மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 3 ஜூலை 2020

வாரிசு அரசியல்: மோடி கருத்துக்கு ஓபிஎஸ் விளக்கம்!

வாரிசு அரசியல்: மோடி கருத்துக்கு ஓபிஎஸ் விளக்கம்!

வாரிசு அரசியலை ஒழிப்போம் என்று தேனியில் பிரதமர் மோடி ரவீந்திரநாத்துக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தபோது பேசியது குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று விளக்கம் அளித்துள்ளார்.

துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரும் தேனியில் இன்று (ஏப்ரல் 15) செய்தியாளர்களைச் சந்தித்தனர். காங்கிரஸ், திமுக கூட்டணி பொய்ப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம்சாட்டிய ஓபிஎஸ், “ஆட்சியிலிருந்தபோது நாட்டு மக்களுக்கு என்னென்ன திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறார்கள்; என்னென்ன சாதனையை செய்தார்கள் என்பதைச் சொல்லித்தான் கட்சிகள் வாக்கு கேட்க வேண்டும். பொய்யான, உண்மைக்கு மாறான குற்றச்சாட்டுகளை கூறி வாக்கு சேகரிக்கக் கூடாது என இந்தியத் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. தவறான தகவலை தெரிவிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருக்கிறது” என்றார்.

மேகதாட்டுவில் அணை கட்ட ரவீந்திரநாத் மணல் சப்ளை செய்வதாக ஜமக்காளத்தில் வடிகட்டிய ஒரு பொய்யை ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார் என்ற ஓபிஎஸ், “இதுகுறித்து ஈவிகேஸ் இளங்கோவன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கவுள்ளோம். நீதிமன்றத்தில் அவர் மீது வழக்கு தொடரப்படும். தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றத்துக்கும் செல்வோம்” என்றார்.

2016ஆம் ஆண்டு சட்ட மன்றத் தேர்தலில் ரூ.650 கோடி பணம் கொடுத்து அதிமுக தேர்தலில் வெற்றியைக் கொள்முதல் செய்தது என்று தி வீக் ஊடகத்தில் வெளியான செய்தியை மேற்கோள்காட்டி அதிமுக மீது வருமான வரித் துறை நடவடிக்கை எடுக்க மறுத்துள்ளதாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரங்களில் குற்றம்சாட்டி வருகிறார். இதுகுறித்து பதிலளித்த ஓபிஎஸ், “அவர்கள் ஆட்சிக்காலத்தில் செய்த மக்கள் நலத்திட்டங்களோ, நீண்டகாலத் திட்டங்களோ சொல்லுமளவுக்கு எதுவுமே இல்லை. அதனால் இதுபோன்ற பொய்களைப் பரப்புகிறார்கள். ஸ்டாலினின் குற்றச்சாட்டு குறித்து சட்டப்படி ஆராய்ந்து வழக்கு தொடரப்படும்” என்றார்.

தேனியில் ஏப்ரல் 13ஆம் தேதி ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரம் செய்கையில், வாரிசு அரசியலை ஒழிக்க வேண்டும், குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பேசியிருந்தார். மோடியின் இந்தப் பேச்சு ரவீந்திரநாத்துக்கு எதிராக இருக்கிறதே என்று அந்தக் கூட்டத்தில் இருந்தவர்களிடமே சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் மோடியின் அந்தக் கருத்து குறித்து ஓபிஎஸ்ஸிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், “வாரிசாக இருந்தாலும், வாரிசாக இல்லாவிட்டாலும் தகுதியும், திறமையும் இருந்தால், அரசியலில் மக்களுடைய செல்வாக்கைப் பெறுவார்களேயானால் நிலைத்திருப்பார்கள். மக்கள் செல்வாக்கைப் பெறவில்லை என்றால் அரசியலில் அவர்களுக்கு இடம் இல்லை” என்றார்.

திங்கள், 15 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon