மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 26 செப் 2020

எட்டு வழிச் சாலை: பாமகவை கார்னர் செய்யும் பாஜக !

எட்டு வழிச் சாலை: பாமகவை கார்னர் செய்யும் பாஜக !

எட்டு வழிச் சாலை பற்றி பாஜக தலைவர்கள் தொடர்ந்து தெரிவித்து வரும் கருத்துகளால் அதிமுக கூட்டணிச் சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. எட்டுவழிச் சாலைத் திட்டத்தைத் தீவிரமாக எதிர்த்த பாமக, அதை கொண்டு வந்த அதிமுக- பாஜகவோடு கூட்டணி வைத்தபோது கடுமையான விமர்சனங்கள் கிளம்பின.

இந்நிலையில் நேற்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை அடுத்து இன்று தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ‘எட்டுவழிச் சாலை திட்டத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது’ என்று சொல்லியிருக்கிறார். இது அதிமுகவை விட பாமகவுக்குதான் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது .

நேற்று சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொகுதியில் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, ‘ நீதிமன்றம் தடை விதித்தாலும், விவசாயிகளுடன் பேச்சு நடத்தி அந்தத் திட்டம் குறித்த காலத்துக்குள் நிறைவேற்றப்படும்” என்று பேசினார். அந்த மேடையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸும் இருந்தனர். இதுபற்றி நேற்றே ஸ்ரீபெரும்புதூர் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின்,

“முதல்வரையும், ராமதாஸையும் வைத்துக் கொண்டு எட்டு வழிச் சாலையை நிறைவேற்றுவேன் என நிதின் கட்கரி சொல்கிறார். வெட்கம், சூடு, சொரணை இருந்தால் அதை எதிர்த்துக் கேள்வி கேட்க வேண்டியதுதானே?” என்று கடுமையாகத் தாக்கினார்.

இந்த நிலையில்தான் இன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், “மக்கள் விரும்புற திட்டத்தை யார் தடுத்தாலும் நிறைவேற்றப்படும்” என்று கூறினார். நீதிமன்றம் தானே தடை விதித்தது என்ற கேள்விக்கு, ‘சிலரது தூண்டுதலால் போடப்பட்ட வழக்கு அது. மக்கள் விருப்பத்தின் பேரில் எட்டு வழிச் சாலை திட்டம் நிறைவேற்றப்படும்” என்று கூறினார்.

எட்டு வழிச் சாலை திட்டம் பற்றி தனது தேர்தல் பிரச்சாரத்தில் பெருமளவு தவிர்த்து வருகிறார் முதல்வர் எடப்பாடி. பாமகவையும் தவிர்க்கச் சொல்லியிருக்கிறார். ஆனால் நேற்று நிதின் கட்கரி, இன்று பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்த கருத்துகளுக்கு ஒரு பின்னணி இருப்பதாக தெரிகிறது.

இதுகுறித்து பாஜக முக்கிய நிர்வாகிகள் சிலர் நம்மிடம், “கூட்டணியில் தன்னை விட அதிக முக்கியத்துவம் பாமகவுக்குக் கொடுக்கப்படுவதாக அதிமுக மீது பாஜக கோபத்தில் இருக்கிறது. பாஜகவை ஐந்து தொகுதிகளுக்குள் மட்டுப்படுத்திய எடப்பாடி பழனிசாமி, பாஜகவின் தொகுதிகளில் அதிமுகவினரின் ஒத்துழைப்பு பற்றி பெரிதாக கண்டுகொள்வதில்லை என்ற கவலையும் பாஜகவுக்கு இருக்கிறது. நிதின் கட்கரியை சேலத்தில் சந்தித்த பாஜக இளைஞரணி நிர்வாகிகள் சிலர், தேசிய ஆளுங்கட்சியாக நாம் இருந்தாலும் பாமகவுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் கூட்டணியில் நமக்கு இல்லை. நமது தொகுதிகள் பெரும்பாலும் தென் மாவட்டத்திலேயே இருப்பதால் பாமக தலைவர்கள் நமது பிரசாரத்துக்கு வருவதில்லை என்று கூறியிருக்கிறார்கள். இந்த பின்னணியில்தான் நீதிமன்றத் தீர்ப்பு பற்றி அறிந்தும் சேலத்தில் நிதின் கட்கரி எட்டு வழிச் சாலை திட்டம் செயல்படுத்தப்படும் என்று பேசியிருக்கிறார். இன்று பொன்.ராதாகிருஷ்ணனும் பேசியிருக்கிறார்.” என்கிறார்கள்.

இதற்கு பாமக என்ன சொல்கிறது என்ற கேள்விகள் அதிகமாக எழுந்திருப்பதால், பாஜகவின் நோக்கம் பலித்து வருகிறது.

திங்கள், 15 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon