மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 10 ஜூலை 2020

கள்ளக்குறிச்சி: டெல்லிக்குச் செல்வது யார்?

கள்ளக்குறிச்சி: டெல்லிக்குச் செல்வது யார்?

அண்மையில் மாவட்டமாக உருப்பெற்ற கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் விழுப்புரம் மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்முடியின் மகன் பொன்.கவுதமசிகாமணி போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளராக விஜயகாந்த் மைத்துனர் சுதீஷும் அமமுக வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ கோமுகி மணியனும் முக்கிய வேட்பாளர்களாகக் களத்தில் உள்ளனர்.

தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக 2009ஆம் ஆண்டு மீண்டும் உருவான கள்ளக்குறிச்சி தொகுதி, விழுப்புரத்திலிருந்து சேலம் மாவட்டம் வரை பரவியுள்ளது. விழுப்புரத்தின் ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டத்தில் கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய தொகுதி இது.

இதுவரை நடைபெற்றுள்ள இரண்டு தேர்தல்களில் ஒருமுறை திமுகவும், ஒருமுறை அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளன. 2014ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட காமராஜ், 5,33,383 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இவரை எதிர்த்து நின்ற திமுக வேட்பாளர் மணிமாறன் 3,09,876 பெற்றார். பாஜக கூட்டணியில் இருந்த தேமுதிக 1,64,183 வாக்குகளைப் பெற்றது.

வாரிசு விமர்சனத்தை எதிர்கொண்டு முதன்முறையாகக் களம் காண்கிறார் கவுதமசிகாமணி. கடந்த முறை சேலத்தில் போட்டியிட்ட சுதீஷ், மீண்டும் கள்ளக்குறிச்சி தொகுதிக்குத் திரும்பியுள்ளார். திமுக வேட்பாளரும், அமமுக வேட்பாளரும் உடையார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். தேமுதிக வேட்பாளர் சுதீஷ் நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்.

கள்ளக்குறிச்சி தொகுதியில் உள்ள பாமக பொறுப்பாளர்கள் பலரும் அன்புமணி போட்டியிடும் தர்மபுரிக்கும் கள்ளக்குறிச்சிக்குமாக மாறி மாறி சென்றுவருகிறார்கள். சுதீஷுக்கு உற்சாகமாகப் பணியாற்றிவந்த அதிமுகவினரும் தற்போது சுணங்கிப்போயுள்ளனர். இதுதொடர்பாக தேமுதிக வேட்பாளர் சுதீஷின் சகோதரி பிரேமலதா முதல்வரை நேரடியாகச் சந்தித்து கள்ளக்குறிச்சியில் அதிமுகவும் பாமகவும் சரியாக ஒத்துழைக்கவில்லை, நீங்கள்தான் எப்படியாவது வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். முதல்வரும் சுதீஷை வெற்றி பெற வைப்பது தனது பொறுப்பு என்று ஆறுதல் சொல்லி அனுப்பியுள்ளதாகவும் சொல்கிறார்கள் தேமுதிகவினர்.

தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள சமூக ரீதியான வாக்குகளைப் பெறுவதற்கு முக்கிய மூன்று வேட்பாளர்களும் கணக்குப் போட்டுவருகிறார்கள்.

கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ பிரபு அமமுக ஆதரவு எம்.எல்.ஏ.வாக இருந்துவருவது தேமுதிகவுக்கு மைனஸாக இருக்கிறது. தொகுதிக்குள் இருக்கும் அதிமுக வாக்குகளைக் குறிவைத்து அமமுக காய்நகர்த்தி வருவதால், அதிமுக வாக்குகள் அமமுகவுக்குப் போகிறதே என்று தேமுதிகவினர் கோபப்படுகிறார்கள். அமமுக வேட்பாளர் உடையார் என்பதால் திமுக வேட்பாளருக்குப் போகக்கூடிய உடையார் வாக்குகளை அவர் கணிசமாகப் பிரிப்பார் என்று திமுகவினர் கோபப்படுகிறார்கள்.

இந்த நிலையில் ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் சமுதாய வாக்குகளின் சதவிகிதத்தைப் பார்ப்போம்.

சேலம் மாவட்டத்தில் உள்ள கெங்கவல்லி, ஏற்காடு, ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிகளில் பட்டியலின மற்றும் மலைவாழ் மக்கள் (மலைவாழ் பழங்குடியினர்) வாக்குகள் அதிகமாக உள்ளன. மூன்று சட்டமன்றத் தொகுதிகளும் அதிமுக கைகளில் இருந்தாலும் அதிமுக வாக்குகள் எந்தளவுக்குத் தேமுதிகவுக்கு வரும் என்று தெரியவில்லை எனச் சந்தேகப்படுகிறார்கள் தேமுதிகவினர்.

கள்ளக்குறிச்சியில் வாகை சூடப்போவது பொன்முடி மகனா? விஜயகாந்த் மைத்துனரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

திங்கள், 15 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon