எம்எல்ஏவாகவும், அமைச்சராகவும் இருந்துள்ளேன் எப்படிப் பேச வேண்டும் என்பது எனக்குத் தெரியும். நான் யாரையும் அவமதிக்கும் வகையில் பேசவில்லை. அந்தவகையில் தான் பேசினேன் என்று நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார்” என்று தெரிவித்துள்ளார்.

திங்கள், 15 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon