மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 5 ஜூலை 2020

நெல்லை: வெல்வது யார்? நடப்பு நிலவரம்!

நெல்லை: வெல்வது யார்? நடப்பு நிலவரம்!

தென் தமிழகத்தின் முக்கியமான தொகுதியான திருநெல்வேலியில் திமுக சார்பில் கிழக்கு மாவட்டப் பொருளாளர் ஞான திரவியமும், அதிமுக சார்பில் மனோஜ் பாண்டியனும், அமமுக சார்பில் மைக்கேல் ராயப்பனும் களம் காண்கிறார்கள். இவர்கள் மூவருமே போட்டியில் முக்கியமான வேட்பாளர்களாகப் புலப்படுகிறார்கள்.

ஆலங்குளம், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நாங்குனேரி, ராதாபுரம் என ஐந்து சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய நெல்லை தொகுதியில் இந்து நாடார், கிறிஸ்துவ நாடார் சமூகத்தினர் பரவலாகவும் அடர்த்தியாகவும் இருக்கின்றனர். நெல்லை டவுன் பகுதியில் பிள்ளைமார் சமூகத்தினரின் வாக்குகள் அதிகமாக உள்ளன. மேலப்பாளையம், கடையம் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாமியர் வாக்குகள் அதிகமாக உள்ளன. முக்குலத்தோர் வாக்குகளும், பட்டியல் இனத்து மக்களின் வாக்குகளும் தொகுதியில் பரவலாக இருக்கின்றன.

கடந்த 2014 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் 4லட்சம் ஓட்டுகளுக்கு 2ஆயிரம் ஓட்டுகள் குறைவாகப் பெற்று வென்றார். அப்போது இரண்டாம் இடம் பெற்ற திமுக 2 லட்சத்து 72 ஆயிரத்து 40 ஓட்டுகள் வாங்கியது. தேசிய ஜனநாயக் கூட்டணியில் நின்ற தேமுதிக ஒரு லட்சத்து 27 ஆயிரம் ஓட்டுகள் பெற்றும் மூன்றாம் இடத்தைப் பிடித்தது. காங்கிரஸ் 62 ஆயிரம் ஓட்டுகள் பெற்றது.

இப்போது திமுக அணியில் காங்கிரஸ், அதிமுக அணியில் தேமுதிக, புதிதாக அமமுக என்று கட்சிகளின் கூட்டணி விகிதம் மாறியிருப்பதால் போன தேர்தல் கணக்கை வைத்து ஒரு முடிவுக்கு வர முடியாது என்றே தோன்றுகிறது.

திமுக சார்பில் போட்டியிடும் ஞான திரவியம், கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன் தலைமையிலான நிர்வாகத்தில் பொருளாளராக இருப்பவர். பொருளாளர் என்ற பெயருக்கேற்ப இவரிடம் பணத்துக்குப் பஞ்சமில்லை என்கிறார்கள். மும்பையில் கொஞ்சகாலம் இருந்தவர் நெல்லை திரும்பி திமுக ஒன்றிய செயலாளராக இருந்தார். விண்ட் மில், ரெடிமேட் கான்கிரீட் யூனிட், கட்டிடத் தொழில் என்று பெருந்தொழில்களைச் செய்பவர் என்பதால் திமுக தலைமை இவருக்கு சீட் கொடுக்க யோசிக்கவே இல்லை.

ஞான திரவியத்திடம் பசை இருந்தாலும் உட்கட்சி ரீதியாகவும், கூட்டணிக் கட்சிகள் ரீதியாகவும் திமுகவுக்கு சரியான ஒருங்கிணைப்பு இல்லை. ஆரம்ப நாட்களில் இருந்தே மாவட்டத்தின் முக்கிய நிர்வாகிகள் தனித்தனியாக பிரச்சாரம் செய்துவந்தனர். ஸ்டாலின் வந்து செல்லும் வரை இது நீடித்தது. அதற்குப் பிறகும் வெளிப்படையாக ஒட்டுதல் இருக்கிறதே தவிர உள்ளபடியே ஒருங்கிணைப்பு அமையவில்லை. திமுக வேட்பாளருக்காக கூட்டணிக் கட்சி என்ற வகையில் கம்யூனிஸ்டுகள்தான் ஓடியாடி வேலை செய்கிறார்கள். முஸ்லிம் லீக்கின் முக்கிய நிர்வாகிகள் பக்கத்து தொகுதியான ராமநாதபுரத்துக்கு சென்றுவிட்டனர். மனித நேய மக்கள் கட்சி, தமுமுக என்று இரு அணிகளாக பிரச்சாரம் செய்கிறார்கள்.

கிறிஸ்துவ நாடார்களின் ஓட்டு முழுக்க முழுக்க தனக்கே சாதமாக இருக்கும் என்று நம்புகிறார் ஞான திரவியம்.அதேநேரம் அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியனும் கிறிஸ்துவ நாடார் என்பதால் டயோசிஸின் ஒரு பிரிவு ஆதரவைப் பெற்றிருக்கிறார். பாஜக கூட்டணி வேட்பாளராக நிற்கிறார் என்றபோதிலும் அவர் ராஜய்சபா எம்பியாக இருந்தபோது கிறிஸ்துவ கல்வி நிறுவனங்களுக்கு ஏகப்பட்ட நிதிஉதவிகள் செய்திருப்பதால் அந்த நன்றியோடு கணிசமான கிறிஸ்துவர்களின் ஓட்டுகள் தனக்குக் கிடைக்கும் என்று நம்புகிறார். தனிப்பட்ட ரீதியில் டயோசிஸ் நிர்வாகிகளை சந்தித்து தனக்கு ஆதரவு திரட்டுகிறார் மனோஜ் பாண்டியன். அதேபோல பத்து சதவிகித இட ஒதுக்கீடு கொண்டுவந்த மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்து ஏற்கனவே பிள்ளைமார் சங்கத்தினர் அறிவிப்புகள் செய்திருந்தனர். மோடி மீண்டும் பிரதமராக அவர்களின் வாக்குகள் தனக்கு முழுமையாக கிடைக்குமென்று நம்புகிறார் மனோஜ் பாண்டியன்.

அமமுக வேட்பாளர் மைக்கேல் ராயப்பன் ஏற்கனவே ராதாபுரம் எம்.எல்.ஏ.வாக இருந்தவர். மக்களிடம் நன்கு அறிமுகமானவர். அவருக்கு அமமுகவினர் செய்யும் களப்பணிகள் திமுக, அதிமுகவால் உற்றுநோக்கப்படுகின்றன. அமமுகவின் கூட்டணிக் கட்சியான எஸ்டிபிஐ இங்கே பாளையங்கோட்டை மேலப்பாளையம் பகுதியில் இருக்கும் 65 ஆயிரம் முஸ்லிம் வாக்குகளை கணிசமாக அள்ள கடுமையான களப்பணியில் இறங்கியிருக்கிறது.

“திமுகவினர் முஸ்லிம், கிறிஸ்டின் ஓட்டெல்லாம் தங்களுக்கே கிடைக்குனு மெதப்புல இருக்காங்க. 2011, 2014, 2016 தேர்தல்கள்ல எஸ்டிபிஐ தனியா நின்னு மேலப்பாளையம் பகுதியில 7,500க்கும் குறையாம ஓட்டுகள் தொடர்ந்து வாங்கியிருக்கோம். இப்ப தினகரனுக்கான பிஜேபி எதிர்ப்பு இமேஜ், வேட்பாளர் மைக்கேல் ராயப்பனோட அரவணைப்பால முஸ்லிம் வாக்குகளை அமமுகவுக்குக் கொண்டுவருவோம்” என்கிறார்கள் எஸ்டிபிஐ கட்சியினர். இப்படி சொன்னாலும் எஸ்டிபிஐ கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சென்னை மத்திய சென்னைக்கு வேலை செய்யப் போய்விட்டார்கள். இது தவிர ஆலங்குளம் அருகே இருக்கும் கடையத்தில் இருக்கும் இஸ்லாமிய ஓட்டுகளையும் குறிவைத்து அறுவடை செய்ய அமமுகவினர் களமிறங்கி வேலை பார்த்திருக்கிறார்கள். ஆனால் இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதிகளுக்கு திறந்த ஜீப்பில் செல்வதும் வருவதுமாக இருக்கும் திமுக வேட்பாளருக்கும், அமமுக வேட்பாளருக்கும் முஸ்லிம் வாக்குகளை பிரிப்பதில் கடுமையான போட்டி நிலவுகிறது.

திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணிக் கட்சிகள் ஓரளவுக்கு ஒத்துழைத்தாலும் தங்கள் சொந்த பலத்தை நம்பியே களத்தில் நிற்கின்றன. வேட்பாளர்கள் தீவிரமாகப் பணியாற்றினாலும் கடைசி நேர கவனிப்பும் , வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கும் மக்களை கொத்துக் கொத்தாக வாங்கும் பணிகளும் நெல்லை தொகுதிக்குள் தொடங்கிவிட்டன.

குறைந்த வாக்கு வித்தியாசத்திலாவது திமுக வேட்பாளர் ஜெயித்துவிடலாம் என்பது அதிமுகவின் கடைசி கட்ட கரன்சி விநியோகத்துக்கு முன்பான நிலவரம்!

திங்கள், 15 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon