மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 12 ஆக 2020

முல்லை வேந்தன் திமுகவிலிருந்து சஸ்பெண்ட்!

முல்லை வேந்தன் திமுகவிலிருந்து சஸ்பெண்ட்!

முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தனை திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கி அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன், தேர்தல் நேரமான தற்போது திமுகவுக்கு பணியாற்றாமல் தனது பண்ணை வீட்டிலேயே தங்கியிருந்தார். அவரை நேற்று முன்தினம் நேரில் சந்தித்த தருமபுரி மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் அன்புமணி, தனக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். சந்திப்பு தொடர்பாக பதிவிட்ட பாமக வழக்கறிஞர் பாலு, முல்லை வேந்தன் தங்களுக்கு ஆதரவளித்ததாகவே குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் பின்னணியில் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தருமபுரி மாவட்டம், தருமபுரி நகரத்தைச் சேர்ந்த வ.முல்லைவேந்தன் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பிலிருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இன்றைய (ஏப்ரல் 16) முரசொலியில் வெளியாகியுள்ளது.

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நேரத்தில் சீட் கேட்டு விண்ணப்பிக்க ஸ்டாலினை சந்தித்ததாகவும், அங்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் காரணமாகவே தேர்தல் பணிகளிலிருந்து முல்லை வேந்தன் ஒதுங்கியிருப்பதாகவும், ஸ்டாலின் பிரச்சாரத்தையும் புறக்கணித்ததாகவும் ஸ்டாலின் பிரச்சாரம்: புறக்கணித்த முல்லை வேந்தன் -தர்மபுரி சலசலப்பு! செய்தி வெளியிட்டிருந்தோம். அன்புமணியின் சந்திப்பு காரணமாகவே திமுகவிலிருந்து முல்லை வேந்தன் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

செவ்வாய், 16 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon