மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 4 ஜூலை 2020

இருபதாயிரம் பேரின் வேலையை காக்க கோரிக்கை!

இருபதாயிரம் பேரின் வேலையை காக்க கோரிக்கை!

இருபதாயிரம் பேரின் வேலையை காப்பாற்றுங்கள் என பிரதமர் மோடியிடம் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. இந்நிறுவனம் செலுத்த வேண்டிய விமான எரிபொருள் கட்டணம் மட்டுமே ஆண்டுக்கு ரூ.7,000 கோடியாக உள்ளது. ஆனால் அதையே செலுத்த முடியாமல் விமான சேவைகளின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைத்து வருகிறது. இதனால் ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் வழங்க வேண்டிய ஊதியத்தைக் கூட வழங்க முடியாமல் தடுமாறி வருகிறது. ஜெட் ஏர்வேஸின் இந்த நிதி நெருக்கடியை சமாளிக்க இந்திய ஸ்டேட் வங்கியிடம் ரூ.1,500 கோடி கடன் பெற்று இந்த சிக்கல்களுக்கு தீர்வு காண கடந்த மாதத்தில் திட்டமிடப்பட்டது.

ஜெட் ஏர்வேஸ் பங்குகளை விற்பனை செய்து கடனை அடைப்பதற்கான முயற்சிகளிலும் இந்திய ஸ்டேட் வங்கி ஈடுபட்டுள்ளது. கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்களை இயக்கி வந்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தற்போது 6 முதல் 7 விமானங்களை மட்டுமே இயக்கி வருகிறது. இந்நிலையில் ஊதிய நிலுவைத் தொகையை கேட்டு ஜெட் ஏர்வேஸின் 1,100க்கும் மேற்பட்ட விமானிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ஜெட் ஏர்வேஸ் விமான ஓட்டிகள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்தப் போராட்டம் குறித்து தேசிய விமானிகள் சங்கத்தின் துணைத் தலைவர் ஆதிம் வாலியானி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், ”ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தொடர்ந்து இயங்க இந்திய ஸ்டேட் வங்கி வழங்குவதாக அறிவித்துள்ள ரூ.1,500 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும். விமானிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். அதுமட்டுமின்றி, விமானத் துறையில் பணியாற்றும் 20,000 பேரின் வேலைகளைக் காப்பாற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் நாங்கள் முறையிட்டுள்ளோம்” என்றார்.

ஜெட் ஏர்வேஸின் விமான ஓட்டிகள் மட்டுமின்றி, பொறியாளர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளுக்கு டிசம்பர் மாதத்திலிருந்து இன்னும் ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 15 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon