மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 10 ஜூலை 2020

சிவகங்கைக்கு புதிய தொழிற்சாலைகள்: எச்.ராஜா

சிவகங்கைக்கு புதிய தொழிற்சாலைகள்: எச்.ராஜா

சிவகங்கை மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா போட்டியிடுகிறார். இதற்காக நேற்று (ஏப்ரல் 16) இரவு சிவகங்கை தொகுதிக்குட்பட்ட பொன்னமராவதி பகுதியில் வாக்கு சேகரிக்கும் பணிகளில் எச்.ராஜா ஈடுபட்டார். அப்போது பேசிய ராஜா, “பாஜக ஆட்சிக்கு வந்தால் சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு தொழிற்சாலைகளும், பயிற்சி மையங்களும் அமைக்கப்பட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும். பல ஜவுளி மற்றும் கைத்தறி நெசவு ஆலைகளும் சிவகங்கை தொகுதிக்கு கொண்டுவரப்படும்.

மேலும், திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் உதவியுடன் நமது தொகுதியிலுள்ள 17 ஒன்றியங்கள், மூன்று நகராட்சிகளில் 20 திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டு அதன்மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வசதிகள் உருவாக்கப்படும். ப.சிதம்பரம் அவர்கள் கிராமங்களில் நூறு நாள் வேலைகளில் ஈடுபட்டிருக்கக்கூடிய தாய்மார்களை சந்தித்து, எச்.ராஜாவுக்கு வாக்களிக்காதீர்கள் எனவும், மோடி வந்தால் நூறு நாள் வேலைத்திட்டத்தை நிறுத்திவிடுவார் எனவும் பொய் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

பொய் சொல்வது பெரிய மனுஷனுக்கு அழகல்ல. ஆனால் ப.சிதம்பரம் மெய் சொல்வதில்லை என உறுதியாக இருக்கிறார். மாண்புமிகு அம்மா அவர்களின் அரசும், மத்தியிலே ஆட்சி செய்யக்கூடிய மோடி அரசும் ஏழை எளிய மக்களுக்காகவும், வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்பவர்களுக்காகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளன. மோடி மீண்டும் பிரதமரானால்தான் நலத்திட்டங்கள் தொடரும்” என்று பேசினார்.

செவ்வாய், 16 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon