மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 10 ஜூலை 2020

காதலர்கள் கொலை: தூக்கு தண்டனை நிறுத்திவைப்பு!

காதலர்கள் கொலை: தூக்கு தண்டனை நிறுத்திவைப்பு!

எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் தேனி மாவட்டத்தில் நடந்த காதல் ஜோடி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி திவாகருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது உச்ச நீதிமன்றம்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளி அருவியில் இருந்து கைலாசநாதர் குகைக்கோயிலுக்குச் செல்லும் வழியில், 2011ஆம் ஆண்டு கல்லூரி மாணவி கஸ்தூரி, அவரது காதலன் எழில் முதல்வன் இருவரும் கொலையாகிக் கிடந்தனர். இந்த வழக்கு விசாரணையைக் கையாண்ட சிபிசிஐடி போலீசார், கருநாக்கமுத்தன்பட்டியைச் சேர்ந்த திவாகர் என்ற கட்டவெள்ளையைக் கைது செய்தனர்.

காட்டுக்குள் தனிமையில் இருந்த காதல் ஜோடியை மிரட்டிப் பணம் பறித்த திவாகர், எழில்முதல்வனைக் கொலை செய்துவிட்டு, கஸ்தூரியைப் பாலியல் வல்லுறவு செய்தார். அதன்பின்னர், உண்மையை வெளியே சொல்லிவிடக்கூடாது என்ற நோக்கில் அவரையும் கொலை செய்தார். நீதிமன்ற விசாரணையில் இந்த தகவல்கள் வெளியானது. இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் 8 ஆண்டுகள் நடைபெற்றது. அதன் முடிவில், திவாகருக்கு 7ஆண்டு கடுங்காவல் தண்டனை, ஒரு ஆயுள் தண்டனை மற்றும் தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம். கீழமை நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் சுப்பையா மற்றும் புகழேந்தி ஆகியோர் உறுதி செய்தனர். கடந்த மார்ச் 13ஆம் தேதியன்று நடந்த விசாரணையின்போது, திவாகருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை உறுதி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். தூக்கு தண்டனையை எதிர்த்து, திவாகர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

வரும் ஏப்ரல் 22ஆம் தேதியன்று திவாகருக்குத் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவிருந்தது.

இந்த நிலையில் மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம், அவரது தூக்கு தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது.

செவ்வாய், 16 ஏப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon