மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 4 ஜூலை 2020

பிரதமர் விமானத்தில் வந்த பெட்டி: பாஜக விளக்கம்!

பிரதமர் விமானத்தில் வந்த பெட்டி: பாஜக விளக்கம்!

கர்நாடகாவில் பிரச்சாரத்துக்கு வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் இருந்து கருப்பு பெட்டியொன்று இறக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விளக்கமளித்துள்ள பாஜக, பிரதமர் மீது குற்றம்சாட்டும் முன்பாக காங்கிரஸ் கட்சி பொதுஅறிவைப் பயன்படுத்த வேண்டுமென்று தெரிவித்துள்ளது.

கடந்த 9ஆம் தேதியன்று கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஹெலிகாப்டரில் வந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அப்போது, ஹெலிகாப்டரில் இருந்து கருப்பு பெட்டியொன்றை எடுத்துச் சென்றனர் பிரதமரின் சிறப்புப் பாதுகாப்புப் படை வீரர்கள். அதனை தனியாருக்கு சொந்தமான ஒரு இனோவா காரில் ஏற்றி அனுப்பினர். இந்த வீடியோவை வெளியிட்ட காங்கிரஸ் கட்சி, நேற்று இது பற்றி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது. இது குறித்து ட்விட்டரிலும் கருத்து வெளியிட்டது.

இந்த கருத்தை, காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். கருப்பு நிறப் பெட்டி ஏற்றப்பட்ட வாகனம் சிறப்பு பாதுகாப்புப் படைக்குச் சொந்தமானதல்ல என்று தெரிவித்திருந்தார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஆனந்த் சர்மா.

இன்று (ஏப்ரல் 15) சித்ரதுர்கா பகுதி பாஜக தலைவர் நவீன், இது பற்றி விளக்கம் அளித்துள்ளார். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டதாகவும், பிரதமருக்குத் தேவையான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து மறந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். பிரதமருடன் செல்லும் வாகனங்களில் எவையெல்லாம் இடம்பெறும் என்று தெரியாத குண்டுராவ், தனது கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென்று கூறியுள்ளார்.

“கருப்புப் பெட்டியில் டெலிபிராம்ப்டர், வயர்கள், கட்சி சின்னம் உள்ளிட்டவை இருந்தன. மோடியில் பேச்சில் இடம்பெற வேண்டிய விவரங்கள் அந்த டெலிபிராம்ப்டரில் பதிவு செய்யப்பட்டிருக்கும். அதை வைத்துக்கொண்டு, அவர் மேடையில் பேசுவார். பேப்பர் எதையும் பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

மூன்று வீரர்கள் மற்றும் ஒரு தொழில்நுட்ப நிபுணர் ஆகியோர் சேர்ந்து பிரதமர் மேடையேறுவதற்கு 10 நிமிடங்கள் முன்னதாகவே டெலிபிராம்ப்டரை பொருத்தி விடுவார்கள் என்றும், தலைவர்களைச் சந்தித்துவிட்டு வரும் பிரதமர் நேராக மேடையேறுவார் என்றும், பிரதமரின் அணிவகுப்பில் இடம்பெறும் 13 வாகனங்களில் ஒன்றாக அந்த வாகனம் இடம்பெற்றால் இது சாத்தியமாகாது என்றும் அவர் தன் விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை மீறி ஒரு தனியார் வாகனம் எப்படி பிரதமரின் பாதுகாப்பு வளையத்துக்குள் உட்புக முடியும்? பிரதமரைப் பற்றி குற்றச்சாட்டு எழுப்பும் முன்பாக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் தங்களது பொதுஅறிவைப் பயன்படுத்த வேண்டும்” என்று நவீன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி மேடைகளில் பேசுவதற்காக டெலிபிராம்ப்டர் பயன்படுத்துவது பற்றி இதுவரை பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், தற்போது பாஜக தரப்பிலேயே அது தொடர்பான விளக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

திங்கள், 15 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon