மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 4 ஜூலை 2020

சாதியெனும் பெருங்கொடுமை!

சாதியெனும் பெருங்கொடுமை!

இந்தியாவில் குறைந்த ஊதியம் கிடைக்கும் தொழில்களில்தான் பட்டியலின மற்றும் பழங்குடியின சாதியினரில் பெரும்பகுதியினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியா காலங்காலமாக ஒரு சாதியப் படிநிலை சமுதாயமாகத்தான் இயங்கி வருகிறது என்கிற உண்மை நாம் அனைவரும் அறிந்ததே. அரசியல் சாசனம் சமத்துவக் கோட்பாட்டை முன்னிறுத்தினாலும், நிஜத்தில் நாம் இன்னும் ஏற்றத்தாழ்வுகள் மிகுந்த சமூகமாகத்தான் இயங்கி வருகிறோம். அதன் வெளிப்பாட்டை நம் பொருளாதார அமைப்பிலும் நாம் காணலாம். ஒருவர் எந்தத் தொழிலில் ஈடுபட வேண்டும் என்பதை அவரது சாதி நிர்ணயம் செய்யும் நிலை சற்று மாறியுள்ளது என்றாலும், சாதியின் பிடி முற்றிலுமாகத் தளர்ந்துவிடவில்லை.

2015 வரை திரட்டப்பட்ட தரவுகளின்படி, குறைவான வருமானம் ஈட்டித்தரும் வேலைகளில், பட்டியலின சாதி மக்கள் மற்றும் பழங்குடியின மக்களின் பங்கு, மொத்த தொழிலாளர்களில் அவர்கள் வகிக்கும் பங்கைவிட மிகவும் அதிகம். அதே நேரத்தில், மருத்துவர், வழக்கறிஞர் மற்றும் அலுவலக மேலாளர் போன்ற அதிக வருமானம் பெற்றுத்தரும் வேலைகளில் இவர்களின் பங்கு மிகவும் சொற்பமாக இருக்கிறது. சுரங்கம், கட்டுமானம் மற்றும் தோல் பதனிடுதல் போன்ற பாதுகாப்பு இல்லாத வேலைகளில்தான் இவர்கள் பெரும்பாலும் அமர்த்தப்படுகிறார்கள்.

முறைசார்ந்த சேவைத்துறையின் உயர்மட்ட வேலைகளில் உயர்சாதி மக்கள் என்று கருதப்படுபவர்களே பெரும்பங்கு வகிக்கின்றனர். சுயமாக தொழில் செய்து பிழைப்பவர்களிலும், பட்டியலின சாதி மக்கள் மற்றும் பழங்குடியின மக்களின் வருமானம், மற்ற சாதியினர் பெறும் வருமானத்தில் 50 முதல் 60 சதவீதம்தான். அரசாங்க வேலைகளில் இவர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் உள்ளது ஆறுதலான செய்தி. இது, இட-ஒதுக்கீடு என்பது சாதி ஏற்றத்தாழ்வுகளை மட்டுப்படுத்த உதவும் பயனுள்ள ஏற்பாடு என்பதற்குச் சான்றாக விளங்குகிறது.

பல நூறாண்டுகளுக்கும் மேலாக சாதி எனும் சமுதாய அமைப்பு தொடர்வதற்கு முக்கியக்காரணம், சாதிக்குள்ளேயே நடக்கும் திருமணங்கள். இந்தியாவில் தங்களுடைய சாதிக்குள்ளேயே திருமணம் செய்துகொள்ளும் சமூகத்தினரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 40,000. இவற்றில் பெரும்பான்மையான சாதிகள், காலங்காலமாக இந்த பழக்கத்தைக் கடைபிடித்து வந்துள்ளன. தொழில் மயமாதல், நகரமயமாதல், பொருளாதார வளர்ச்சி போன்ற மாற்றங்களால் அசைக்கமுடியாத நிறுவனமாக நம்முடைய சமுதாயத்தில் சாதி வேரூன்றி இருக்கிறது.

இன்றும் இந்தியாவில் 95 விழுக்காடு திருமணங்கள் சாதிக்குள்ளேயேதான் நடக்கின்றன. வளர்ந்த மாநிலம், வளரும் மாநிலம், பின்தங்கிய மாநிலம் என நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் சாதி மறுப்புத் திருமணங்களின் பங்கு மிகக்குறைவாகவே உள்ளது. சாதிக்கு எதிராகவும், பெண் சுதந்திரத்திற்காகவும் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் அயராது பரப்புரை செய்து போராடிய பெரியாரின் தமிழ்நாட்டிலேயே சாதி கடந்த திருமணங்களின் பங்கு இன்றும் வெறும் 3 விழுக்காடு மட்டும்தான் என்றால், நம்மீது சாதியெனும் பிணியின் பிடி மிகவும் அழுத்தமாக இருக்கிறது என்பது தெளிவு.

திங்கள், 15 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon