மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஜூலை 2020

நாடு தழுவிய கட்சி மநீம: கமல்ஹாசன்

நாடு தழுவிய கட்சி மநீம: கமல்ஹாசன்

நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல், பிரதமரை முடிவு செய்யும் தேர்தல் மட்டுமல்ல; நாம் பெற வேண்டியவற்றை எடுத்துச் சொல்வதற்கான ஒரு வாய்ப்பு என்று கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கரூர் மக்களவைத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பாகப் போட்டியிடுகிறார் டாக்டர் ஹரிகரன். இவரை ஆதரித்து, நேற்று (ஏப்ரல் 15) கரூர் மனோகரா கார்னரில் பிரச்சாரம் செய்தார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன். அப்போது, நேர்மையான, மாற்று அரசியலை முன்னிலைப்படுத்தும் துணிச்சலோடு இருப்பது கரூர் மாவட்டம்தான் என்று அங்கிருந்த மக்களிடையே கூறினார்.

“மக்கள் நீதி மய்யம் நாடு தழுவிய கட்சியாக மாறுவதற்கான சாயல்கள் கரூரில் தெரிகிறது. கரூர் முன்னோடியாக இருந்து தமிழகத்தை வழிநடத்த வேண்டும். வரும் வியாழனன்று புது விவசாயத்துக்கான விதையை நட வேண்டும். இது பிரதமர் யார் என்பதை முடிவு செய்யும் தேர்தல் மட்டுமல்ல; நாம் பெற வேண்டியவற்றை நாடாளுமன்றத்தில் எடுத்துச் சொல்வதற்கான ஒரு வாய்ப்பு இது” என்று அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், ஒரு தேசம் முன்னேற வேண்டும் என்றால் மாநிலங்கள் மாவட்டங்கள் சுயாட்சியாக இயங்க வேண்டும் என்றும், சர்வாதிகாரத்தை இந்தியா ஒருபோதும் ஏற்காது என்றும் கூறினார்.

நேற்று திருச்சி மக்களவைத் தொகுதியிலும் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். அங்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆனந்தராஜா போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து திருச்சி ஜங்ஷன், ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் பகுதிகளில் பிரச்சாரம் செய்தார் கமல்ஹாசன். அரசுப் பள்ளிகளை உலகத் தரம் வாய்ந்ததாக மாற்றுவது, மணல் கொள்ளையைத் தடுப்பது, ஏழ்மையைப் போக்குவது உள்ளிட்ட பிரச்சினைகள் பற்றிப் பேசினார்.

“இது பிரதமரைத் தேர்வு செய்யும் தேர்தல் தானே என்று நினைத்துவிடாதீர்கள். திருச்சி தொகுதியின் பிரதிநிதியை டெல்லிக்கு அனுப்பி வைக்க வேண்டும். யார் பிரதமராக வந்தாலும், நம்முடைய தமிழகத்தை அவர்கள் கவனிக்கிறார்களா என்று தட்டிக் கேட்க வேண்டும்.

கடந்த அரை நூற்றாண்டுகளாக மாறி மாறி கழகங்களுக்கு வாக்களித்து என்ன மாற்றத்தைக் கண்டோம். நல்ல எதிர்காலத்துக்காக உங்கள் ஓட்டுரிமையை ஆயுதமாகப் பயன்படுத்துங்கள். சாதி, மத பேதங்களை மறந்து நாம் அனைவரும் ஒன்றாக நின்றால் இந்தியாவின் தலைவாசலாகத் தமிழகம் மாறும்” என்று தன் பிரச்சாரத்தில் தெரிவித்தார் கமல்ஹாசன். ஸ்ரீரங்கம் திருப்பதி போல மாற வேண்டுமென்று, அவர் தன்னுடைய பேச்சில் குறிப்பிட்டார்.

செவ்வாய், 16 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon