மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 3 ஜூலை 2020

டிக் டாக் தடையை நீக்க முடியாது: உச்ச நீதிமன்றம்!

டிக் டாக் தடையை நீக்க முடியாது: உச்ச நீதிமன்றம்!

டிக் டாக் செயலிக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை விதித்த தடையை நீக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

“டிக் டாக் செயலி இளைஞர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருளுக்கு அடிமையாவது போல இதற்கும் பலர் அடிமையாகியுள்ளனர். ஆபாச வீடியோக்களும் அதில் இடம்பெறுகிறது. இதனால் பல்வேறு விதமான ஒழுக்கக்கேடுகள், சமுதாய சீர்கேடுகள் நடைபெறுகிறது. எனவே டிக் டாக் செயலியை தடை செய்ய வேண்டும்” என்று வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடுத்திருந்தார்.

அந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் அமர்வு முன்பு ஏப்ரல் 8ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, “டிக் டாக் செயலியை மத்திய அரசே தலையிட்டு ஏன் இந்தியா முழுவதும் தடை செய்யக்கூடாது? இதுதொடர்பாக தொலைத் தொடர்பு துறை செயலாளர் பதிலளிக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 16ஆம் தேதி ஒத்தி வைத்தனர். இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவை எதிர்த்து, டிக் டாக் செயலியை தடை செய்யக்கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் டிக் டாக் நிறுவனம் மனு ஒன்றை தாக்கல் செய்தது.

”டிக் டாக்கிற்கு தடை விதித்தால் கருத்துச் சுதந்திரம் மறுக்கப்படும் என்பதால் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்று டிக் டாக் தரப்பில் கூறப்பட்டது. மேலும், விதிமுறைகளுக்கு உட்பட்டு டிக் டாக்கில் வீடியோக்களை வெளியிடுவோம் என்றும் அந்நிறுவனம் உறுதியளித்தது. ஆனாலும் இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை விதித்த உத்தரவை நீக்க மறுத்துவிட்டது.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த வழக்கில், டிக் டாக் செயலி மூலம் பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடிய அதிகளவிலான வீடியோக்கள் வெளியிடப்படுவதாகவும், ஆபாச வீடியோக்கள் இடம்பெறுவதாகவும் கூறி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர். இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏப்ரல் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர். சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நாளை இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.

திங்கள், 15 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon