மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 4 ஜூலை 2020

கோடை வகுப்புகளுக்கு தடை: அதிகாரிக்கு நோட்டீஸ்!

கோடை வகுப்புகளுக்கு தடை: அதிகாரிக்கு நோட்டீஸ்!

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்த மெட்ரிக் பள்ளிகள் இயக்குனரகம் தடை விதித்துள்ளது. இதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில் விளக்கம் அளிக்குமாறு இயக்குனரகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

எந்தக் கல்விமுறையில் பயின்றாலும், பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறை அளிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அது மட்டுமல்லாமல், கடந்த சில ஆண்டுகளாகவே கோடையின் தாக்கம் கடுமையானதாக மாறி வருகிறது. இதனால், சிறப்பு வகுப்புகளுக்குச் செல்லும் மாணவர்கள் நோய் பாதிப்புக்குள்ளாவதும் நிகழ்கிறது. இதனைத் தவிர்க்கும் பொருட்டு, கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று சமீபத்தில் உத்தரவிட்டார் தமிழக மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன். இதனை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்த உத்தரவுக்குத் தடை கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விஜயகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். நீட் தேர்வு, ஐஐடி தேர்வுகளுக்கான சிறப்பு வகுப்புகள் கோடை விடுமுறையில் நடப்பதாகவும், இதனை கணக்கில் கொள்ளாமல் தமிழகப் பள்ளிக்கல்வித் துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமெனவும், அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை, இன்று (ஏப்ரல் 15) சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நடைபெற்றது. அப்போது, கோடை பயிற்சி வகுப்புகளுக்குத் தடை விதித்தது தொடர்பாகத் தமிழக மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் விளக்கம் அளிக்க வேண்டுமென்று நோட்டீஸ் அனுப்பியது உயர் நீதிமன்றம். அது மட்டுமல்லாமல், இந்த வழக்கில் பதில் மனுதாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு, வரும் 16ஆம் தேதிக்கு (நாளை) விசாரணையை ஒத்திவைத்தது.

திங்கள், 15 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon