மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 7 ஆக 2020

பணம் வாங்கறதுல என்ன தப்பு? – மக்கள் குரல்!

பணம் வாங்கறதுல என்ன தப்பு? – மக்கள் குரல்!

தேர்தல் களத்தில் மின்னம்பலம்

பியர்சன் லினேக்கர். ச.ரே

மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பல்வேறு விஷயங்கள் பேசப்படுகின்றன. ஆட்சிக்கு எதிரான மனநிலை, மத நல்லிணக்கம், மாநில சுயாட்சி, நீட் தேர்வு ரத்து ஆகியவை ஒருபுறம் இருக்க, மற்றொரு புறம் அரசியல் கட்சிகள் சாதிக் கணக்கு, பணக் கணக்கு என எல்லா விதமான அஸ்திரங்களையும் கையில் எடுத்து எப்படியும் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற இருக்கிறார்கள்.

இந்தப் போக்குகளை எல்லாம் மக்கள் எப்படி உள்வாங்கியிருக்கிறார்கள், அவர்கள் மனநிலை என்ன என்று அறியத் தென்சென்னை தொகுதியில், மெரினா கடற்கரை அருகில் இருக்கும் வியாபாரிகளிடமும் பொதுமக்களிடமும் பேச்சுக்கொடுத்தோம். அவர்கள் அளித்த பதில்களிலிருந்து சில பகுதிகளை இங்கே தருகிறோம்.

தேவேந்திரன், தள்ளு வண்டியில் ஐஸ் விற்பவர்

நாங்க என்னைக்கும் அதிமுகவுக்குதான் ஓட்டு போடுவோம். எடப்பாடி, ஓபிஎஸ் மேல எங்களுக்கு ஆரம்பத்துல கோவம் இருந்தது. ஆனா இப்ப இல்ல. மோடிக்கு எதிரா என்னதான் பேசுனாலும் அதப் பத்தி எங்களுக்கு கவலை இல்லை. அஞ்சு சீட்டுதானே கொடுத்துருக்கோம்? எந்தக் காரணம் கொண்டும் திமுக வரவே கூடாது. அடிமட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை அவங்களை அடக்க யாருமில்ல. அவங்க பண்ண அராஜகத்துக்குதான் இன்னும் அவங்க ஆட்சியிலேயே இல்ல.

ஓட்டுக்குப் பணம் வாங்குவது பற்றி?

அந்தக் காலத்துல கட்சிக் கூட்டத்துக்கு போறதுக்குக்கூட காசு வாங்க மாட்டோம். இப்பல்லாம் அப்படி இல்ல. அந்த உணர்வெல்லாம் போச்சி. காசு குடுத்தாதான் கட்சிக்காரங்களே வேலை செய்றாங்க. நடுவுல காசு கொடுக்குறவனே அவ்வளவு சம்பாதிப்பான். போன எலெக்ஷன்லகூட எங்க ஏரியாவுல ஒரு ரூம் நிறைய பணம் எடுத்தாங்க. யாருதான் ஓட்டுக்குப் பணம் கொடுக்காம இருக்காங்க? எல்லாரும் கொடுக்குறாங்க, எல்லாரும் வாங்குறாங்க.

சங்கர், பலூன் ஷூட்டிங் கடைக்காரர்

நாம எப்பவும் உழைச்சிதான் சம்பாதிக்கணும். நான் காலையில ஆட்டோ ஓட்டுவேன், சாயங்காலம் பலூன் ஷூட்டிங் கடை போடுவேன். காலையில வேலை இல்லாதப்ப லைட் ஹவுஸ் ஆட்டோ ஸ்டாண்டுல ட்ராபிக் கிளியர் பண்ணுவேன். எப்படியும் ஒரு நாளைக்கு என் குடும்பத்துக்குத் தேவையானத சம்பாதிச்சிருவேன். தன்னோட உழைப்பை நம்பியிருக்குறவன் காசு வாங்கிட்டு ஓட்டு போட மாட்டான். இன்னைக்கு கட்சிக்காரங்க கொடுக்குற காச வாங்கிவிட்டு, நாளைக்கு தெருவுல ஏதாவது பிரச்சினைனு தட்டிக்கேட்டா காசு வாங்கிட்டு ஓட்டுப் போட்ட பயதானேன்னு எல்லாரு முன்னாடியும் அசிங்கப்படுத்துவாங்க.

இந்தத் தேர்தலில் உங்கள் ஆதரவு யாருக்கு?

ராகுல் காந்தி இளைஞர், பாக்குறதுக்கு ராஜீவ் காந்தி மாதிரியே இருக்காரு. அதனால எனக்குப் பிடிக்கும். மோடினாலே எல்லாம் கடுப்பாகுறாங்க. என் ஆட்டோல சவாரி வரவங்கள்ட்ட அரசியல் பத்தி பேச்சு கொடுப்பேன். அவங்க எல்லாரும் மோடிய பயங்கரமா திட்டுவாங்க. அவரு வந்ததுல இருந்து பல பேரோட வருமானம் போச்சுன்னும், அவரு வாய திறந்தாலே பொய் பேசுறவருன்னும் எல்லாம் சொல்லுவாங்க. நானும் தினத்தந்தி படிப்பேன். அவங்க சொல்லுற மாதிரி அவரு அப்படிதான் பண்ணாரு. அதனால என்னுடைய ஆதரவு ராகுல் காந்திக்குதான்.

அரசியலே பிடிக்கல ப்ரோ!

மெரினாவில் குதிரைகளை நிறுத்தியபடி பேசிக்கொண்டிருந்த இளைஞர்களிடம் பேசியபோது அவர்கள் கூறியது:

என்ன ப்ரோ… டிவிய போட்டாலே எல்லா அரசியல்வாதிகளும் சண்டை போட்டுக்குறாங்க. அத பாத்தாலே ஒரே குழப்பமாவும் தலவலியாவும் இருக்கு. என்னதான் சொல்லவராங்கனு புரியில. யாரு தான் அப்ப நல்லவங்க? இவங்க அடிசிக்குறத பாத்தா அரசியலே பிடிக்க மாடேங்குது. யாருக்கு சப்போர்ட் பண்றதுனு ஒரே குழப்பமா இருக்கு.

பணம் வாங்குவது பற்றி?

எங்க ஏரியாவுல பணம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க, இப்ப 200ல இருந்து 300 வரைதான் கொடுக்குறாங்க. அவங்க அவங்க கட்சிக்கு யாரு ஓட்டு போடுவாங்கனு கட்சிக்காரங்களுக்கு நல்லா தெரியும். பூத் பசங்கள வச்சி அழகா வீட்டுலயே போயி காச கொடுத்துருவாங்க. இல்லனா தெரு கூட்டத்துக்கு போற அக்காங்கள்ட கொடுப்பாங்க அவங்க, அவங்க சொந்தகாரங்களுக்குப் பிரிச்சி குடுத்துருவாங்க.

கரும்பு ஜூஸ் கடை மாரியப்பன்

பொங்கல் அப்பவே எடப்பாடி எல்லாத்துக்கும் 2000 ரூபாய் குடுத்துட்டாரு அதுவே எலக்‌ஷனுக்குக் கொடுத்த காசுன்னு எல்லா ஜனங்களும் நினைச்சிக்கிடாங்க. அந்தப் பணத்த கார்லலாம் வந்து வாங்கிட்டு போனாங்க. அதே மாதிரி மோடி கொடுத்த பணமும் மீன் வியாபாரி ஒருத்தரு வாங்குனதா சொன்னாரு. ஓட்டுக்குப் பணம் வாங்குறது தப்பில்லன்னு எல்லா ஜனங்களும் பேசிக்கறாங்க. நம்ப வரிப் பணத்தைக் கொள்ளை அடிச்சிதானே அவன் நமக்கு தரான். அத நாம வாங்காம வேற யாரு வாங்குவா? அதையும் வாங்கலன்னா நடுவுல பணம் கொடுக்குறவன் சாப்டுருவான். அவன் பணத்த தின்னுறத நாம ஏன் வேடிக்கை பாக்கணும்னு கேக்குறாங்க. அவங்க கேக்குறதுலயும் நியாயம் இருக்குல்ல?

மக்கள் பணத்த வாங்கிட்டு ஓட்டு போடுறாங்கனு எல்லாம் பேசிக்குறாங்க வேற என்ன பண்ணணும்னு சொல்லுங்க. காசு பணம் இல்லாதவங்க அன்னைக்கு செலவுக்கு யாரவது பணம் கொடுத்தா வேணாம்னு சொல்லுவாங்களா?

என் கடைக்கு வரவங்க எல்லார்ட்டையும் அரசியல் பத்தி பேசுவேன். எல்லாரும் ஒரு வெறுப்போடதான் பேசுவாங்க. எல்லாரும் மோடி மேல கோவமா இருக்காங்கனு நினைக்கறேன். அவர திட்டாத ஆளே இல்லை.

அன்றாட வாழ்க்கைதான் தீர்மானிக்கிறது!

தேர்தல் பிரச்சாரத்தில் என்னதான் தேசிய அளவிலும் மாநில அளவிலும் பல்வேறு திட்டங்கள், கொள்கை முடிவுகளைப் பற்றியெல்லாம் அரசியல் கட்சிகள் பேசினாலும். மக்களில் பலரும் தங்களைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை, தங்கள் அன்றாட வாழ்க்கைச் சம்பவங்களை வைத்துத்தான் அரசியலை அணுகுகிறார்கள். ஊடகங்களில் பெரிதாக விவாதிக்கப்படும் பிரச்சினைகளிலிருந்து அவர்கள் மிகவும் அந்நியப்பட்டிருப்பதாகவே தெரிகிறது. காலம் காலமாக அவர்கள் நினைவில் இருக்கும் அரசியல் கட்சிகளை வைத்தே தற்போதும் அரசியல் கணக்குகள் போடுகிறார்கள். பணம் வாங்குவதில் தவறு இல்லை என்னும் எண்ணம் மேலோங்கியிருப்பதையும் உணர முடிகிறது.

திங்கள், 15 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon