மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 10 ஜூலை 2020

ஸ்டாலினை நம்பாதீங்க: விஜயகாந்த்

ஸ்டாலினை நம்பாதீங்க: விஜயகாந்த்

உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் சென்னையில் நேற்று அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு விஜயகாந்த் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மக்களவைத் தேர்தலுக்காக அனைத்துக்கட்சித் தலைவர்களும் தீவிரமாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று (ஏப்ரல் 16) மாலையுடன் பிரச்சாரம் நிறைவடையவுள்ள நிலையில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை காரணமாகத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடாமல் இருந்து வந்தார். அவருக்குப் பதிலாக அவரது மனைவியும், தேமுதிக பொருளாளருமான பிரேமலதா பிரச்சாரம் மேற்கொண்டார்.

உடல்நலக் குறைவு காரணமாக அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் வீட்டிலிருந்தபடியே தேர்தல் பணிகளைக் கவனித்து வந்தார், எனினும் அவர் பிரச்சாரத்துக்கு வராதது தேமுதிக தொண்டர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம், விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்று அக்கட்சியினர் தெரிவித்திருந்தனர். அதன்படி அவர் நேற்று (ஏப்ரல் 15) மாலை தொண்டர்கள் புடை சூழ சென்னையில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

மத்திய சென்னை மக்களவைத் தொகுதியின் பாமக வேட்பாளர் சாம்பாலுக்கு வாக்கு சேகரித்து வில்லிவாக்கம் பேருந்து நிலையம் அருகே முதல் பிரச்சாரத்தை விஜயகாந்த் தொடங்கினார். வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தில் மாலை 5 மணிக்குத் தொடங்குவதாக இருந்த பிரச்சாரம் தாமதமாக 7 மணி அளவில்தான் தொடங்கியது. விஜயகாந்த் பிரச்சாரத்துக்கு வருவதை முன்னிட்டு மதியம் முதலே ஆர்வத்துடன் தேமுதிக தொண்டர்கள் காத்திருந்தனர். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகு தொண்டர்கள் மத்தியில் விஜயகாந்த் மேற்கொள்ளும் முதல் பிரச்சாரம் இதுவாகும்.

எனினும் மாலை 6.45 மணி அளவில் வில்லிவாக்கம் பேருந்து நிலையத்துக்கு வந்த விஜயகாந்த் இரண்டே வரியில் தனது பிரசாரத்தை முடித்துக்கொண்டார்.

முதலில் குரல் கரகரப்பைச் சரி செய்துகொண்டு, எல்லோருக்கும் பேசுறது கேக்குதா என்று தனது உரையைத் தொடங்கிய விஜயகாந்த், ‘அய்யா ராமதாஸ் சொன்னபடி மாம்பழம் சின்னத்துக்கு ஓட்டு போடணும். நீங்கள் நமது கூட்டணிக் கட்சி வேட்பாளரை ஆதரிக்கணும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. வணக்கம்’ என்று உரையை முடித்தார்.

அவர் பேசியதையடுத்து பிரச்சார வேனை சுற்றியிருந்த தொண்டர்கள் விசில் அடித்தும், ஓட்டுப்போடுவோம் என கூறியும் உற்சாகமடைந்தனர்.

வில்லிவாக்கத்தைத் தொடர்ந்து வடசென்னை மக்களவைத் தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜை ஆதரித்து கொளத்தூர், பெரம்பூர், உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்த அவர், துரைமுருகனுக்குத் தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற வருமான வரித் துறை சோதனை குறித்தும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து, ஸ்டாலினை நம்பி ஓட்டுபோடாதீங்க, அவரை நம்பி ஓட்டுப்போட்டு கஷ்டப்படறீங்க. வேன் மேல நிற்கிறவர்தான் நம்ம வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ். நல்ல உள்ளம் படைத்தவர். அவருக்கு நீங்க ஆதரவு தரணும். மக்களே மறந்துடாதீங்க என தொண்டர்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் பேசினார். “என்னால ஜாஸ்தி பேச முடியாது. அதுக்காக வருத்தப்பட வேண்டாம். நிச்சயமா அடுத்த தடவை வரும்போது நீண்ட நேரம் பேசுவேன்” என்றும் விஜயகாந்த் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தப் பிரச்சாரத்தின்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமியைக் குறை சொல்லி ஸ்டாலின் வெற்றி பெறப் பார்க்கிறார் என்று தெரிவித்த அவர், கொட்டும் முரசு சின்னத்துக்கு ஓட்டுப் போடுங்கள் என்று கூறிவிட்டுக் கிளம்பத் தொடங்கினார்.

திறந்த வேனில் பிரச்சாரத்தில் ஈடுபட்டாலும் அவர், வேனுக்குள் அமர்ந்தபடியே தொண்டர்களை நோக்கி முரசு சின்னத்தைக் காட்டியும் வாக்கு சேகரித்தார். வழி நெடுகிலும் அவரது பிரச்சார வேனுக்கு முன்பு தேங்காய் உடைத்து மக்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.

செவ்வாய், 16 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon