மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஜூலை 2020

லாரன்ஸுக்கு சீமான் பதில்!

லாரன்ஸுக்கு சீமான் பதில்!

நடிகர் லாரன்ஸ் வைத்த குற்றச்சாட்டுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்துள்ளார்.

சென்னையில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்ற போது அதற்கு ஆதரவளித்த திரை பிரபலங்களில் நடிகர் ராகவா லாரன்ஸும் ஒருவர். இறுதியில் போராட்டத்தை கைவிடக்கோரி லாரன்ஸ் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேசினார். அப்போது அவர் அரசியல் தலைவர்கள் சிலரை சந்தித்த புகைப்படங்கள் வெளியான நிலையில் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. அப்போது இது தொடர்பாக சீமான் நடிகர் லாரன்ஸை விமர்சித்து பேசினார். பதிலுக்கு லாரன்ஸும் சீமானை விமர்சித்தார். இருவருக்குமிடையேயான கருத்து வேறுபாடு அப்போதிருந்தே தொடர்ந்து வந்த நிலையில் சமூக வலைதளங்களில் நாம் தமிழர் கட்சியைச் சார்ந்தவர்கள் மோசமான வார்த்தைகளில் பதிவிடுவதாக தனது அறிக்கையில் கூறியிருந்தார்.

“நீங்கள் என்னை தவறாகப் பேசியதையும், அதற்கு நான் நாகரீகமாக பதில் சொன்னதையும், முடிந்துபோன ஒரு விஷயமாய் விடாமல் உங்களுடைய ஒரு சில தொண்டர்கள் எனது சேவை சம்பந்தப்பட்ட பதிவுகள் போடப்படும் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் ஆப் போன்ற வலைதளங்களில் கமெண்ட்ஸ் என்கிற பெயரில், தப்புத்தப்பான வார்த்தைகளில் கொச்சையாகவும், அசிங்கமாகவும் நாலாந்தர நடையில் பதிவிடுகிறார்கள். அது எனக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியது” என்று கூறினார்.

மேலும் இந்த விவகாரத்தை இத்துடன் விடாவிட்டால் தான் அரசியலிலும் ஈடுபடுவேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள சீமானிடம் இந்த விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது பேசிய சீமான், “லாரன்ஸ் மீதும் அவருடைய சேவை மீதும் எப்போதும் எனக்கு மதிப்பு உண்டு. என் கட்சியைச் சார்ந்த யாராவது ஒருவர் புரிதல் இல்லாமல் விமர்சித்திருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் அவர் யாரென்று கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

எனக்கும் என் கட்சிக்கும் கெட்டபெயர் உண்டாக்கும் நோக்கத்தில் பலர் சமூக வலைதளங்களில் போலிக் கணக்குகளில் இயங்கி வருகின்றனர். அவர்கள் யாரேனும் கூட இப்படிச் செய்திருக்க வாய்ப்புகள் அதிகம். இருப்பினும் தம்பி லாரன்ஸிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று கூறினார்.

திங்கள், 15 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon