மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 4 ஜூலை 2020

ஈவிகேஎஸ் மீதான வழக்கு விசாரணைக்குத் தடை!

ஈவிகேஎஸ் மீதான வழக்கு விசாரணைக்குத் தடை!

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு எதிரான அவதூறு வழக்கு விசாரணைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ஆம் தேதி திருச்சி அருகே சமயபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், முதல்வர் குறித்து தெரிவித்த கருத்து அவதூறு பரப்பும் வகையில் இருப்பதாகத் திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தமிழக முதல்வர் சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், அந்த அவதூறு வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும், அவதூறு வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் இளங்கோவன் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் நேற்று (ஏப்ரல் 15) விசாரணைக்கு வந்தபோது, முதல்வர் கட்டுப்பாட்டில் உள்ள நெடுஞ்சாலைத் துறை தொடர்பான விவகாரங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடந்து வருவது தொடர்பாகப் பேசியதாகவும், இதில் முதலமைச்சர் பெயருக்கு எவ்விதத்திலும் அவதூறு பரப்பும் வகையில் இல்லை என்றும் இளங்கோவன் தரப்பில் வாதிடப்பட்டது.

அஞ்சல் அலுவலகம் போல அரசு வழக்கறிஞர் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளதாகவும் இளங்கோவன் தரப்பு வழக்கறிஞர் செல்லமுத்து குற்றம் சாட்டினார்.

அரசு தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆஜராகி எவை எவை அவதூறு கருத்து என்ற அடிப்படையில் வரும் என்பது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் விரைவில் தீர்ப்பளிக்க உள்ளதால், அதன்பிறகே இதில் பதிலளிக்க அவகாசம் வேண்டுமெனக் கோரிக்கை வைத்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இளந்திரையன், சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் விசாரணைக்குத் தடை விதித்ததுடன், மனுவுக்குத் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 22ஆம் தேதிக்குத் தள்ளி வைத்தார்.

திங்கள், 15 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon