மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 10 ஜூலை 2020

மோடியின் பரிணாம வளர்ச்சி: கூச்சலாக மாறிய தம்பட்டம்!

மோடியின் பரிணாம வளர்ச்சி: கூச்சலாக மாறிய தம்பட்டம்!

விவேக் கணநாதன்

ஆளுங்கட்சி எதை முழக்கமாக முன்னிறுத்துகிறது என்பதைப் பொறுத்தே தேர்தலின் மைய விவாதம் தீர்மானிக்கப்படும். பாஜக இந்த முறை எடுத்துக்கொண்ட முழக்கம் ‘தேசப் பாதுகாப்பு’.

புல்வாமா தாக்குதல், அபிநந்தன் விடுவிப்பு, விண்வெளியில் எதிரி செயற்கைகோளை அழிக்கும் ஆற்றலைப் பெற்றுவிட்டதாக திடீர் தம்பட்டம் எனக் கடந்த 40 நாட்களாக தேசத்தைத் தங்களின் திட்டத்துக்கு இசைவானதாக மாற்ற பாஜக முயன்றுள்ளது. மோடி தன்னைக் ‘காவலாளி’ என்று அறிவித்துக்கொண்டதும், ட்விட்டரில் அத்தனை பாஜக தலைவர்களும் பெயர் மாற்றிக்கொண்டனர். பாஜகவின் தேர்தல் அறிக்கையான ‘சங்கல்ப் பத்ராவும்’ தேசியத்தையும், பாதுகாப்பையுமே முதன்மையாக முன்வைக்கிறது.

இடம் மாறிய பாதுகாப்பு அக்கறை

2014ஆம் ஆண்டு பாஜக தேர்தலைச் சந்தித்த விதத்திற்கும், 2019இல் சந்தித்த விதத்திற்கும் உள்ள வேறுபாடு அதன் தேர்தல் அறிக்கையைப் பார்த்தாலே தெரியும். மோடியை முன்னிறுத்தி ஆட்சிக்கு வரத்துடித்த 2014இல், தேசப் பாதுகாப்பு என்பது வாக்குறுதி பட்டியலில் கடைசியாக இருந்தது. மொத்தம் 42 பக்க தேர்தல் அறிக்கையில், 37ஆவது பக்கத்தில் தான் தேசப் பாதுகாப்பு குறித்துப் பேசப்பட்டிருந்தது. தேசம் மிகப் பாதுகாப்பாக இருப்பதாக ஒருவேளை அன்று பாஜக நினைத்திருக்கலாம்.

ஆனால் 56 அங்குல வீரமிக்க மார்புகொண்ட மோடி, 5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபிறகு, இன்று தேசப் பாதுகாப்பு முக்கியமான பிரச்சினையாக மாறியுள்ளது. 2019 பாஜக சங்கல்ப் பத்ராவில் தேசப் பாதுகாப்பு 4ஆவது பக்கத்திலேயே பேசப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு பாஜக தேர்தல் அறிக்கையில் 4வது பக்கத்தில் இடம்பெற்றிருந்தது என்ன தெரியுமா? வேலைவாய்ப்பு குறித்த வாக்குறுதி !

2014இல் 4ஆவது பக்கத்தில் வைத்து பாஜக முன்னிறுத்திய வேலைவாய்ப்பு குறித்த வாக்குறுதி, 2019 பாஜக தேர்தல் அறிக்கையில், 29ஆவது பக்கத்தில் ‘இளைஞர்களுக்கான வாய்ப்புகள்’ என்பதற்குக் கீழ் ஒரு துணைத் தலைப்பாகச் சேர்க்கப்பட்டுள்ளது. 2014 தேர்தல் அறிக்கையில் பாஜக சொன்ன ‘காங்கிரஸின் வேலைவாய்ப்பில்லா வளர்ச்சி’, இரண்டு கோடி வேலைவாய்ப்பு உருவாக்கம், தொழில்முனைவோர் உருவாக்கம் குறித்து இந்த முறை எந்தத் தகவலும் இல்லை. இந்த முரண்பாட்டுத் தோல்விக்கும், ஏமாற்றுத்தனத்துக்கும் பின்னால் 5 ஆண்டுக் கால வரலாறு இருக்கிறது.

அது தம்பட்டமான “வளர்ச்சி நாயகன்” (விகாஷ் புருஷ்) கூச்சல்போடும் “காவலாளி” (சௌவ்கிதார்) ஆன வரலாறு.

2019 தேர்தல் அறிக்கையை அறிமுகப்படுத்தி பேசிய மோடி, தேசியமே பாஜகவின் முன்னுதாரணம். அனைவரையும் அரவணைத்தல், நல்ல ஆட்சி ஆகியவை எங்கள் நோக்கம் என முழங்கினார். வார்த்தை வள்ளலான மோடி, தான் சொல்லும் வார்த்தைகளுக்கு எப்படி சம்பந்தமே இல்லாமல் நடந்துகொள்வார் என்பதற்கு சாட்சி ‘அரவணைத்தல்’ என்கிற சொல்லும், 2019 தேர்தல் அறிக்கை அட்டைப்படமும்.

மோடியை மட்டுமே முன்னிறுத்திய 2014 பாஜக தேர்தல் அறிக்கையின் அட்டைப்படத்தில், வாஜ்பாய், அத்வானி, ராஜ்நாத் சிங், முரளி மனோகர் ஜோஷி படங்கள் கட்சி முன்னோடிகளின் படங்களாக சேர்க்கப்பட்டிருந்தன. கட்சியின் பிரதான தலைவர்களின் படங்களாக சிவராஜ் சிங் சௌகான், வசுந்தரா ராஜே, மனோகர் பாரிக்கர்,அருண் ஜேட்லி, ராமன் சிங், சுஷ்மா ஸ்வராஜ் போன்றவர்களின் படங்கள் இருந்தன. ஆனால், அவர்கள் யாரும் 2019 தேர்தல் அறிக்கை அட்டைப் படத்திலும் இல்லை, அன்றைக்கு இருந்த அதே கௌரவத்தோடும் இல்லை.

வாஜ்பாய் மறைந்துவிட்டார்; தேர்தல் அறிக்கையிலும் கரைந்துவிட்டார். அத்வானி அவமானப்படுத்தப்பட்டு அவரது காந்திநகர் தொகுதி அமித் ஷாவுக்குக் கொடுக்கப்பட்டுவிட்டது. சுஷ்மா ஸ்வராஜ் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்து கிட்டத்தட்ட தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கிவிட்டார். முதல்வர்களாக இருந்த சிவராஜ் சிங் சௌகான், ராமன் சிங், வசுந்தரா ராஜே ஆண்ட மாநிலங்களான மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர். ராஜஸ்தானில் பாஜக தோற்றுள்ளது. மூவரும் முன்னாள் முதல்வர்கள் ஆகிவிட்டார்கள். பாஜகவின் கோட்டையான போபாலில் காங்கிரஸின் திக் விஜய் சிங் போட்டியிடுகிறார். போட்டியை சமாளிக்க சிவராஜ் சிங் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது!

ராஜ்நாத் சிங்கின் உள்துறை மற்றும் புலனாய்வு தோல்விக்கு புல்வாமா சமீபத்திய சாட்சி. மறைந்த மனோகர் பாரிக்கர் மீது ரபேல் சர்ச்சையுள்ளது. ரஃபேல் ஊழலில் உடன்பாடு இல்லாமலேயே பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மனோகர் மீண்டும் கோவா அரசியலுக்குப் போனார் என சரத்பவார் குற்றம்சாட்டியுள்ளார்.

அருண் ஜேட்லி முழுமையாக நிதித் துறையில் தோற்றுவிட்டார் என கட்சிக்குள் இருக்கும் சுப்பிரமணியசுவாமி சொல்கிறார். (சுப்பிரமணிய சுவாமியின் நிதி அறிவு தனி விவாதத்திற்குரியது) ஜிஎஸ்டி வரி விகிதம், அமலாக்கம் என பல விஷயங்களில் அருண் ஜேட்லி மீது கடும் அதிருப்தி உள்ளது. இதனால், அருண் ஜேட்லிக்குப் பிரச்சாரத்துக்குச் செல்ல மறைமுகத் தடை போடப்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவு நாளில் அவர் இந்தியாவில் இருப்பாரா என்பதே சந்தேகம் என்கின்றனர் டெல்லி பத்திரிகையாளர்கள். 2014இல் அமிர்தசரஸில் போட்டியிட்டு தோற்ற அருண் ஜேட்லி இம்முறை போட்டியிடவில்லை. மீண்டும் ராஜ்யசபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

கட்சியின் அடையாளமாக ஒரே முகம்

2014இல் மோடியைத் தூக்கிச் சுமந்த அத்தனைபேரும் கரை ஒதுங்கியுள்ளனர்; கசங்கி மறைந்துள்ளனர். 2019 தேர்தல் அறிக்கையில் இவர்களின் முகம்கூட முகப்பில் இல்லை.

மோடியின் விகாஷ் புருஷத்தின் புண்ணியம் இது. சங்கல்ப் பத்திரத்தில்கூட அரவணைத்துக்கொள்ள பாஜகவில் இன்னொரு முகம் கிடைக்கவில்லை மோடிக்கு. அவர் பீற்றிக்கொள்ளும் அரவணைக்கும் திறனை, பாஜக தேர்தல் அறிக்கை அட்டைப்படம் சொல்லும் !

தேசப் பாதுகாப்புக்கு அடுத்ததாக பாஜக விவசாயப் பிரச்சினையை முன்னிறுத்தியுள்ளது. 2022க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என பாஜக வாக்குறுதி அளித்துள்ளது. ஆனால், உத்தரப் பிரதேசத்தின் மேற்குப் பகுதியில் உள்ள 8 மக்களவைத் தொகுதிகளில் மட்டும் சுமார் 5 ஆயிரம் கோடி கரும்பு நிலுவைத் தொகை பாஜக அரசாங்கத்தால் கொடுக்கப்படாமல் உள்ளது. பாஜக ஆளும் உத்தராகண்டின் ஹரித்துவார் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி இஷ்வர் சந்த் சர்மா கடன் சுமை தாங்காமல் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தனது தற்கொலை கடிதத்தில் இஷ்வந்த் சர்மா இந்தியாவுக்கு வைத்துள்ள கோரிக்கை “5 ஆண்டுகளில் பாஜக விவசாயத்தை நாசம் செய்துவிட்டது. பாஜகவுக்கு வாக்களிக்காதீர்கள்” என்பதே !

தேசப் பாதுகாப்பு என வீம்பு பேசும் மோடி மகாராஷ்டிராவில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் , “முதன்முறையாக வாக்களிக்கப்போகும் இளைஞர்களுக்கு நான் ஒன்று சொல்கிறேன். உங்கள் வாக்குகளை புல்வாமாவில் மறைந்த வீரத் தியாகிகளுக்காக அளிப்பீர்களா? பாகிஸ்தானில் தாக்குதல் நடத்திய வீரர்களுக்காக அளிப்பீர்களா?” என யாசித்துள்ளார். கூச்சமில்லாத இந்த ஓட்டு யாசகம், இந்திய இறையாண்மை உணர்வுகளைத் திருவோடு ஆக்கியுள்ளது.

புல்வாமா தாக்குதலுக்காக ஓட்டு கேட்டுக்கொண்டே, தேசப் பாதுகாப்புக்கும் பெருமிதம் தேடிக்கொள்ள நினைக்கும் மோடி அரசைச் சகித்துக்கொள்ள முடியாமல் பழம்பெரும் ராணுவ அதிகாரிகள் 156 பேர் ‘ராணுவத்தின் மதிப்பைக் காப்பாற்றுமாறு” முப்படைத் தலைவரான குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளனர். ‘பணியுள்ள ராணுவத்தினர் பேச முடியாது என்பதால் நாங்கள் பேசுகிறோம்” என்கிற ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களின் பொருமல் ஜனநாயக மனசாட்சிக்கான தலைக்குனிவு. உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ‘ராணுவம் என்பது மோடியின் சேனை’ என்ற வார்த்தை இந்திய பாதுகாப்பு கட்டமைப்புக்கான அரசியல் அவமானம். “ராணுவத்தை மோடி சேனை என்பவர்கள் தேசத்துரோகிகள்” எனக் கொதித்திருக்கிறார் ஓய்வுபெற்ற ராணுவ ஜெனரலும், பாஜகவின் இணை அமைச்சருமான வி.கே.சிங்.

தங்களது புலனாய்வு தோல்வியால் புல்வாமாவில் 40 வீரர்களின் சாவிற்குக் காரணமாகி, அவர்கள் பேரைச் சொல்லியே ஓட்டு கேட்கும் பாஜக ஜாலியன் வாலாபாக்கில் உயிர்நீத்த தியாகிகளின் நூற்றாண்டு தினத்தில், அவர்களின் நினைவைப் போற்றும் வகையிலான ‘ஒளி - இசை’ நிகழ்ச்சியை நடத்த ஒரு ரூபாய்கூட நிதி ஒதுக்கவில்லை என்பது பாஜகவின் தேசப்பற்றுக்கு சாட்சி !

நாம் vs அவர்கள்

ஆனால், கூச்சமே இல்லாமல் மோடி மீண்டும் மீண்டும் தேசப் பாதுகாப்பு குறித்து பேசுகிறார். பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளிப்படையாக ஒற்றை தேசியம் குறித்து பேசுகிறது. மோடி தான் பேசும் தேசியத்துக்கு ஒத்தாசையாக வெளிப்படையான வெறுப்பை கக்குகிறார். “ராகுல் தன் தந்தை செய்த பாவங்களை தினமும் கழுவுகிறார்” என்பதில் தொடங்கி அவரது வெறுப்பு மேடைக்கு மேடை கொட்டுகிறது. அந்த வெறுப்பின் வழியே ‘நாம் vs அவர்கள்; என்கிற அரசியலை முன்னெடுக்க மோடி துடிக்கிறார். அந்த அரசியலில்தான் மோடி விரும்பும் தேசியம் இருக்கிறது. எல்லோருடைய மரபணுவுக்கும் ஒரே இனிஷியல் போட நினைக்கும் தேசியம் அது!

மகாராஷ்டிராவில் பேசிய மோடி, “ராகுல் நாம் (இந்துக்கள்) அதிகமிருக்கும் தொகுதியில் போட்டியிடவில்லை. அவர்கள் (இஸ்லாமியர்கள்) அதிகமிருக்கும் வயநாட்டிலேயே போட்டியிடுகிறார்” எனக் கடைசி கூச்சத்தையும் கழுவிக்கொண்டார். 2002 குஜராத் கலவரத்தில் சிக்கி அழிந்த இஸ்லாமியர்கள் தங்கியிருந்த கூடாரங்களைப் பார்த்து, “குழந்தை உற்பத்தி செய்யும் கூடாரம்” என பேசிய மோடியின் நாக்கு மீண்டும் திரும்பியிருக்கிறது. தன் நாக்குக்கு அணிந்துவைத்திருந்த ஆடைகளைக் கழட்டிவீசிவிட்டு தான் யார் என அவர் காட்டிக்கொண்டிருக்கிறார். இந்த நாக்கு கொஞ்சம் ஒரிஜினல் நாக்கு. மோடியின் இந்த நாக்கை நாம் கொஞ்சம் நம்பலாம் !

சமூக பொருளாதார பிரச்சினைகளை கொஞ்சமும் பேசாமல், இல்லாத பிரச்சினைக்கு, செய்யாத செயல்களைச் சொல்லி, பொய்கள் தூக்கலாக மோடி பேசுகிறார்.அவரது தேசியத்தில் இப்போது கூச்சமில்லை; கூச்சல் மட்டும் இருக்கிறது.

மோடியின் கூச்சல் தேசியம் உருவாக்கும் நாம் vs அவர்கள் அரசியலில் ஒரே பிரிவைச் சேர்ந்த இரண்டு குரல்கள் நிற்கின்றன. மோடியின் நாம் என்பதற்குக் கீழாக விவசாயி வேடத்தில் அய்யாக்கண்ணு நிற்கிறார். மோடியின் அவர்கள் என்பதற்குக் கீழாக ஹரித்துவாரில் தற்கொலை செய்துகொண்ட இஷ்வர் சந்த் சர்மா நிற்கிறார். மோடியின் நாம் என்பதற்கு கீழாக பேச முடியாத புல்வாமா ராணுவ உடல்களும், அவர்கள் என்பதற்கு கீழாக ராணுவ மாண்பு விரும்பும் பழம்பெரும் வீரர்களின் குரலும் நிற்கிறது.

செவ்வாய், 16 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon