மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 18 ஜன 2021

ஐடி ரெய்டு: தப்பிய 200 கோடி!

ஐடி ரெய்டு: தப்பிய 200 கோடி!

ஏப்ரல் 12, 13 தேதிகளில் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி ஆகிய இடங்களில் பிஎஸ்கே கட்டுமான நிறுவனத்துக்குத் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் 15 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. ஆனால் இந்த ரெய்டின்போது 200 கோடி ரூபாய் பணம் தப்பிவிட்டதாக புதிய தகவல் இப்போது கிடைத்துள்ளது.

பி.எஸ்.கே நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் ஏப்ரல் 12, 13 தேதிகளில் நடத்தப்பட்ட வருமான வரிச் சோதனையில் சுமார் 14 கோடி ரூபாய் அளவிலான ரொக்கப்பணமும், பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. அரசின் கட்டுமானப் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் மேற்கொண்டு வரும் பி.எஸ்.கே நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் கணக்கில் வராத பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, வருமான வரித் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து நாமக்கல், சேந்தமங்கலம் நடுகோம்பையில் உள்ள பி.எஸ்.கே நிறுவன உரிமையாளர் பெரியசாமி வீடு மற்றும் அலுவலகம், நாமக்கல் சேலம் வழியில் உள்ள பி.எஸ்.கே நிறுவனத்துக்குத் தொடர்புடைய செல்வம் என்பவரது அலுவலகம் என நாமக்கல்லில் 4 இடங்களிலும், சென்னையில் 3 இடங்களிலும் வருமான வரித் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். நாமக்கல்லில் பி.எஸ்.கே உரிமையாளர் வீடு, அலுவலகம், சரண்யா நூல் மில், பெரியசாமியின் மகன்கள் அருண்குமார், அசோக் குமார் ஆகியோர் நிர்வகிக்கும் கொங்குநாடு பொறியியல் கல்லூரி ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையில் பி.எஸ்.கே கட்டுமான அலுவலகத்தில் மட்டும் 13. 80 கோடி ரூபாயும், மற்ற இடங்களில் 74 லட்சம் ரூபாயும் என மொத்தம் 14.54 கோடி ரூபாய் கணக்கில் வராத ரொக்கம் கைப்பற்றப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் வருமான வரி வட்டாரத்தில் வேறு ஒரு தகவல் உலா வருகிறது.

“அரசு ஒப்பந்தங்களையே அதிகம் எடுத்து செய்யும் நிறுவனம் இது. அங்கே சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பணம் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது என்ற தகவல் கிடைத்துதான் ரெய்டு குழுவினர் அங்கே சென்றார்கள். ஆனால் சோதனையில் கிடைத்தது 14.54 கோடி ரூபாய்தான். அதற்கு முன்னரே அங்கிருந்து சுமார் 200 கோடி ரூபாய் வேறு ஒரு இடத்துக்கு மாற்றப்பட்டிருக்கிறது. வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு இடையே ஏற்பட்டிருக்கும் கருத்து வேறுபாடுகளால் ஆளுங்கட்சி தொடர்பான இடங்களுக்கும் ரெய்டு செல்ல முடிவெடுத்து குறிப்பிட்ட அதிகாரிகள் இந்த ரெய்டுக்குக் கிளம்பினார்கள். ஆனால் குறிப்பிட்ட இடங்களுக்கு ரெய்டுக்கு செல்லும் தகவல் வேறு ஒரு தரப்பு மூலம் முன்பே தெரிவிக்கப்பட்டு, முதல் நாளே அங்கிருந்த 200 கோடி ரூபாய் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டிருக்கலாம்” என்பதுதான் அந்தத் தகவல். .

ஐடி அதிரடி ரெய்டு ! எடப்பாடி அதிர்ச்சி, அதிகாரிகள் புரட்சி!

திங்கள், 15 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon