மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 13 ஜூலை 2020

வீதி வீதியாய் முதல்வர்!

வீதி வீதியாய் முதல்வர்!

மக்களவைத் தேர்தலில் பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது சொந்த ஊரான சேலத்தில் வீதி வீதியாகச் சென்று ஓட்டு வேட்டையாடுகிறார்.

சேலத்தின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் பட்டைக்கோவில் எனப்படும் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் புகழ்வாய்ந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரளும் இந்த கோவிலைச் சுற்றியுள்ள பகுதி பரபரப்பானது மட்டுமல்ல வணிக முக்கியத்துவம் வாய்ந்ததும் கூட. இந்தப் பகுதியில் சேலம் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.ஆர்.எஸ். சரவணனை ஆதரித்து இன்று (ஏப்ரல் 16) காலை வாகனம் ஏதுமின்றி வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார் முதல்வர்.

செல்லும் வழியிலுள்ள கடைவீதிகளில் நின்றிருந்த மக்களிடமும், வியாபாரிகளிடமும் தானே துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தும், தனக்கு முன்பே அறிமுகமாயிருந்தவர்களிடம் சகஜமாக சிரித்துப் பேசியபடியும் வாக்கு சேகரித்தார். ஒரு கடையில் டீ குடித்தும், மற்றொரு கடையில் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சியபடியும் சென்ற முதல்வருக்கு, பொதுமக்கள் வாழைப்பழங்கள் உள்ளிட்ட பொருட்களை கொடுத்தும் உபசரித்தனர்.

பொதுமக்கள் மத்தியில் மைக்கில் பேசிய முதல்வர், சேலம் மாநகராட்சி சீர்மிகு மாநகராட்சியாக திகழ்வதாகவும், அனைத்து நலத்திட்டங்களும் மாநகரில் நிறைவேற்றப்படுவதாகவும் பெருமிதம் தெரிவித்தார். தொடர்ந்து சின்னக் கடைவீதி, முதல் அக்ரஹாரம், பெரிய கடைவீதி வழியாக வாக்கு சேகரித்துவருகிறார்.

பிற்பகலில் திருச்சி மெயின் ரோட்டில் ஜவுளிக்கடை பஸ்டாப்பில் தொடங்கி சீலநாயக்கன்பட்டி வரை நடந்து சென்று அவர் வாக்கு சேகரிக்கிறார். பின்னர் மாலை 5 மணிக்கு பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்.

திமுக தலைவர் ஸ்டாலின் தான் பிரச்சாரத்திற்காக செல்லும் இடங்களில் காலை நடைபயிற்சி செல்லும்போதே வாக்கு சேகரிப்பை தொடங்கிவிடுவார். வேட்பாளர்களை தன்னுடன் அழைத்துக் கொண்டு நகரத்திலுள்ள வீதி வீதியாக சென்று பொதுமக்களையும் வியாபாரிகளையும் சந்தித்து ஆதரவு கோருவார். இதுவரை திறந்த வேனில், பொதுக்கூட்டத்தில் பேசியபடி வாக்கு சேகரித்துவந்த முதல்வர் எடப்பாடியும் தற்போது வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்துள்ளார்.

செவ்வாய், 16 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon