மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 15 ஏப் 2019

அஜித்- விஜய்: 100 கோடியை மறுக்க இதுதான் காரணமா?

அஜித்- விஜய்: 100 கோடியை மறுக்க இதுதான் காரணமா?

தமிழ் சினிமா 365: பகுதி - 52

இராமானுஜம்

தென்னிந்திய சினிமாவை மொத்தமாக தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் முயற்சியை கார்ப்பரேட் நிறுவனங்கள் தற்போது தீவிரப்படுத்த காரணம் தமிழ் சினிமாவின் விரிவடைந்த வர்த்தகம்.

இங்கு தயாரிப்பாளர்கள், நடிகர்களிடம் ஒற்றுமை இல்லை என்பதை தொடர்ந்து கண்காணித்து வந்ததன் விளைவு முன்னணி நடிகர்களை குறைந்த பட்சம் மூன்று படங்கள் நடிக்க ஒப்பந்தம் செய்து விட்டால் பிற நடிகர்களை எளிதாக வளைத்து விடலாம் என்கிற நோக்கில் விஜய், அஜித் இருவருக்கும் வலை விரிக்கப்பட்டது. என்ன ஏது என்று பேசுவதற்கு கூட அவர்கள் இருவரும் இடங்கொடுக்காமல் நிராகரித்துள்ளனர்.

தமிழ் சினிமாவை கார்ப்பரேட் மயமாக்கும் முயற்சியை 1988ஆம் ஆண்டு தொடங்கியவர் மறைந்த சுஜாதா பிலிம்ஸ் G.வெங்கடேஷ்வரன். அதற்காகவே தயாரிப்பு தொழிலில் முதலீடு செய்ய விரும்புபவர்களுக்காக பங்கு வர்த்தகத்தை தொடங்கினார். திரைப்பட தயாரிப்பை ஒரு தொழிலாக அங்கீகரித்து, வங்கி மூலம் தயாரிப்பாளர்கள் கடன் பெற அவர் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

2000ஆம் ஆண்டுக்கு பின் சாய்மீரா ஆக்ஸஸ் எனும் பெயரில் சாமிநாதன் தொடங்கிய நிறுவனம் பிரமிட் சாய்மீரா என பெயர் மாற்றம் பெற்று இந்திய பங்கு சந்தையில் திரைப்பட தயாரிப்பு, திரையரங்கு தொழிலில் முதலீடு செய்ய நிதி திரட்டியது.

சர்வதேச அளவில் இந்நிறுவனம் தனது கிளைகளை தொடங்கி பிற தொழில்களில் முதலீடு செய்து கொண்டிருந்த பல நிறுவனங்களின் கவனத்தை திரைப்படத் துறை பக்கம் திருப்பியது.

திரைப்பட தயாரிப்பு, நவீனமான தியேட்டர்களில் முதலீடு செய்வது பாதுகாப்பானது லாபகரமானது என்கிற நம்பிக்கை பிற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏற்பட அடித்தளமிட்டது தமிழகத்தை சேர்ந்த பிரமிட் சாய்மீரா நிறுவனம். முதல் பிரதி அடிப்படையில் புதிய படங்களை இந்நிறுவனம் வாங்க தொடங்கியது.

நிறுவன அதிகாரிகளின் தவறான முடிவுகள் தொடர் நஷ்டத்தை ஏற்படுத்த ஒரு கட்டத்தில் பிரமிட் சாய்மீரா திவாலானது. அதன் பின் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் படத்தயாரிப்பு, தியேட்டர் தொழிலில் தமிழகத்தில் அதிக அளவில் முதலீடு செய்யத் தொடங்கியது.

புதிய தொழில் நுட்பங்களை உடனுக்குடன் அறிமுகப்படுத்தும் தமிழ் சினிமா ஏனோ இன்று வரை கார்ப்பரேட் மயமாக்கலுக்கு முழுவதுமாக உட்படாமல் போக்கு காட்டி வருகிறது. ஆனால் சினிமாவின் முக்கிய வருவாய் பகுதியாக இருக்கும் தியேட்டர் தொழில் கார்ப்பரேட் மயமாகி வருகிறது.

தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து மால்களும் வட இந்திய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சொந்தமானவை. இவர்களுக்கு தேவையான புதிய படங்களை இங்குதான் வாங்கியாக வேண்டும். திரைப்பட தயாரிப்பு, விநியோகம் என இரண்டிலும் நேர்மையான நடைமுறைகள் பலவீனமாக இருப்பதும், லோக்கல் நாட்டாமைகளின் ஆதிக்கம் தவிர்க்க முடியாத சூழல் நிலவுவதால் வாங்குவதைக் காட்டிலும் உற்பத்தி செய்து விடலாம் என்ற முடிவுக்கு கார்ப்பரேட் கம்பெனிகள் வந்ததன் விளைவுதான் முன்ணனி நடிகர்கள் கால்ஷீட்டை கையகப்படுத்தும் முயற்சி.

தற்போது அஜித், விஜய் ஆகியோர் ஒரு படத்தில் நடிக்க 60 முதல் 90 நாட்கள் வரை கால்ஷீட் தருகின்றனர். இதற்கு அவர்கள் வாங்கும் சம்பளம் சுமார் 50 கோடி ரூபாய்.

தயாரிப்பாளர், இயக்குநர், நாயகி, பிற முக்கியமான தொழில்நுட்ப கலைஞர்கள் யார் என்பதை இவர்களே தீர்மானிக்கின்றனர். நடிப்பதுடன் சரி அப்படத்தின் புரொமோஷன் போன்ற நிகழ்ச்சிகளுக்கு இவர்கள் வருவதில்லை. கட்டுபாடற்ற சுதந்திரம் உண்டு.

கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாரிப்பில் நடிக்க ஒப்பந்தமானால் அதிகமாக சம்பளம் கிடைக்கும். ஆனால் மேற்கண்ட எந்த விஷயத்திலும் தலையிட முடியாது. படப்பிடிப்புக்கு கொடுத்த தேதியில் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல வேண்டும். அப்படி தவறும் நிலையில் அதனால் ஏற்படும் நஷ்டத்தை கதாநாயகன் ஏற்க வேண்டும். இது போன்ற நடைமுறைகளுக்கு தமிழ் சினிமா நடிகர்கள் மாற தயங்கி வருகின்றனர். இதனால் இங்கு தொடர் நஷ்டத்தையும், இழப்பையும் தயாரிப்பாளர்கள் சந்தித்து வருகின்றனர். இந்த நிலை இங்கு மாற வேண்டும் என்கின்றனர் தயாரிப்பாளர்கள்.

கார்ப்பரேட் நடைமுறைக்கு தமிழ் சினிமா மாறுவதால் யாருக்கு நன்மை?

நாளை

குறிப்பு : இத் தொடர் சம்பந்தமாக தங்கள் கருத்துகளை வரவேற்கிறோம்

ஆசிரியர் குறிப்பு

இராமானுஜம் : கடந்த இருபது ஆண்டுகளாக தமிழ் சினிமா தயாரிப்பு, வியாபாரம், வசூல் விவரங்களை வெளியிட்டு வந்த வணிகப் பத்திரிகையான ‘தமிழ்நாடு எண்டர்டெயின்மென்ட்’ மாத இதழின் பொறுப்பாசிரியராக பணியாற்றியவர்.

முந்தைய பகுதி - 100 கோடி: மறுத்த அஜித், விஜய்

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

திங்கள் 15 ஏப் 2019