மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 19 செப் 2020

அமைச்சர் உதயகுமார் அறையில் ஐடி ரெய்டு!

அமைச்சர் உதயகுமார் அறையில் ஐடி ரெய்டு!

சென்னை எம்.எல்.ஏ.க்கள் விடுதியிலுள்ள அமைச்சர் உதயகுமார் அறையில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவைத் தேர்தல் நடைபெறுவதற்கு இரண்டு நாட்களே உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதை தடுக்கும் பொருட்டு வருமான வரித் துறையினரும், பறக்கும் படையினரும் தமிழகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். ஒப்பந்ததாரர்கள், தொழிலதிபர்களுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பல கோடி ரூபாய் நோட்டுக்கள் சிக்கின.

இந்த நிலையில் சென்னை சேப்பாக்கத்திலுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வந்த ரகசிய தகவலையடுத்து, நேற்றிரவு (ஏப்ரல் 14) அங்கு விரைந்த வருமான வரித் துறை மற்றும் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

விடுதியின் ‘சி’ பிளாக் 10ஆவது தளத்தில் எண் 10-Eல் உள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறையிலும் பறக்கும் படை அதிகாரி ஜேசுதாஸ் உடன் வந்த வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இரவு 10.30 முதல் 12.30 வரை நடைபெற்ற இச்சோதனையின்போது, அமைச்சரின் இரண்டு உதவியாளர்கள் மட்டுமே அறையில் இருந்துள்ளனர். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருவதால் அமைச்சர் மதுரையில் தங்கியுள்ளார். சோதனையில் பணமோ அல்லது ஆவணங்களோ பறிமுதல் செய்யப்பட்டதாக இதுவரை தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலின்போது எம்.எல்.ஏ.க்கள் விடுதியிலுள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் அறையில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 15 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon